எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday 12 July 2020

படித்ததில் பிடித்தவை (“அகராதி” – வைத்தீஸ்வரன் கவிதை)



*அகராதி*

அகிம்சை என்றால் என்னவென்று
கேட்டான் என் குழந்தை.

அர்த்தம் எனக்கு எப்போதோ படித்தது
மறந்துபோச்சு.
அக்கம்பக்கத்திலும் ஆருக்கும்
தெரியவில்லை.

ஊருலகத்தில் அப்படி ஒரு
வார்த்தையுண்டா என்று என்னை
வேடிக்கையாகப் பார்த்தார்கள்.

பழங்கால அகராதியைப் புரட்டினால்
அதற்கு நிச்சயம் பொருள் கிடைக்கும் என்று
தூசு தட்டிப்பார்த்தேன்.
நல்லவேளை அகராதி மீதியிருந்தது
செல்லரித்த வரை படமாக.

 “ னா பக்கத்தை
பிரிக்கப் பார்த்தேன்.
ஒட்டிக்கொண்டு கிடந்தது சடையாக
போராடித்தான் அதை
திறக்க முடிந்தது.
ஆனாலும்  ”  வில் ஒரு பொத்தல்.

அறம் அன்பு ஆனந்தம்
ஆறுதல் அமைதி அத்தனையும் பொத்தல்.
அகிம்சை ஹிம்சையாக இருந்தது.

அகராதியை தூக்கி எறிவது தவிர
வழியில்லை அல்லது
எடைக்குப் போட்டுக் கற்பூரம் வாங்கலாம்.

மகனிடம் மறந்துபோன விஷயத்தை
ஒப்புக்கொள்ள வெட்கமாயிருக்கிறது.
பொருளை திரித்துக் கூறுவதும்
ஒரு தலைமுறைக்கு நான் செய்யும் துரோகம்.

மகனே, எனக்குத் தெரிந்தாலும்
உனக்கு நிரூபிக்க முடியாத சூழல் இன்று.
மீண்டும் அதன் பொருளை நீயே கண்டறிந்து கொள் ஆனால் எங்களைப் போல்
தொலைத்துவிடாதே என்று
சொல்லிவைத்தேன்
பொதுவாக.

*வைத்தீஸ்வரன்*



{தந்தையிடம் மகன் அகிம்சை என்றால் என்ன என்று பொருள் கேட்க செல்லரித்த போன அகராதியின் பக்கங்களை திருப்புகிறார் தந்தை. அகிம்சை இருந்த அகராதியின் பக்கம் ஹிம்சையாய் அரித்துக் கிடந்தது.

பொருளை நீயே கண்டு கொள். எங்களைப் போல் தொலைத்து விடாதே என்று மகனிடம் காந்தியை, அகிம்சையை அறிந்தே தொலைத்து விட்டோம் என்ற அவலத்தை நுட்பமாக பதிவு செய்துள்ளார் தன் கவிதையில். 

- சக்கையா.}

No comments:

Post a Comment