எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday, 27 April 2021

படித்ததில் பிடித்தவை (“காரணம்” – வத்ஸலா கவிதை)

 


*காரணம்*

 

அம்மா

அண்ணன் மனைவி

சிநேகிதி

அலுவலகத்தில் அடுத்த சீட்டுக்காரர்

எல்லோரும் கேட்டார்கள்

ஏன் வந்து விட்டாய்?

அடித்தானா?

குடித்தானா?

இன்னொன்று வைத்திருந்தானா?

அப்படி அவன் என்னதான் செய்தான்?

 

என் ஊதியம் தீர்ந்த பின்

குழந்தையின் பால் பவுடர் தீர்ந்த போது

காலி ஒருவன் என்னை அசிங்கமாக

வருணித்தபோது

மகனின் சுரம் கஷாயத்திற்கு

கட்டுபடாமல் போனபோது

வீட்டு சொந்தக்காரர் காலி செய்ய

நோட்டீஸ் கொடுத்தபோது

நான் மார்வலியால் துடித்தபோது

இப்படி பல சமயங்களில்

அவன் ஒன்றுமே செய்யவில்லை..!

 

*வத்ஸலா*




Monday, 26 April 2021

படித்ததில் பிடித்தவை (“அந்நிய வானம்” – அ.வெண்ணிலா கவிதை)

 


*அந்நிய வானம்*

 

ஜன்னலோர இருக்கைக்கு

அடுத்ததே என்றாலும்

அந்நியப்பட்டுப் போகிறது

வானம்..!

 

*அ.வெண்ணிலா*




Sunday, 25 April 2021

படித்ததில் பிடித்தவை (“பழைய பேப்பர்” – மனுஷ்ய புத்திரன் கவிதை)

 


*பழைய பேப்பர்*

 

எதற்காக ஓராண்டுக்கு

முந்தைய பழைய பேப்பரை

போட்டுவிட்டுப் போகிறாய்..?”

 

பையன் என்னை

பயத்துடன் பார்த்தான்.

இல்லண்ணா

தேதிகூட பாருங்க

இன்னைக்கு தேதிதான்.”

 

பொய் சொல்லாதே

அதே தலைப்புகள்

அதே செய்திகள்

போனவருடம்

ஒருவரி மாறாமல்

இதையேதான் படித்தேன்...

 

மருந்துகள் இல்லைகள்

படுக்கைகள் இல்லை

ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் இல்லை…

படுக்கைகளாக மாற்றப்படும்

ரயில் பெட்டிகள்

ஊரடங்கு

இரவில் நடமாடக்கூடாது

கடற்கரைகளில் அனுமதி இல்லை

ஊர் திரும்பும் வடமாநில தொழிலாளிகள்

தேர்வுகள் தள்ளி வாய்ப்பு

நோயாளிகள் அதிகரிப்பு

சாவு அதிகரிப்பு

மருந்து வாங்கியதில் ஊழல்

வதந்திகளை பரப்பாதீர்கள்

அரசு விரைந்து செயல்பட கோரிக்கை

தடுப்புப் பகுதிகள்

மக்கள் ஒரு போருக்கு தயாராக

பிரதமர் அழைப்பு...

 

ஒன்றுகூட மாறவில்லை

ஒரு எழுத்துக்கூட மாறவில்லை

நான் இன்னும் எவ்வளவு காலம்

துரதிஷ்டம் பிடித்த

இந்த பழைய பேப்பரை படிக்கவேண்டும்..?”

 

பேப்பர் போடும் பையன்

இன்றைய பத்திரிகையில் வந்திருந்த

ஒரு விளம்பரத்தைக் காட்டினான்

பாருங்கள்

நாளை அறிமுகமாகப்போகும்

புது மாடல் செல்போன் விளம்பரம்

இப்போதாவது நம்புங்கள்

இது புதுப்பேப்பர்தான் என்று..!”

 

எனக்கு குழப்பமாக இருந்தது.

 

*மனுஷ்ய புத்திரன்*




Saturday, 24 April 2021

படித்ததில் பிடித்தவை (“மையப்புள்ளி” – அ.வெண்ணிலா கவிதை)

 


*மையப்புள்ளி*

 

நானும் அந்த நாயும்

குழந்தைக்குச் சோறூட்டும்

மையப்புள்ளியில்

சந்தித்துக் கொள்கிறோம்.

 

கையில் எடுக்கும்

ஒவ்வொரு கவளமும்

உள்ளிறங்க வேண்டும் 

என நானும்

கீழே விழ வேண்டும்

என நாயும்

அவரவர் எதிர்பார்ப்பில்..!

