எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday, 25 April 2021

படித்ததில் பிடித்தவை (“பழைய பேப்பர்” – மனுஷ்ய புத்திரன் கவிதை)

 


*பழைய பேப்பர்*

 

எதற்காக ஓராண்டுக்கு

முந்தைய பழைய பேப்பரை

போட்டுவிட்டுப் போகிறாய்..?”

 

பையன் என்னை

பயத்துடன் பார்த்தான்.

இல்லண்ணா

தேதிகூட பாருங்க

இன்னைக்கு தேதிதான்.”

 

பொய் சொல்லாதே

அதே தலைப்புகள்

அதே செய்திகள்

போனவருடம்

ஒருவரி மாறாமல்

இதையேதான் படித்தேன்...

 

மருந்துகள் இல்லைகள்

படுக்கைகள் இல்லை

ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் இல்லை…

படுக்கைகளாக மாற்றப்படும்

ரயில் பெட்டிகள்

ஊரடங்கு

இரவில் நடமாடக்கூடாது

கடற்கரைகளில் அனுமதி இல்லை

ஊர் திரும்பும் வடமாநில தொழிலாளிகள்

தேர்வுகள் தள்ளி வாய்ப்பு

நோயாளிகள் அதிகரிப்பு

சாவு அதிகரிப்பு

மருந்து வாங்கியதில் ஊழல்

வதந்திகளை பரப்பாதீர்கள்

அரசு விரைந்து செயல்பட கோரிக்கை

தடுப்புப் பகுதிகள்

மக்கள் ஒரு போருக்கு தயாராக

பிரதமர் அழைப்பு...

 

ஒன்றுகூட மாறவில்லை

ஒரு எழுத்துக்கூட மாறவில்லை

நான் இன்னும் எவ்வளவு காலம்

துரதிஷ்டம் பிடித்த

இந்த பழைய பேப்பரை படிக்கவேண்டும்..?”

 

பேப்பர் போடும் பையன்

இன்றைய பத்திரிகையில் வந்திருந்த

ஒரு விளம்பரத்தைக் காட்டினான்

பாருங்கள்

நாளை அறிமுகமாகப்போகும்

புது மாடல் செல்போன் விளம்பரம்

இப்போதாவது நம்புங்கள்

இது புதுப்பேப்பர்தான் என்று..!”

 

எனக்கு குழப்பமாக இருந்தது.

 

*மனுஷ்ய புத்திரன்*




2 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *மனுஷ்ய புத்திரன்*
    (பிறப்பு:மார்ச் 15, 1968) என்ற
    பெயரில் எழுதிவரும்
    எஸ். அப்துல் ஹமீது,
    திருச்சி மாவட்டம்,
    துவரங்குறிச்சியில் பிறந்தார்.
    எண்பதுகளின் ஆரம்பத்தில்
    எழுதத் துவங்கிய இவர்
    கடந்த 20 ஆண்டுகளாக
    பத்திரிகை ஆசிரியர்,
    கவிஞர், இலக்கியவாதி,
    அரசியல்வாதி என
    பல்வேறு பணிகளில்
    ஈடுபட்டு வருகின்றார்.
    தற்போது சென்னையில்
    வசிக்கும் இவர் உயிர்மை
    பதிப்பகம், உயிர்மை இதழ்
    போன்றவற்றை நடத்தி
    வருகிறார்.

    கவிதைத் தொகுப்புகள்:

    1. மனுஷ்ய புத்திரன் கவிதைகள் (1983)
    2. என் படுக்கையறையில் யாரோ
    ஒளிந்திருக்கிறார்கள் (1993)
    3. இடமும் இருப்பும் (1998)
    4. நீராலானது (2001)
    5. மணலின் கதை (2005)
    6. கடவுளுடன் பிரார்த்தித்தல்
    (2007)
    7. அதீதத்தின் ருசி (2009)
    8. இதற்கு முன்பும் இதற்கு பின்பும் (2010)
    9. பசித்த பொழுது (2011)
    10. சூரியனுக்கு அருகில் ஒரு வீடு (2013)
    11. அருந்தப்படாத கோப்பை (2013)
    12. தித்திக்காதே [2016]

    ReplyDelete
  2. Express Praise.

    ReplyDelete