எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday, 27 May 2020

படித்ததில் பிடித்தவை (“கோடைக்கவிதை” – இரா.பூபாலன் கவிதை)


*கோடைக்கவிதை*

உடலெங்கும் கசகசத்தது
அசூயைக் கிளறி
வழிந்தபடியிருக்கிறது கோடை.

எனது வெள்ளரிப்பிஞ்சுகள்
காய்ந்து விட்டன.
எனது இளநீர்க்குலைகள்
கருகி விட்டன.
எனது சாலைநிழல்கள்
வெட்டி வீழ்த்தப்பட்டன.
நான் இந்த கோடையை
சபித்துக் கொண்டே
இருக்க பழகிக் கொண்டிருக்கிறேன்.

பாட்டன் இந்தக் கோடையை
பனைநுங்கின் கண்களை
பிதுங்கி எடுத்து எறிந்தான்.

தாத்தா இந்தக் கோடையை
மாந்தோப்பின் மத்தியில்
புறத்தரைகளில் அமர்ந்து கொண்டு
தென்னங்கீற்றில்
விசிறி முடைந்து
வீசி எறிந்தான்.

அப்பன் தன் கடைசி
குலை இளநீரை
வெட்டியிறக்கி பிள்ளைகளின் தாகம்
தீர்க்க தந்து விரட்டினான்.

எங்கள் நிலங்களின்
நடுவயிற்றில்
கருத்த நீறல் கோடுகளென
தார்ச்சாலைகள் பெருத்து விரிந்துவிட்ட
எம் நகரத்தில்
கரியமிலவாயுவைக்
கக்கிக் கொண்டு
எனது வாகனத்தை
விரட்டிக் கொண்டிருக்கிறேன் நான்.
தூரத்தில் கானல்நீர்
அசைந்து கொண்டிருக்கிறது.”

      *இரா.பூபாலன்*

No comments:

Post a Comment