எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday, 16 August 2020

படித்ததில் பிடித்தவை (“அவையத்து நாணுதல்” – ஜெயமோகன் கட்டுரை)



*அவையத்து நாணுதல்*

அவையத்து நாணுதல் என்பது ஒரு பண்பு நலனாகவே தொன்றுதொட்டு தமிழ்ச்சூழலில் சொல்லப்பட்டுவருகிறது. அது என்ன? சான்றோர் முன் பிழையாக வெளிப்பட்டுவிடாமலிருக்கும் எச்சரிக்கை நிலை. அவையிலுள்ளோர் முன் குறைவாக தோன்றக்கூடாது என்னும் கவனம். இது கற்றல்நிலையில் மிக அவசியமான ஒன்று. எந்த அவைக்கும் இது பொருந்தும்.

அவைநாணுதல் ஏன் தேவை? அது நாம் மேலும் கற்பதன்பொருட்டே தேவையாகிறது. கல்வியில் நமக்குத் தேவையான முதல் தேவை என்பது நமக்கு என்னென்ன தெரியாது, நம் நிலை என்ன என்னும் தன்னுணர்வுதான். அறியாமையை அறியாதோர் அறிவையும் அறியமுடியாது. அறிவதற்கான கூர்மையும் முயற்சியும் உருவாகவேண்டும் என்றால் நாம் அறியாதவை எவை என்று நமக்குத் தெரியவேண்டும்.

அது ஒருவகை பணிவுதான். நாவை அடக்கிச் செவியை திறந்து வைத்திருத்தல். எங்கும் நம்மை முன்வைப்பதற்குப் பதிலாக நமக்கு கற்பிக்கக்கூடியவர்கள் தங்களை வெளிப்படுத்துவதற்கான இடத்தை அளித்து நாம் கற்பவராக அமர்ந்திருத்தல். பெரிய அவையையும் பெரியவர்களையும் நம் ஆசிரியர்களாக எண்ணுதல். மேலதிகாரிகள் முன் பணிகிறோமே, கொஞ்சம் ஆசிரியர்கள் முன்னும் பணிந்தால்தான் என்ன?

நம் சூழலில் அவைப்பணிவு என்னும் வழக்கம் மிகக்குறைவு. உண்மையில் இதை இன்றைய தலைமுறையில் எவருமே நமக்குச் சொல்லித்தருவதில்லை. நான் முன்பு எழுதிய ஒரு அனுபவக்குறிப்பில் ஒரு நிகழ்வைச் சொல்லியிருந்தேன். அ.கா.பெருமாளுடன் நான் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தேன். எங்கள் பேச்சைக் கேட்ட ஒரு பயணி அ.கா.பெருமாள் யார் என்று கேட்டார். தமிழகத்தின் முதன்மையான ஆய்வாளர்களில் ஒருவர், அரசு விருதுபெற சென்னை செல்கிறார் என்று நான் சொன்னேன். அவர் சுசீந்திரம் ஆலயம் பற்றி எழுதியிருக்கிறார் என்றேன்.

அந்தப்பயணி ஒரு கேள்விகூட அ.கா.பெருமாளின் ஆய்வுகள் பற்றி கேட்கவில்லை. சுசீந்திரம் பற்றி அவருக்குத்தெரிந்த ஆரம்பச்செய்திகளை நீட்டி நீட்டிச் சொல்ல தொடங்கினார். அ.கா.பெருமாளை பேசவே விடவில்லை. ஒரு கட்டத்தில் கடும் சினம் அடைந்த நான் உன் வாழ்நாளில் ஒரு ஆய்வாளரை பார்த்திருக்கிறாயா? அவரிடமிருந்து ஒரு வார்த்தைகூட உனக்கு தெரிந்துகொள்வதற்கு இல்லையா? என்றேன்.

அந்நிகழ்வைப்பற்றி பேசும் ஒருவர் முரட்டடியாக ஏன் ஒரு சாமானியன் பேசக்கூடாதா? என்றெல்லாம் கேட்கலாம்தான். ஆனால் நமக்கு ஏன் ஓர் அவையிலிருந்து, ஓர் அறிஞனிடமிருந்து சிலவற்றை கற்றுக்கொள்ளவேண்டும் என்று தோன்றுவதே இல்லை? ஏன் நாமே பேசிவிடவேண்டும் என்று தோன்றுகிறது? அந்த மனநிலையை நாம் கண்காணிக்கவேண்டும், புரிந்துகொள்ளவேண்டும். நம்மை பாமரர்களாக நிலைநிறுத்துவது அதுதான்.

*ஜெயமோகன்*

No comments:

Post a Comment