எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday, 16 March 2022

படித்ததில் பிடித்தவை (“கற்பிதங்கள் பொய்யாக்கப்படுகிறது” – கா.ரஹ்மத்துல்லாஹ் கவிதை)


 

*கற்பிதங்கள் பொய்யாக்கப்படுகிறது*

 

குப்பைகள்

நிறைந்த நிழற்கூடமொன்றில்

அழுக்கானப் பெண்ணொருத்தி

உணவருந்திக் கொண்டிருக்கிறாள்.

 

ஓய்வின்றி வாகனங்கள்

மாயமாய்ப் பறந்துகொண்டிருக்கும்

இச்சாலையில் குழந்தையோடு வந்த

தம்பதிகள் தவறி விழுந்துச் சிதற

 

யாரும்

பக்கத்தில் வரவில்லை.

நின்ற இடத்திலிருந்து

நூற்றிஎட்டுக்கான அழைப்பினை

அழைத்துக் கொண்டிருந்தனர்.

 

அவள் மட்டும்

எச்சில் கை கழுவ மறந்து

ஓடிவந்து

எழமுடியாமல் தவித்தவரை

தூக்கி அமரவைக்க

ஒருபுறம் மூர்ச்சையுற்றுக் கிடந்தது

குழந்தை.

 

வாரித் தூக்கி

அழுக்கு மார்பில் அணைத்தபடி

நிழற்கூடம் புகுந்து

நெகிழிப் போத்தலில் மீதமிருந்தத்

தண்ணீரை தெளித்தெழுப்பி

வாயில் வைத்துப் புகட்டுகிறாள்.

 

சற்றுத் தெளிவுற்றக் குழந்தை

அழுகைக்கும் குழப்பத்திற்கும் இடையிலான

முகபாவனையை உதிர்க்கிறது.

 

பாவம்

அது கேட்டக் கதைகளிலும்

அது பார்த்தக் கார்ட்டூன் சேனலிலும்

தேவதைகளை இப்படிக் காட்டியதில்லை.

 

ஆம்...

காலங்காலமானக் கற்பிதங்களில் ஒன்று

இது போன்றுதான்

உடைத்தெறிந்துப் பொய்யாக்கப்படுகிறது..!

 

 *கா.ரஹ்மத்துல்லாஹ்*


7 comments:

  1. சத்தியன்16 March 2022 at 07:21

    கவிதை மிக அருமை.
    கவிஞருக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
  2. ஸ்ரீராம்16 March 2022 at 08:14

    ஒருவருடைய
    புறத்தோற்றத்திற்கும்
    அக அழகிற்கும்
    துளியும் சம்பந்தமில்லை
    என்பதை மிக அழகாக
    எடுத்துரைக்கும் கவிதை.

    ReplyDelete
  3. ஜெயராமன்16 March 2022 at 11:10

    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  4. செல்லதுரை16 March 2022 at 11:11

    கவிதை நன்று.

    ReplyDelete
  5. வெங்கட்ராமன், ஆம்பூர்16 March 2022 at 14:08

    கவிஞருக்கு பாராட்டுகளும்.
    வாழ்த்துகளும் நன்றியும்.

    ReplyDelete
  6. அம்மையப்பன்16 March 2022 at 16:03

    கவிதை அருமை.

    ReplyDelete