எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday, 16 August 2020

படித்ததில் பிடித்தவை (“இந்தியா உயிர்த்துடிப்போடு சுதந்திரத்தில் கண் விழிக்கும்! - முதல் சுதந்திர தின நள்ளிரவு” – மணிகண்டபிரபு கட்டுரை)



*இந்தியா உயிர்த்துடிப்போடு சுதந்திரத்தில் கண் விழிக்கும்! - முதல் சுதந்திர தின நள்ளிரவு*

இந்த நள்ளிரவு நேரத்தில் உலகமே உறங்கிக் கொண்டிருக்கையில் இந்தியா சுதந்திரமாக வாழ்வதற்காக விழித்துக் கொள்கிறது   நேரு.

1947ம் ஆண்டு ஜூலை 4ம் தேதி பிரிட்டிஷ் மக்களவையில் பிரதமர் அட்லி இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்கும் மசோதாவை கொண்டுவந்தார். இந்தியப் படைகள் இரு டொமினியன்களாக அறிவிக்கப்படும் என அறிவித்தார். ஜின்னா பாகிஸ்தான் கவர்னராக இருக்க அறிவித்துவிட்டார். நேருவின் வேண்டுகோளிற்கிணங்க மவுண்ட் பேட்டன் இந்திய கவர்னர் ஜெனரலாக இருக்க சம்மதித்தார். நாட்டினைப் பிரிக்க பேட்டனின் நண்பரான ஜான் ரெட் கிளிப் ஜூன் 8ம் தேதி இந்தியா வந்தார். ஐந்து வாரங்களுக்குள் பிரித்துக் கொடுத்துவிட்டு சென்றார்.

ஏன்  ஆகஸ்ட் 15..?

1945ம் ஆக்ஸ்ட் 15ம் தேதி ஜப்பான் சரணடைவதாக அறிவித்த நாள். அங்கு அப்போது கடற்படை தளபதியாக பணியாற்றிய மவுண்ட்பேட்டன் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்க அந்நாளையே தேர்ந்தெடுத்தார். ஆனால் ஜோதிடர்கள் சூர்யநாராயணன் வியாஸ், ஹர்தேவ்ஜி கணிப்புப்படி ஆகஸ்ட் 14ம் தேதி இரவு 12-15 மணிக்கு சுதந்திர நிகழ்ச்சி நடத்த தீர்மானிக்கப்பட்டது.
இரவு 11-51லிருந்து 42 நிமிடங்களுக்குள் நிகழ்ச்சி முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

சுதந்திர  தின  கொண்டாட்டம்

கல்கத்தாவின் வில்லியம் கோட்டை, சென்னை புனித ஜார்ஜ் கோட்டை உட்பட பல முக்கிய இடங்களில் யூனியன் ஜாக் கொடிகள் மாலையில் இறக்கப்பட்டன. எழுதப்பட்ட ஆவணங்கள் மவுண்ட் பேட்டனின் மேசையில் இரவு 11.58க்கு வைக்கப்பட்டது. இறுதிக் கையெழுத்தினை அதில் இட்டார். ஜாக் கொடி வைஸ்ராயின் மாளிகையிலிருந்து இறக்கப்பட்டது.

புதுடெல்லி அரசியல் நிர்ணய சபையின் மேல்மாடத்தில் இளஞ்சிவப்பும் ஊதாநிறமும் கலந்த சங்கினை 12 மணிக்கு முழங்க ஒருவர் தயாராயிருந்தார்.

14 ம் தேதி இரவு மைய மண்டபத்தில் ராஜேந்திர பிரசாத் தலைமையில் 11 மணிக்கு கூட்டம் கூடியது. பெரும் ஆரவாரத்திற்கு மத்தியில் சுதேசா கிருபளானி வந்தேமாதரம் பாடலை உணர்ச்சியோடும் பெருமிதத்தோடும் பாடினார். இரு நிமிடம், இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. ஜவஹர்லால் நேரு பேச ஆரம்பித்தார்

"நீண்ட நெடுங்காலத்துக்கு முன் விதியோடு ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டோம். அந்த ஒப்பந்தத்திலிருந்து நம்மை விடுவித்துக்கொள்ளும் நேரம் வந்துவிட்டது. இரவு 12 மணி அடிக்கும்போது உலகம் உறங்கி கொண்டிருக்கும் நேரத்தில் இந்தியா உயிர்த்துடிப்போடு சுதந்திரத்தில் கண் விழிக்கும்" என உரையாற்றி உறுதிமொழி எடுத்தனர்.
"இன்னல் பட்டு தியாகம் செய்தும் இந்திய மக்கள் சுதந்திரம் பெறும் இந்த புனித தருணத்தில், நான் அரசியல் நிர்ணய சபை உறுப்பினர் என்ற முறையில் இந்த உறுதிமொழியை எடுக்கிறேன். இந்தப் பழம் பெருமை வாய்ந்த பூமி இந்த உலகில் அவளுக்குரிய இடத்தை அடையவும், உலக அமைதியை அடையவும் மனித சமுதாயம் நலமாக வாழவும், அவள் தனது முழு ஈடுபாட்டையும், தொண்டையும் நல்குமாறு செய்யும் நான், மிகவும் பணிவோடு இந்தியா மற்றும் அவளது மக்களின் பணியில் என்னை நான் அர்ப்பணிக்கிறேன் என சுதந்திர தாயை போற்றி வணங்கினார்.

