எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday, 9 May 2022

படித்ததில் பிடித்தவை (“கௌரி அம்மாள்” – ஷங்கர்ராமசுப்ரமணியன் கவிதை)

 


*கௌரி அம்மாள்*

 

மேல்மாட முகப்பில்

கிருஷ்ணர் பொம்மை பதித்த

தன் வீட்டைவிட்டு வெளியேறும்போது

கௌரி

கௌரியம்மாள் ஆகவில்லை.

கணித ஆசிரியராக பணிபுரிந்த

ஜோசப் தெய்வநாயகத்தின்

மனைவியாகி சிலகாலத்துக்குள்ளேயே

கௌரி

கௌரி அம்மாளாகி போனாள்.

அம்மாள் என்னும் வார்த்தையைச் சேர்த்து

மூப்பு அவளைச் சீக்கிரமே அழைத்துக்கொண்டது.

 

கௌரி

கௌரி அம்மாள் ஆனபோது

கைகள் தடிமனாகி

அவளின் பழைய ரவிக்கைகளை இறுக்கின.

முட்டைக்கண்ணாடியும் முகத்தில் ஏறி

வயதைக் கூட்டியது.

கௌரி

கௌரி அம்மாள் ஆகும் நாட்களில்

கிருஷ்ணர் பொம்மை பதித்த வீட்டை நோக்கி

பதில்களைச் சொடுக்கி

சொடுக்கி

கௌரியம்மாளின் முகம் கண்டிப்பானதாய்

மாறிவிட்டது.

 

அப்போது

ஜோசப் தெய்வநாயகம்

லேட் ஜோசப் தெய்வநாயகம் ஆனார்.

விடிவிளக்குகள்

மின்னி மின்னி எரியும்

பகல் இருட்டில

கிறிஸ்துவும்

ஜோசப் தெய்வநாயகமும்

படங்களில் ஆசீர்வதிக்க

அறைகளின் மௌனத்துடனேயே

பூஞ்சையாய் வளர்ந்தாள்

மூத்தமகள் ராணி.

ஆய்ந்த மீன் தலைகளைத் தின்ன

ஞாயிற்றுக்கிழமைகளில்

பூனைகள் வரும்போது

கௌரி அம்மாளுக்கு தன் தனிமை

நினைவுக்கு வரும்.

 

ஜோசப் தெய்வநாயகத்தின் மறைவுக்குப்பின்

மூன்றே மூன்றுமுறைதான் சிரித்தாள்.

கௌரி அம்மாள்

தெருவிலேயே

முதல்முறையாக

அவள் வீட்டுக்கு நவீனக்கழிப்பறை

கட்டப்பட்டபோது...

ராணியின் திருமணப்புகைப்படத்தில்

[தலைமையாசிரியையின் இறுக்கமான சிரிப்பு]...

ஜோசப் தெய்வநாயகத்தின் சாடையைக் கொண்டு

பிறந்த

ராணியின் இரண்டாவது மகனை

கையில் வாங்கும்போது...

 

கௌரி

கௌரி அம்மாளாகிப்போனதும்

பால்யத்தில் விளையாடிய

கிருஷ்ணனை பாதியில் விட்டதும்

விடிவிளக்கின் மின்னும்

கிறிஸ்துவுக்கு இன்னும் வருத்தம்தான்..!

 

*ஷங்கர்ராமசுப்ரமணியன்*

{ஆயிரம் சந்தோஷ இலைகள் 

கவிதைத் தொகுப்பிலிருந்து.}



5 comments:

  1. யதார்த்தம்

    ReplyDelete
  2. வெங்கட்ராமன், ஆம்பூர்9 May 2022 at 09:05

    👏👏💐💐🙏🏻🙏🏻

    ReplyDelete
  3. சிவபிரகாஷ்9 May 2022 at 12:34

    வித்தியாசமா இருக்குது.

    ReplyDelete
  4. சத்தியன்9 May 2022 at 14:11

    👌🏻👌🏻🙏

    ReplyDelete
  5. அருமை

    ReplyDelete