*கால்களின் ஆல்பம்*
“ஆல்பம் தயாரிக்கிறேன்
கால்களின்
ஆல்பம்.
எப்போதும்
முகங்களுக்கு
மட்டும்தான்
ஆல்பமிருக்க
வேண்டுமா..?
திட்டமாய்
அறிந்தேன்
எண்சான்
உடலுக்குக்
காலே
பிரதானம்.
படிகளில்
இறங்கும் கால்கள்.
நடனமாடும்
கால்கள்.
பந்துகளையோ
மனிதர்களையோ
எட்டி
உதைக்கும் கால்கள்.
கூட்டத்தில்
நெளியும் கால்கள்.
பூஜை
செய்யப்படும் கால்கள்.
புணர்ச்சியில்
பின்னும்
பாம்புக்
கால்கள்.
கறுத்த
வெளுத்த சிவந்த
நிறக்குழப்பத்தில்
ஆழ்த்துகிற
மயிர்
மண்டிய வழுவழுப்பான
கால்கள்.
சேற்றில்
உழலும் கால்கள்.
தத்துகிற
பிஞ்சு கால்கள்.
உலகளந்த
கால்கள்.
அகலிகையை
எழுப்பிய கால்கள்.
நீண்ட
பயணத்தை நடந்த
சீனன்
ஒருவனின் கால்கள்.
பாதம்
வெடித்த கால்கள்.
மெட்டி
மின்னுகிற கால்கள்.
ஆறு
விரல்களுள்ள கால்கள்.
எனக்கு
மிக நெருக்கமான ஒருத்திக்குப்
பெருவிரல்
நகம் சிதைந்த
நீளமான
கால்கள்.
குதிக்கிற, ஓடுகிற, தாவுகிற,
விதவிதமாய்
நடக்கிற,
(ஒருவர்கூட
மற்றவரைப் போல் நடப்பதில்லை)
பாடல்களுக்கு
தாளமிடுகிற,
நீந்துகிற
மலையேறுகிற,
புல்வெளிகளில்
திரிகிற,
தப்பியோடுகிற,
போருக்குச்
செல்கிற,
(படைவீரர்கள்
கால்கள் உண்மையானதல்ல)
நேசித்தவரை
நாடிச் செல்கிற,
சிகரெட்டை
நசுக்குகிற,
மயானங்களிலிருந்து
திரும்புகிற,
விலங்கு
பூட்டப்பட்ட,
பெருவிரல்கள்
சேர்த்துக் கட்டப்பட்ட,
வாகனங்களை
ஸ்டார்ட் செய்கிற,
வரிசையில்
நிற்கிற,
தையல்
எந்திரத்தில் உதறுகிற,
சுருங்கிய
தோலுடைய,
நரம்புகள்
புடைத்த,
சிரங்கு
தின்ற,
குஷ்டத்தில்
அழுகிய,
முத்தமிட
தூண்டுகிற கால்கள்.
யாரைப்
பார்த்தாலும்
நான்
பார்ப்பது கால்கள்.
ஒட்டுவேன்
என்
கால்கள் ஆல்பத்தில்
எல்லாக்
கால்களையும்.
பெட்டிக்கடியில்
ஒளித்து
வைத்துவிடுவேன்
அன்னியர்
பார்த்துவிடாமல்
என்
போலியோ கால்களை மட்டும்..!”
*மனுஷ்ய புத்திரன்*
#ஆசிரியர் குறிப்பு#
ReplyDelete*மனுஷ்ய புத்திரன்*
(பிறப்பு:மார்ச் 15, 1968) என்ற
பெயரில் எழுதிவரும்
எஸ். அப்துல் ஹமீது,
திருச்சி மாவட்டம்,
துவரங்குறிச்சியில் பிறந்தார்.
எண்பதுகளின் ஆரம்பத்தில்
எழுதத் துவங்கிய இவர்
கடந்த 20 ஆண்டுகளாக
பத்திரிகை ஆசிரியர்,
கவிஞர், இலக்கியவாதி,
அரசியல்வாதி என
பல்வேறு பணிகளில்
ஈடுபட்டு வருகின்றார்.
தற்போது சென்னையில்
வசிக்கும் இவர் உயிர்மை
பதிப்பகம், உயிர்மை இதழ்
போன்றவற்றை நடத்தி
வருகிறார்.
கவிதைத் தொகுப்புகள்:
1. மனுஷ்ய புத்திரன் கவிதைகள் (1983)
2. என் படுக்கையறையில் யாரோ
ஒளிந்திருக்கிறார்கள் (1993)
3. இடமும் இருப்பும் (1998)
4. நீராலானது (2001)
5. மணலின் கதை (2005)
6. கடவுளுடன் பிரார்த்தித்தல்
(2007)
7. அதீதத்தின் ருசி (2009)
8. இதற்கு முன்பும் இதற்கு பின்பும் (2010)
9. பசித்த பொழுது (2011)
10. சூரியனுக்கு அருகில் ஒரு வீடு (2013)
11. அருந்தப்படாத கோப்பை (2013)
12. தித்திக்காதே [2016]
அருமை
ReplyDeleteமிகவும் அற்புதமான சிந்தனை.
ReplyDeleteகவிதை மிக அருமை.
கவிஞருக்கு பாராட்டுகள்.
கவிதை மிக அருமை.
ReplyDeleteகால்களின் வர்ணணை
ReplyDeleteபிரமிப்பில் ஆழ்த்துகிறது.
மிக அருமை.
கவிதை மிக அருமை.
ReplyDeleteகவிஞருக்கு பாராட்டுக்கள்.