எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday, 6 December 2020

*அன்பின் கிளைகள்*

 


எவ்வளவோ சொல்லியும்

கேட்கவில்லை...

அவரது வீட்டு எல்லைக்குள்

கிளைகள் பரப்பிய

மாமரத்தை வெட்டச்சொல்லி

அடம் பிடித்தார்

பின் வீட்டுக்காரர்..!

 

இலைகள் விழுவதாகவும்...

கொசுக்களும், பூச்சிகளும்

படையெடுப்பதாகவும்...

பறவைகள் எச்சமிடுவதாகவும்...

அடுக்கிக் கொண்டே போனார்

வெட்டுவதற்கான காரணங்களை.

 

உயிர் வாழ பிராண வாயு

கொடுக்கும் அற்புதமும்...

வெயிலின் உக்கிரத்தை

குறைக்கும் மகத்துவமும்...

இலைகள் மக்கி 

மண்வளமாகும் மகிமையும்...

காயும், கனியும்

பகிர்ந்துக் கொள்ளும்

அண்டை வீட்டின் அருமையும்...

எடுத்து சொன்னப் பிறகும்

ஏற்கவில்லை அவர் மனம்.

 

இரண்டாம் சனிக்கிழமை

அவர் மனதை மாற்ற

கடைசி முயற்சியும்

தோல்வியுற்றதால்

ஞாயிற்றுக்கிழமை

அவர் வீட்டு பக்கம் செல்லும்

கிளைகளை மட்டும்

வெட்டுவதற்கு ஏற்பாடு

செய்யப்பட்டது மனமில்லாமல்.

 

கிளைகள் வெட்டப்பட்ட

மரத்தைப் பார்க்க

சங்கடமாகவே இருந்தது.

துக்கத்தில் அன்றிரவு

தூக்கம் வரவில்லை.

 

அடுத்த நாள் காலை

மாமரத்தை வருத்தத்துடன்

அன்னார்ந்து பார்த்தேன்.

கம்பீரமாக நின்றது

அந்த மரம்.

 

வேலைக்கு செல்லும் போது

ரயில் நிலைய வாயிலில்

கைகளை இழந்த

பிச்சைக்காரரைப்

பார்க்கும் போது

ஏனோ பின் வீட்டுக்காரர்

நினைவுக்கு வந்தார்..!”

 

*கி.அற்புதராஜு*


7 comments:

  1. அருமை தங்கள் தாக்கம்

    ReplyDelete
  2. ஸ்ரீராம்6 December 2020 at 08:21

    தன் குழந்தையை தன் கையாலே பின்னப்படுத்திய வேதனை மரத்தை வளர்த்தவருக்கு. பிச்சைக்காரரின் உண்மையில் அதனை வெளிப்படுத்தியது மிக அழகு.

    ReplyDelete
  3. Very nice ��

    ReplyDelete
  4. கவிதா ராணி31 December 2020 at 18:53

    உண்மையில் ஊனமானவர் பின் வீட்டுக்காரர்தான் என பிச்சைக்காரர் மூலம் தெளிவுப்படுத்தியது அருமை..!

    ReplyDelete