“வடபுலத்திலிருந்து
வேலை தேடி
தென்னாடு வந்த
நடுவயதோன் அவன்.
உணவகத்தில்
வட்டில் தட்டு கழுவியதுபோக
எஞ்சிய நேரத்தில்
பணியழுக்கு படிந்த உடையோடு
படிக்கட்டில் அமர்ந்தான்.
அமேசான் அட்டை ஒன்றை
அடியில் வைத்து
சட்டைப் பையிலிருந்து
ஒரு மடிதாள் எடுத்தான்.
இரண்டு உரூபாய்க்கு
விற்கப்படும்
குமிழுருள்கோல்
வைத்திருந்தான்.
மூடியற்ற
அந்த எழுதுகோலால்
அத்தாளின்
முதல் சொல்லை
எழுதத் தொடங்கினான்.
முதல் எழுத்துக்கு
மையுதிரத் தயங்கியதில்
வலப்பக்கம் உதறிக்கொண்டான்.
அதன்பின்
அந்த முதற்சொல்லை
எழுதினான்...
“அன்புள்ள” என்னும் அச்சொல்
அவன் மொழியில் இருந்தது.
அச்சொல்லை
முடிப்பதற்கு முன்பாக
கண்கள் திரண்டிருந்தன.
மார்பு ஏறியிறங்கிற்று.
கண்களைத் துடைத்துக்கொண்டு
எழுதினான்.
இப்போது
எழுத்து தடுபடவில்லை.
என்னென்னவோ எழுதினான்.
பிரிவின் கொடுங்காட்டில்
உறவைத் தேடித் தலையுயர்த்திய
ஒற்றை மான்போல் அவன்
தெரிந்தான்.
இது கைப்பேசிக் காலம்.
இன்னுமா
கடிதத்தில் முத்தங்களை மடித்து
அனுப்புகின்றவன்
இருக்கின்றான்..?
விடை கிடைத்தது.
கைப்பேசி ஒலியலைகள்
இன்னும் தீண்டாத
ஒரு மலைத்திக்கில்
அவன் குடும்பம் இருக்கிறது.
அவன் மனைவியும் இருக்கிறாள்.
மக்களும் இருக்கக்கூடும்.
அவன் வைத்தனுப்பும்
அன்பின் சுமையை
அந்தச் சிறுதாள்
தன் முழுவலிமைகொண்டு
சுமந்து செல்லும்.
அதைப் பிரித்துப் படிக்கும்
அவனுடைய அன்பினளுக்கு
அந்த முதற்சொல்லுக்கே
கண்ணீர் திரளும்..!”
*மகுடேசுவரன்*
சமஸ்கிருத மொழியின்
ReplyDeleteரூபாய், உரூபாய் என்று
தமிழ்ப் படுத்தப்பட்டிருக்கின்றது.
Feelings as sadness...
ReplyDeleteஅருமை.
ReplyDeleteசெந்தமிழில் அருமையான கவிதை. கடித காலத்தில் வாழ்ந்தவர்களுக்கே இதன் உணர்வுகள் முழுமையாகப் புரியும்.
ReplyDeleteஇந்த உணர்வுகளை
ReplyDeleteநான் புரிந்துள்ளேன்.
நன்றி வணக்கம்..!
கவிதை அருமை.
ReplyDeleteபுலம்பெயர்ந்த
ReplyDeleteதொழிலாளர்களின்
வேதனையை
அற்புதமாக
வடித்தெடுத்த
கவிதை.
அழகான
ReplyDeleteஉணர்ச்சிபூர்வமான
வரிகள்.
கடிதம்
எழுதிய காலத்தில்
வாழ்ந்தவர்கள் அறிவர்.
Superb.
ReplyDelete