எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday 19 April 2021

படித்ததில் பிடித்தவை (“தீராத கணக்கு” – யூமா வாசுகி கவிதை)

 


*தீராத கணக்கு*

 

எதையோ நினைத்தபடி

எங்கோ சென்றுகொண்டிருக்கும்போது

சட்டென்று உன் குழந்தையுடன் வழிமறித்து

பிச்சை என்று கேட்டாய்.

தெய்வமே அந்தக் குழந்தை

என்னமாய்ச் சிரித்தது...

அதற்கு மாறாக நீ என்

சட்டையைப் பிடித்து உலுக்கியிருக்கலாம்.

 

ஓரிரவில் சாக்கடையோரம்

கொசுக்கள் குதறும் வதையில்

துடித்துப் புரளும் குழந்தையைக் காட்டி

அய்யா என யாசித்தாய்.

உறக்க மயக்கத்தில் அழச் சக்தியற்று அது

எவ்வளவு ஈனமாய் சிணுங்கியது...

அதற்குப் பதில் நீ என்னை

அடித்துப் பிடுங்கியிருக்கலாம்.

 

பஸ்ஸுக்குக் காத்திருக்கும் கூட்டத்திடையில்

உன் குழந்தை என் கால்களைத் தொட்டு

கை மலர்த்தும்படிச் செய்தாயே,

ஓ… பரிதாபமாய் முகம் காட்ட அது அப்போது

எவ்வளவு பாடுபட்டது...

அதைவிடவும் நீ என்னை

முகத்தில் உமிழ்ந்து கேட்டிருக்கலாம்.

 

இறுகிய முகத்தின் கண்ணீர்த் தடத்துடன்

அனாதைக் குழந்தையை அடக்கம் செய்யவென்று

இரந்து நிற்கிறாய் இன்று.

புவி சுமக்க முடியாத பாரமாக இது

எவ்வளவு அமைதியாகக் கிடக்கிறது...

 

அய்யோ அய்யோ என்று

பதறி அழிந்தபடியே

ஒவ்வொரு அடியையும் எடுத்துவைத்து

உன்னைக் கடந்து போகின்றேன்.

 

தாயே என்னைக் கொன்று பழி தீர்க்க

ஏன் உனக்குத் தெரியவில்லை..!

 

*யூமா வாசுகி*




6 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *யூமா. வாசுகி*

    தி. மாரிமுத்து
    (பிறப்பு: சூன் 23, 1966) என்பவர்
    ஒரு தமிழக எழுத்தாளர்.
    நுண்கலையில் பட்டயக் கல்வி
    பெற்றுள்ள இவர்
    “யூமா. வாசுகி” எனும்
    புனைப்பெயரிலும் எழுதி
    வருகிறார்.

    இவர் தஞ்சாவூர்
    மாவட்டத்திலுள்ள
    பட்டுக்கோட்டையில் 1966
    சூன் 23 அன்று பிறந்தவர்.
    ”உனக்கும் உலகுக்கும்”,
    “தோழமை இருள்”,
    “அமுத பருவம்” எனும்
    கவிதை நூல்களையும்,
    “உயிர்த்திருத்தல்” எனும்
    சிறுகதைப் படைப்பையும்,
    “மோர்னிங் திக்கெட்ஸ்” எனும்
    ஓவியப் படைப்பையும்
    வழங்கியிருக்கிறார்.
    இவர் எழுதிய
    "ரத்த உறவு" எனும் நூல்
    தமிழ்நாடு அரசின் தமிழ்
    வளர்ச்சித் துறையின் 2000 ஆம்
    ஆண்டுக்கான சிறந்த நூல்களில்
    புதினம் எனும் வகைப்பாட்டில்
    பரிசு பெற்றிருக்கிறது.
    மலையாள எழுத்தாளர்
    ஓ. வி. விஜயனின்
    ‘கஸாக்குகளின் இதிகாசம்
    என்ற புதினத்தைத் தமிழில்
    மொழிபெயர்த்ததற்காக, 2017
    ஆண்டுக்கான சாகித்ய அகாடமி
    விருது பெற்றார்.

    சிறுகதைத் தொகுப்பு:

    1. உயிர்த்திருத்தல் - 2001
    2. தூயகண்ணீர் (சிறார் கதை)
    - 2019

    கவிதைத் தொகுப்புகள்:

    1. தோழமை இருள்
    2. இரவுகளின் நிழற்படம்
    3. அமுதபருவம்
    4. வலம்புரியாய் அணைந்ததொரு
    சங்கு

    மொழி பெயர்ப்புகள் :

    1. சிங்கிஸ் ஐத்மாத்தவின்
    சிவப்புத் தலைக்குட்டையணிந்த
    பாப்ளார் மரக்கன்று,
    2. ஆண்டர்சன் கதைகள்
    3. ஜோனதன் ஸ்விஃப்ட்டின்
    கலிவரின் பயணங்கள்
    4. எஸ். சிவதாஸின்
    ‘மாத்தன் மண்புழுவின்
    வழக்கு' (மலையாளத்திலிருந்து).
    5. ஓ. வி. விஜயனின்
    ‘கஸாக்குகளின் இதிகாசம்'
    (மலையாளத்திலிருந்து).

    ReplyDelete
  2. கவிதை அருமை.

    ReplyDelete
  3. சத்தியன்19 April 2021 at 07:31

    வார்த்தைகள் இல்லை.

    ReplyDelete
  4. J. Senthil Kumar19 April 2021 at 07:54

    அருமையான கவிதை.

    ReplyDelete
  5. கெங்கையா19 April 2021 at 10:38

    கவிதை அருமை.

    ReplyDelete
  6. ஸ்ரீராம்19 April 2021 at 11:18

    கவிதையின் சாரம்
    நெஞ்சை பிழிகிறது.
    தான் வாழ குழந்தையை
    இழிவு படுத்தும்
    தாயின் செயல்கள்
    கண்டு கையால் ஆகா
    சினம் வருகிறது.

    ReplyDelete