எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday, 31 May 2020

படித்ததில் பிடித்தவை (“நினைவோ ஒரு பறவை” – சிவா கவிதை)


 *நினைவோ ஒரு பறவை*

அந்த இறுதி சந்திப்புக்குப் பிறகு
உறுதி செய்துகொண்டேன்
உன்னைப்பற்றிய நினைவுகளை
என்னை மறந்தும் எண்ணிப் பார்ப்பதில்லையென

இருந்தும்
பெருமழை விட்டப் பிறகான
பராமரிப்பில்லா தெருவைப்போல
நினைவுநீர் குட்டைகள்
மனமெங்கும் தேங்கி நிற்கிறது...
ஆனால் எதிலும் கால் பதிக்க துணிவில்லை
ஏதோ ஒரு குட்டையின் ஆழம்
என்னை உள்ளிழுத்துவிடுமோ என..!”   

               *சிவா*

Saturday, 30 May 2020

படித்ததில் பிடித்தவை (“மீண்டு வாழவிருக்கிறது ஒரு பறவை” – சிவா கவிதை)


*மீண்டு வாழவிருக்கிறது ஒரு பறவை*
       
ஆகப்பெருஞ்சுமை
அதுவெனயெண்ணி
தன் மென்சிறகைப்
பெருவெறுப்பில்
பிய்த்தெறியும்
பறவையினெதிரில்,

ஒற்றைச் சிறகொன்று
மட்டுமது கொண்டு
தன்கடுஞ்சிறை தப்பும்
பறவையின் மீது
கண்பார்வைபட்ட தருணத்தில்
இதுவரை பிய்த்துத் துப்பிய
நம்பிக்கைகளைப்
பொறுக்கியெடுத்து
அதுமுதல் மீண்டு
வாழவிருக்கிறது
முதல் பறவை..!”

          *சிவா*

Friday, 29 May 2020

படித்ததில் பிடித்தவை (“யாராவது பார்த்தீங்களா..?” – பா.ராஜாராம் கவிதை)

யாராவது பார்த்தீங்களா..?

போய் சேர்ந்ததும்
லெட்டர் போடுங்க…”
என்கிற குரலை
இங்கதான் வச்சேன்.

யாராவது
பார்த்தீங்களா சார்..?

   - பா.ராஜாராம்.

Thursday, 28 May 2020

படித்ததில் பிடித்தவை (“சிரிக்கிற குழந்தை” – ஆத்மார்த்தி கவிதை)



சிரிக்கிற குழந்தை

எல்லாத் தகவல்களை
அழித்த பின்னர்
முன் திரையில்
கொள்ளை
அழகுகாட்டிச்
சிரிக்கிற
குழந்தையின் புகைப்படத்தை
என்னசெய்வதென்று
விழிக்கிறான்
செல்பேசியைக் களவாடியவன்..!

-         ஆத்மார்த்தி.

Wednesday, 27 May 2020

படித்ததில் பிடித்தவை (“கோடைக்கவிதை” – இரா.பூபாலன் கவிதை)


*கோடைக்கவிதை*

உடலெங்கும் கசகசத்தது
அசூயைக் கிளறி
வழிந்தபடியிருக்கிறது கோடை.

எனது வெள்ளரிப்பிஞ்சுகள்
காய்ந்து விட்டன.
எனது இளநீர்க்குலைகள்
கருகி விட்டன.
எனது சாலைநிழல்கள்
வெட்டி வீழ்த்தப்பட்டன.
நான் இந்த கோடையை
சபித்துக் கொண்டே
இருக்க பழகிக் கொண்டிருக்கிறேன்.

பாட்டன் இந்தக் கோடையை
பனைநுங்கின் கண்களை
பிதுங்கி எடுத்து எறிந்தான்.

தாத்தா இந்தக் கோடையை
மாந்தோப்பின் மத்தியில்
புறத்தரைகளில் அமர்ந்து கொண்டு
தென்னங்கீற்றில்
விசிறி முடைந்து
வீசி எறிந்தான்.

அப்பன் தன் கடைசி
குலை இளநீரை
வெட்டியிறக்கி பிள்ளைகளின் தாகம்
தீர்க்க தந்து விரட்டினான்.

எங்கள் நிலங்களின்
நடுவயிற்றில்
கருத்த நீறல் கோடுகளென
தார்ச்சாலைகள் பெருத்து விரிந்துவிட்ட
எம் நகரத்தில்
கரியமிலவாயுவைக்
கக்கிக் கொண்டு
எனது வாகனத்தை
விரட்டிக் கொண்டிருக்கிறேன் நான்.
தூரத்தில் கானல்நீர்
அசைந்து கொண்டிருக்கிறது.”

      *இரா.பூபாலன்*

Tuesday, 26 May 2020

படித்ததில் பிடித்தவை (“சிறுமி அதல்யாவின் விடுமுறை” – அம்சப்ரியா கவிதை)


*சிறுமி அதல்யாவின் விடுமுறை*

விடுமுறையை
தனக்கு பிடித்த களிமண்ணாக்கி
இரண்டு குதிரை பொம்மை செய்கிறாள்.
ஒன்றில் அவளும்
இன்னொன்றில் தோழியுமாக
ஊரெல்லாம்
சுற்றி வருகிறார்கள்.

குதிரையை பிறகு பறவைகளாக்கி
ஆளுக்கொன்றில் அமர்ந்து
தூரத்து மலையைப் பார்க்க
மகிழ்ச்சியாக புறப்படுகிறார்கள்.
விடுமுறையை மதியத்திற்கு மேல்
சற்றுநேரம்
வேலை செய்யுமாறு
பணிக்கிறாள்.
அதுவும் கட்டளைக்கு
கட்டுப்பட்டு சேவை செய்கிறது.

ஆற்றுக்கு விடுமுறையை அழைத்துச் செல்கிறாள்.
சிலசொற்கள் உச்சரித்து
மீன்களாக மாற்றி
தண்ணீரில் விடுகிறாள்.
நீந்திக் கழிக்கும் அழகில்
இந்த நாளை இனியதாக்குகிறாள்.

சற்றுநேரம் கதை சொல்லுமாறு கெஞ்சுகிறாள்.
தான் யாரையெல்லாம் மகிழ்வித்தோமென்று
ப்ரியமாக கதை சொல்லத்
தொடங்குகிறது விடுமுறை.

இரவாகி விட்டது
போய்வரட்டுமா? என்று
கெஞ்சத் தொடங்குகிறது விடுமுறை.
போகத்தான் வேண்டுமாவென
கண்ணில் நீர்ததும்ப
நோக்குகிறாள்.

இரண்டு அழுகைகளையும்
கண்ணுற்றும்
மனமிரங்காத இரவு
இரக்கமற்று விடியத்
தொடங்குகிறது.

      *அம்சப்ரியா*

Monday, 25 May 2020

படித்ததில் பிடித்தவை (“யாழினியின் காடே அதிர்ந்தது” – மு.அறவொளி கவிதை)


*யாழினியின் காடே அதிர்ந்தது*

மான் கூட்டம் புலியைத் துரத்த

சிட்டுக்குருவி
சிங்கத்தின் பிடரிக்குள்
புகுந்து விளையாட

கரடி கழுத்தில்
குரங்கொன்று
பேன் பார்க்க

முதலையின் முதுகில்
முயல்குட்டி பயணிக்க

சாப்பிட வாடி
என்ற அதட்டலில்
யாழினியின் காடே
அதிர்ந்தது..!”

           *மு.அறவொளி*