நேரு முன்மொழிந்த தீர்மானத்தை செளத்ரி காலிக்-உஸ்-மான் வழிமொழிந்தார். இந்திய முஸ்லிம்களின் பிரதிநிதியாக பேசினார். இறுதியில் உரையாற்றிய டாக்டர் ராதாகிருஷ்ணன் தீர்க்கதரிசனத்தோடு குறிப்பிட்டதாவது..

"நமக்குள்ள வாய்ப்புகள் பெரிது.. நாம் அதற்கான தகுதியும் திறமையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். உயர் பதவிகளில் ஊழல், உறவினர்களுக்கு சலுகை, அதிகார ஆசை, ஆதாயம் பெறல், கருப்புச் சந்தை ஆகியவற்றின் அடிச்சுவடுகளை அகற்றாவிடில் நிர்வாகத் திறமையும், நல்வாழ்வுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை அதை உறுதி செய்ய முடியாது என்றார்.

பின்னர் பெண்களின் சார்பாக ஹன்சா மேத்தா மூவர்ணக் கொடியை எடுத்து கொடுக்க, இந்தியாவின் கடைசி வைசிராயும் முதல் கவர்னர் ஜெனரல் மவுண்ட்பேட்டன் பிரபு யூனியன் ஜாக் கொடியை இறக்கி விட்டு அதற்கு பதில் சுதந்திர இந்தியாவின் அசோக சக்கரம் பொறிக்கப்பட்ட மூவர்ணக் கொடியை ஏற்றினார். "இந்தியா விடுதலை அடைகிறது" என்ற அரசியல் அமைப்பு சட்டமன்ற பிரகடனத்தில் கையெழுத்திட்டார்.

அதன் பிறகு ராஜேந்திர பிரசாத்தும் நேருவும் முறைப்படி மவுண்ட் பேட்டனை நள்ளிரவு சந்தித்து இலாக்கா விபரங்களை முறைப்படி அளித்தனர்.

நேருவைத் தவிர 13 அமைச்சர்கள் பெயர் இடம்பெற்றிருந்தது. அதில் ஒருவர் சீக்கிய பிரதிநிதி. பின் வாழ்நாள் முழுக்க காங்கிரஸை எதிர்த்த சென்னையைச் சேர்ந்த ஆர்.கே.சண்முகம் செட்டியார், சியாமா பிரசாத் முகர்ஜி மற்றொருவர் அம்பேத்கர்.

நள்ளிரவில் வெற்றிக்களிப்பில் நேரு சொன்னார்.. பத்தாண்டுக்கு முன் லின்லித்கோ பிரபுவிடம் இன்னும் பத்தாண்டுக்குள் நாங்கள் சுதந்திரம் அடைவோம் என கூறினேன். ஆனால் அவர் புன்னகையுடன் என் காலத்தில் மட்டுமல்ல உங்கள் காலத்திலும் சுதந்திரம் பெற முடியாது என கூறியதை தற்போது நினைவு கூர்ந்து கூறினார். நமக்கான பெருந்தொல்லைகள் இனிமேல் தான் தொடங்கவிருக்கின்றன என்ற நிதர்சன வார்த்தையை வி.பி.மேனன் தெரிவித்தார்.

ஆகஸ்ட் 15

மறுநாள் காலை உறுதிமொழி எடுக்கும் விழாவில் தர்பார் மண்டபத்தில் காலை 8-30 மணிக்கு துவங்கியது. மவுண்ட் பேட்டன் கவர்னர் ஜெனரலாக பொறுப்பேற்றார். சிற்றரசர்கள், அரசு தூதுவர்கள் என 500 பேர் குழுமியிருந்த விழாவில் 200 பாதுகாப்பு வீரர்கள் சூழ மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். 5 இலட்சம் மக்கள் டெல்லியில் திரண்டிருந்தனர்.

காலை 10-30 மணிக்கு பேன்ட் வாத்திய முழக்கத்துடன் ஒவ்வொருவரின் தலைக்கு மேல் கொடி உயரத் துவங்கியவுடன் 5 இலட்சம் மக்களின் குரலோசையில் அவ்விடம் அதிர்ந்தது. இவ்வளவு வாழ்த்தொளிகள் பேட்டனுக்கு புதிய அனுபவமாய் இருந்தது.

