எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday, 25 December 2021

படித்ததில் பிடித்தவை (“பணிநீக்க உத்தரவு” – மனுஷ்ய புத்திரன் கவிதை)

 


*பணிநீக்க உத்தரவு*

 

எப்போதும்போல்

வீட்டிற்குக் கிளம்பும்போது

அவளது பணிநீக்க உத்தரவு

தரப்பட்டது.

 

வருத்தமோ

கோபமோ இல்லாமல்

வழக்கமாகத் தரப்படும்

எதையோ ஒன்றைப்போல.

 

அவள் இனி

அங்கே ஒருபோதும்

வரவேண்டியதில்லை என்பது

அவளுக்குச் சொல்லப்பட்டது.

 

தான் இதற்கு ஆயத்தமாக இருக்கவில்லை

என்பதை அவள் சொல்லவிரும்பினாள்.

 

உடனடியாக ஒரு நாளின்

அத்தனை பழக்கங்களையும் மாற்றிக்கொள்வது

சிரமம் என்று சொல்ல விரும்பினாள்.

 

இந்த வேலை தனக்குப் பிடித்திருந்தது என்றும்

இங்கே எளிமையான பல உறவுகள் இருக்கின்றன

என்றும் சொல்ல விரும்பினாள்.

 

ஆனால் அவள் எதையுமே

சொல்லவில்லை.

அதை விவாதிக்கக் கூடாத

புனித ரகசியமாக மாற்றிவிடவேண்டும்

என்று அவளுக்குத் தோன்றியது.

 

ஒரு காதல் கடிதத்தைப்

படிப்பதுபோலவே

அவள் தனது பணிநீக்க உத்தரவைத்

திரும்பத் திரும்பப் படிக்கிறாள்.

தெளிவான வாக்கியங்களில்

புலப்படாத ஒன்று மிச்சமிருப்பதாகவே

அவளுக்குத் தோன்றியது.

 

காமிராவின் லென்சிலிருந்து ஒரு காட்சி

தொலைதூரத்திற்கு விலக்கப்படுவதுபோல

தன்னைச் சுற்றியிருக்கிற

ஒவ்வொன்றும் எவ்வளவு விரைவாக

விலகுகிறது என்பதை

வியப்புடன் பார்க்கிறாள்.

 

சக பணியாளர்கள்

அவள் கண்களைச் சந்திப்பதை

தவிர்க்கின்றனர்.

அவளை

ஆறுதல்படுத்தும் பொருட்டு

கோபமாக எதையோ முணுமுணுக்கின்றனர்.

அது அவர்களுக்குக்கூட

கேட்டதா என்பது சந்தேகம்.

 

பணிநீக்க உத்தரவை

அப்போதுதான் பிடுங்கப்பட்ட

ஒரு தாவரத்தைப் பார்ப்பதுபோல

பார்க்கிறாள்.

அது ஈரமாக இருந்தது.

வெப்பமாக இருந்தது.

வாசனையோடு இருந்தது.

அது உறுதியான

மௌனத்தோடு இருந்தது.

 

ஆனால் அது

உண்மையில்

ஒரு பிடுங்கப்பட்ட தாவரம் அல்ல.

அது தன் கைகளில்

கொஞ்சம் கொஞ்சமாக

வளர்வதை அவள் உணர்கிறாள்.

வீட்டிற்குப் போய் சேர்வதற்குள்

அது உண்மையில் பெரிய மரமாகிவிடும்

என அவளுக்கு மிகவும் அச்சமாகவே இருந்தது.

 

முதல் முதலாக

அந்தியின் மஞ்சள் வெயில்

எவ்வளவு அடர்த்தியானது

என்பதைக் கவனிக்கிறாள்.

 

நாளைக் காலையில்

எவ்வளவு தாமதமாக

எழுந்துகொள்ள முடியுமோ

எழுந்துகொள்ளலாம்.

 

நாளை மதியம்

ஆறிப்போன எதையும்

சாப்பிட வேண்டியதில்லை.

 

செய்யவேண்டியவையோ

செய்யத்தவறியவையோ

ஒன்றுமே இல்லை.

 

துணி துவைப்பதற்காக

விடுமுறை நாட்களுக்குக்

காத்திருக்க வேண்டியதில்லை.

 

திடீரெனெ

அவ்வளவு பிரமாண்டமாகிவிட்ட உலகம்

அவ்வளவு நிறைய கிடைத்த நேரம்

அவ்வளவு பொறுப்பற்ற தன்மை

அவளைக் கிளர்ச்சியடைய வைக்கிறது.