 

*அ.வெண்ணிலா*




Friday, 23 April 2021

படித்ததில் பிடித்தவை (“பட்டாம்பூச்சி” – மகுடேசுவரன் கவிதை)

 


*பட்டாம்பூச்சி*

 

நெற்றியில்

பட்டுச் சிதறிப் பறந்தது

பட்டாம்பூச்சி.

 

அந்தச் சிறுமோதலில்

எனக்கே கொஞ்சம் வலித்தது.

 

எப்படித்தான்

அந்தச் சிற்றுடலாள்

வலி தாங்கிக்கொண்டு பறந்தாளோ..!

 

*மகுடேசுவரன்*




Thursday, 22 April 2021

படித்ததில் பிடித்தவை (“எங்க ஊர்” – கவி வளநாடன் கவிதை)


*எங்க ஊர்*

 

நீங்கள் பயணித்து வந்த அந்த

புறநகர்ச் சாலையோரம்

யாரும் கவனிக்காத

சவலைப்பிள்ளையைப்போல்

பெயர்ப் பலகை கூட இல்லாமல்

ஒரு ஊர் கடந்திருக்குமே...

அதுதான் எங்க ஊர்..!

 

*கவி வளநாடன்*




Wednesday, 21 April 2021

படித்ததில் பிடித்தவை (“கதவு” – மதார் கவிதை)

 


*கதவு*

 

இரண்டாவது பக்க விளிம்பிலிருந்தும்

மூன்றாவது பக்க விளிம்பிலிருந்தும்

நான்காவது பக்கம் நிறைவுற்றபோது

மரம் உறுதி செய்தது

தான் ஒரு கதவென..!

இந்த வேலை

இந்த மினுமினுப்பு

பயன்பாடு

எதுவுமே கதவுக்கு நிறைவில்லை.

எதிரே இருக்கும் மரத்தை

பார்த்தபடி இருப்பதைத் தவிர.

நான் கதவைத் திறந்து

மரத்தின் கீழ் விளையாடும்

சிறுவர்களைப் பார்த்தபடி இருப்பேன்.

கதவு மரத்தையும்

நான் சிறுவர்களையும்

அப்படி பார்த்துக்கொண்டிருந்த ஒருநாள்

காற்றடித்து

கதவும் நானும் ஒருவரையொருவர்

பார்த்துக்கொண்டோம்.

ஞாபகப்படுத்திச் சொன்னேன்

மரம்தானே நீங்க?”

கதவு சொன்னது

, குட்டிப் பயலே..!

 

*மதார்*

(வெயில் பறந்தது)




Tuesday, 20 April 2021

படித்ததில் பிடித்தவை (“கண்களின் வழியே” – கமலநாதன் கவிதை)

 


*கண்களின் வழியே*

 

புகுந்த வீட்டில்

முதல் நாள்

இரவு

கிடைத்த

ஸ்பரிசத்தில்

என்னை நான்

இழந்து விட்டேன்.

 

விடியலில்

கிடைத்த முத்தம்

சொன்னது:

 

எல்லோருக்கும்

எது பிடிக்குமென்று

அறிந்து

நடந்து கொள்..!’

 

அதற்குப் பிறகு

பல விடியல்கள்.

எல்லோருக்கும்

எது பிடிக்குமென்று

நான்

அறிந்து கொண்டேன்.

 

எனக்குப் பிடித்தது

எதுவென்று மட்டும்

எவரும்

கேட்கவில்லை.

 

இப்போது

எனக்குப் பிடித்தது

எதுவென்று

எனக்கே தெரியவில்லை.

 

அவளுக்குப்

பிடித்தது

எதுவென்று

கேளுங்கள்.

அப்போது தான்

அவள் உயிர் பிரியும்.

 

நலிந்து கிடந்த

என் உடலருகே

எவரோ சொன்னார்கள்.

 

அம்மா..!.

உனக்குப் பிடித்தது

என்னம்மா..?’

இறுதி மூச்சு

விலகுவதற்காக

என் மகன் கேட்டான்.

 

ஒரு நாளேனும்

நான் நானாக

வாழ்ந்திட நினைத்தேன்.

மனது கூற நினைத்தது

கண்ணீராக மட்டுமே

வெளி வந்தது.

 

கண்ணீர் அடங்கும் நேரம்

எவரோ

சொல்லிக்

கொண்டிருந்தார்கள்.

பாருங்கள்

கண்களின் வழியே

இவள் உயிர்

பிரிகிறதென்று..!

 

*கமலநாதன்*