 மவுண்ட் பேட்டன் உரையை பெரும் ஆரவாரத்துக்கு நடுவில் கேட்டனர். நேரு பெருந்தன்மையுடன் ஆங்கிலேயரின் மனம் புண்படாமல் யூனியன் ஜாக் கொடி மேலும் 12 நாட்கள் பறக்கும் என அறிவித்தார்.

முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

விழா முடிவடைந்து மண்டபத்தில் எல்லை நிர்ணய குழு அறிக்கை மூன்று மணி நேரம் படிக்கப்பட்டது. எவருக்கும் திருப்தி வராததால் பேசி தீர்த்துக்கொள்ள ஏற்பாடானது. எங்கெங்கு காணினும் பிரிவின் ஓலம் கேட்கப்பட்டதால் அதிக உத்வேகம் இல்லாமல் அமைதியாக இருந்தது. பத்து இலட்சம் பாதங்கள் எழுப்பிய புழுதிகள் டெல்லியை மறைத்தன. மாலை 6 மணிக்கு இந்திய கேட்டில் கொடியேற்று விழா என 3 முறை கொடியேற்றப்பட்டது. தலைநகரில் மட்டும் 300 கொடியேற்று விழாக்கள் நடைபெற்றன.

மவுண்ட்பேட்டன் ஒவ்வொரு அறையிலும் இருந்த வைஸ்ராய்களின் பெயரை மாற்றினார். தர்பாரின் மேற்கூரையிலிருந்த பிரிட்டிஷ் அரச சின்னத்தை மறைத்தனர். தான் ஒரு இந்தியராக இருந்தால் எவ்வாறு சேவை செய்வோனோ அவ்வாறு செயல்படுவேன் என உறுதியளித்தார்.

ஆயிரக்கணக்கான குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டனர். பலரின் மரண தண்டனைகள் குறைக்கப்பட்டன.

காந்தி  எங்கே..?

சுதந்திரத்துக்கு இருவாரங்கள் முன்பு காந்தி டெல்லியை விட்டு வெளியேறினார். காஷ்மீரில் நான்கு நாட்கள் இருந்தபிறகு கல்கத்தாவுக்கு ரயில் ஏறினார்.13ம் தேதி மதியம் முஸ்லிம்கள் அதிகம் இருந்த பெலியகட்டாவில் இருந்து கலவரத்தை அடக்க முயன்றார்.

ஆகஸ்ட் 14ம் தேதி மாலை ஐந்து மணிக்கு ஹைதாரி மாளிகையிலிருந்து பிரார்த்தனை கூடம் நோக்கி நடந்தார். கிழக்கு பாகிஸ்தானின் முதன்மை அமைச்சராகவிருந்த காஜா மொகைதீன் பிற்பகலில் டாக்கா நோக்கி சென்றார். எல்லைகள் வரையறுக்கப்படாததாலும், கலவரங்களாலும் நிறைந்திருந்தன வங்கம். தீவிரமாய் உருவாகவிருந்த கலவரத்தை தீரத்துடன் அடக்கினார் காந்தி. பெரிய சந்தோசமின்றி இருந்தார். பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் செய்திகள் அவரை கலக்கமுறச் செய்தன.

15ம் தேதி 24 மணி நேர உண்ணாவிரதம் இருந்தார். கல்கத்தா,பீகார் என வன்முறை பரவிக் கொண்டே இருந்தன. அங்கு அமைதி ஏற்பட ஏழு வாரத்தில் 116 மைல் சுற்றுப்பயணம் செய்தார். இறக்கும் வரை பிரிவினை அவரின் நெஞ்சில் ஒரு முள்ளாகவே இருந்தன.

1947 ம் ஆண்டு ஆகஸ்ட் 14-15 ம் தேதி இந்திய சுதந்திரம் இனக்கலவர வலியோடு பிறந்தது. பொருளாதார, சமூக நிலை மோசமாய் இருந்தது. இருப்பினும் சுதந்திரம் கிடைத்த ஆனந்தம் அதையெல்லாம் ஓரளவு மறைப்பதாய் இருந்தது.

சுதந்திரம் கிடைத்தவுடன் டாக்டர் ராதாகிருஷ்ணன் சொன்ன வரிகள் நிதர்சனமானது "இனி நாம் ஆங்கிலேயர் மீது பழி போட முடியாது, முன்னோர்களை குற்றம் சொல்ல முடியாது. ஏனெனில் நடைபெற இருக்கும் அனைத்திற்கும் நாமே முழுமுதற் காரணமும் பொறுப்பும்" என்றார்.

*மணிகண்டபிரபு*
    (My Vikatan)

No comments:

Post a Comment