 

வீடுகளை நோக்கி ஆவேசமாக நகரும்

இந்த சாயங்கால மனித வெள்ளத்தினூடே

எத்தனை பேர்

ஒரு பணிநீக்க உத்தரவுடன்

வீடு திரும்புவார்கள்

என்று நினைக்கத் தொடங்கினாள்.

 

தன்னைப்போல

யாரவது ஒருவர்

நாளைக் காலை

இதே பாதையில் வரத் தேவையற்றவர்கள்

இருக்கிறார்களா

என ஒவ்வொரு முகமாக உற்றுப் பார்க்கிறாள்.

 

இது ஒரு சிறிய பிரச்சினை.

ஒரு காபி குடித்தால்

எல்லாம் சரியாகிவிடும் என்று

அவளுக்குத் தோன்றியது.

 

ஒரு நல்ல காபி மட்டுமே

கடவுள்கள், மனிதர்கள் உருவாக்கிய

எல்லாப் பிரச்சினைகளையும்

தீர்க்கக்கூடியது

என்று நினைத்தபடியே

மீண்டும் ஒருமுறை

தனது பணிநீக்க உத்தரவைப்

படிக்கத் தொடங்குகிறாள்..!

 

*மனுஷ்ய புத்திரன்*




8 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *மனுஷ்ய புத்திரன்*
    (பிறப்பு:மார்ச் 15, 1968) என்ற
    பெயரில் எழுதிவரும்
    எஸ். அப்துல் ஹமீது,
    திருச்சி மாவட்டம்,
    துவரங்குறிச்சியில் பிறந்தார்.
    எண்பதுகளின் ஆரம்பத்தில்
    எழுதத் துவங்கிய இவர்
    கடந்த 20 ஆண்டுகளாக
    பத்திரிகை ஆசிரியர்,
    கவிஞர், இலக்கியவாதி,
    அரசியல்வாதி என
    பல்வேறு பணிகளில்
    ஈடுபட்டு வருகின்றார்.
    தற்போது சென்னையில்
    வசிக்கும் இவர் உயிர்மை
    பதிப்பகம், உயிர்மை இதழ்
    போன்றவற்றை நடத்தி
    வருகிறார்.

    கவிதைத் தொகுப்புகள்:

    1. மனுஷ்ய புத்திரன் கவிதைகள் (1983)
    2. என் படுக்கையறையில் யாரோ
    ஒளிந்திருக்கிறார்கள் (1993)
    3. இடமும் இருப்பும் (1998)
    4. நீராலானது (2001)
    5. மணலின் கதை (2005)
    6. கடவுளுடன் பிரார்த்தித்தல்
    (2007)
    7. அதீதத்தின் ருசி (2009)
    8. இதற்கு முன்பும் இதற்கு பின்பும் (2010)
    9. பசித்த பொழுது (2011)
    10. சூரியனுக்கு அருகில் ஒரு வீடு (2013)
    11. அருந்தப்படாத கோப்பை (2013)
    12. தித்திக்காதே [2016]

    ReplyDelete
  2. சீனிவாசன்25 December 2021 at 12:36

    உணர்வுபூர்வமான கவிதை.
    அருமை.
    கவிதையின்
    இரண்டாம் பகுதி
    என்னை போன்றவர்களுக்கு
    பொருந்தும்.

    ReplyDelete
    Replies
    1. இரண்டாம் பாகம்தான்
      கவிதையின் அழகான பகுதி.

      அந்த சூழ்நிலையை
      நல்ல முறையில்
      அனுபவிப்பதற்கும்
      கொடுத்து
      வைத்திருக்க வேண்டும்.

      Delete
    2. சீனிவாசன்25 December 2021 at 18:16

      True sir.
      Self-control and
      Self confidence
      are enough.
      Thanks.

      Delete
  3. ஸ்ரீராம்25 December 2021 at 18:10

    மிக அருமை.
    பணி ஓய்வு பெற்றவர்களின்
    மனநிலை கூட சில நாட்களுக்கு
    இப்படித்தான்!

    அந்த சூழ்நிலையை
    மனது எதிர்கொள்ளும்
    விதத்தில் தான் அது
    வரமாகவோ சாபமாகவோ
    சம்பந்தப் பட்டவர்களுக்கு
    மாறுகிறது.

    ReplyDelete
  4. செல்லதுரை25 December 2021 at 18:13

    கவிதை மிகவும் அருமை.

    ReplyDelete
  5. நரசிம்மன் R.K27 December 2021 at 12:52

    அருமையான பதிவு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete