எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday, 31 August 2020

படித்ததில் பிடித்தவை (“சும்மாதான் வந்தேன்” – கல்யாண்ஜி கவிதை)



*சும்மாதான் வந்தேன்*

எதையும் சொல்லவில்லை...
எதையும் கேட்கவில்லை...
சும்மாதான் வந்தேன்
என்று சொல்லிவிட்டுப் போனான்..!

காற்றுப் போல...
வெயிலைப் போல...
சும்மாதான் வருகிறவர்கள்
முக்கியம் எனக்கு..!

*கல்யாண்ஜி*

Sunday, 30 August 2020

படித்ததில் பிடித்தவை (“புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே..!” – மு.முருகேஷ் கவிதை)


*புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே..!*

எல்லா மூங்கில்களும்
புல்லாங்குழல் விற்பவன்
கைகளில் சங்கீதமாகிறது..!

பல புல்லாங்குழல்
வாங்கிப் போகிறவர்களின்
கைகளில் மூங்கிலாகின்றன..!

*மு.முருகேஷ்*

Saturday, 29 August 2020

படித்ததில் பிடித்தவை (“சொர்க்கமாக்க..!” – தபூ சங்கர் கவிதை)



*சொர்க்கமாக்க..!*

நீ
நரகத்துக்குச் செல்ல வேண்டும்.
உன்னை விட்டால்
வேறு யாரால் முடியும்
அதை சொர்க்கமாக்க..!

*தபூ சங்கர்*

Friday, 28 August 2020

படித்ததில் பிடித்தவை (“சில்லறை” – மு.முருகேஷ் கவிதை)



*சில்லறை*

டிக்கெட்டுக்காய்
கொடுத்த சில்லறையில்
இருப்பதைஞ்சு காசு
குறைகிறதென
அந்த கிழவியைத் திட்டிக்கொண்டே
நகர்கின்ற கண்டக்டர்...

இன்னமும் தரவேயில்லை
எனக்கான எழுபத்தைந்து காசு
சில்லறைப் பாக்கியை..!

*மு.முருகேஷ்*

Thursday, 27 August 2020

படித்ததில் பிடித்தவை (“நதி” – யாழிசை மணிவண்ணன் கவிதை)



*நதி*

அயல்நாட்டு
அகத்தியனின்
குடுவைக்குள்
சிக்கிக் கொண்டது
குளிர்பானமாய்
எங்கள் நதி..!

*யாழிசை மணிவண்ணன்*

Wednesday, 26 August 2020

படித்ததில் பிடித்தவை (“நிம்மதி” – ஆத்மாநாம் கவிதை)


*நிம்மதி*

கடவுளைக் கண்டேன்
எதையும் கேட்கவே தோன்றவில்லை.
அவரும் புன்னகைத்துப் போய்விட்டார்.
ஆயினும் மனதிலே ஒரு நிம்மதி.

*ஆத்மாநாம்*

Tuesday, 25 August 2020

படித்ததில் பிடித்தவை (“தோசை தெய்வம்” – முகுந்த் நாகராஜன் கவிதை)


*தோசை தெய்வம்*

தோசை என்ன ருசி என்று கேட்டால்
என்ன சொல்ல முடியும்?
என் பாட்டி சுட்ட தோசையா?
என் அம்மா சுட்ட தோசையா?
வெளியூர் பஸ் வழியில் நிறுத்தியபோது
அங்கே சாப்பிட்ட தோசையா?
தோசை என்ன ருசி என்று கேட்டால்
என்ன சொல்ல முடியும்?
அந்தந்த தோசையில் உள்ள ருசியை
அடுத்த தோசையில் தேடுதல் பெரும் பிழை.
ஒவ்வொரு அவதாரத்திலும்
ஒவ்வொரு குணம்.
இரண்டும் ஒரே ருசி என்று
எப்போதும் சொல்லாதே.
தோசை தெய்வம் கோபித்துக்கொள்ளும்..!

*முகுந்த் நாகராஜன்*

Monday, 24 August 2020

படித்ததில் பிடித்தவை (“பொல்லாத வானம்” – நா.காமராசன் கவிதை)



*பொல்லாத வானம்*

இந்தப் பொல்லாத
வானம்
மழையையும்
தூறிக் கொண்டு
துணியையும்
உலர்த்துகிறது..!

*நா.காமராசன்*
(கறுப்பு மலர்கள்)

Sunday, 23 August 2020

படித்ததில் பிடித்தவை (“செருப்பு” – மகுடேசுவரன் கவிதை)


*செருப்பு*

நடுச்சாலையில் கிடந்தது
குழந்தைச் செருப்பு

முயன்று திருப்பியும்
முடியாமல்
வண்டி
அதன்மீது ஏறி இறங்கிவிட்டது…

இன்னும் அடங்கவில்லை
படபடப்பு..!

*மகுடேசுவரன்*

Saturday, 22 August 2020

படித்ததில் பிடித்தவை (“கண்ணாமூஞ்சி” – அ.வெண்ணிலா கவிதை)



*கண்ணாமூஞ்சி*

கருத்த தோலுக்கருகில்
சிவந்தது போலவும்,
சிவந்த தோலுக்கருகில்
கொஞ்சம் கருப்புதானோ எனவும்
கண்ணாமூஞ்சி காட்டுகிறது
என் மாநிறக் கை..!

*அ.வெண்ணிலா*

Friday, 21 August 2020

படித்ததில் பிடித்தவை (“வரிசை” – மணிகண்டபிரபு கவிதை)



*வரிசை*

மோதி மோதி
முடிந்தவரை முன்னே
நகர்த்துகிறோம்
வரிசையை.

எல்லோரையும்
உற்றுப்பார்த்து
முன் நிற்போரை
பின்பற்றி நகர்கிறோம்
எறும்பை போல.

புதிய வரிசை
உருவாகாமல் முடிந்தவரை
கற்போடு காப்பாற்ற
வேண்டியுள்ளது
வரிசையை.

கால் மாற்றியும்
கை கட்டியும்
சுவரையே பார்த்து
யார் நின்றாலும்

கடைசியில் நிற்பவரே
கட்டுக்குலையாமல்
பாதுகாக்கிறார் வரிசையை.

ஒரு வாக்குறுதியை
காப்பது போல்
இறுதிவரை
அடைகாக்க வேண்டியுள்ளது
வரிசையை..!

*மணிகண்டபிரபு*

Thursday, 20 August 2020

படித்ததில் பிடித்தவை (“வெளியே... உள்ளே...” – ராஜா சந்திரசேகர் கவிதை)



*வெளியே... உள்ளே...*

தொடர்பு எல்லைக்கு
வெளியில் இருப்பவர்கள்
கிடைப்பதே இல்லை..!

தொடர்பு எல்லைக்கு 
உள்ளே இருப்பவர்கள்
பேசுவதே இல்லை..!

*ராஜா சந்திரசேகர்*