எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday, 21 December 2020

படித்ததில் பிடித்தவை (“மாயக் குதிரை” – ஸ்ரீரங்கம் மாதவன் கவிதை)

 


*மாயக் குதிரை*

 

பாதாள பைரவியின் மாயக்குதிரை

என் வீட்டுக்கு வந்தது.

 

பேசும் திறனுள்ள

நினைக்குமிடம் பறந்து செல்லும் குதிரை.

 

 நீ விரும்புமிடத்தில் விட்டுவரக் கட்டளை

வா போகலாம் என்றது.

 

மழைக்காலமாயிற்றே ஸ்வெட்டரெல்லாம்

அணிந்துகொண்டு

மகிழ்ச்சியாக ஏறிக்கொண்டேன்.

 

எங்கேயென கேட்டபடி பறந்தது வானத்தில்.

 

காசா பணமா

இந்திரலோகம் போகச் சொன்னேன்.

 

அடுத்த நிமிடத்தில் அடைந்துவிட்டோம்.

 

ரம்பை ஊர்வசி நடனமெல்லாம்

இரண்டாம் நொடியில் போரடித்தது.

கிளம்பிவிட்டோம்.

 

செவ்வாய்க்கு செல்வோமென்றேன்.

சென்று சேர்ந்ததும்

திரும்பச்சொன்னேன்.

தண்ணீரில்லை.

 

பிரபஞ்சத்தின் பல இடங்களுக்குச்

சென்று பார்வையிட்டோம்.

எங்கும் மனிதர்களில்லை.

புறப்பட்டோம்.

 

கைலாச சிவனும்

பாற்கடல் பெருமாளும்

பெருந்தியானத்தில் கரைந்திருக்க

காத்திருக்கப் பொறுமையின்றி

புறப்பட்டுவிட்டோம்.

 

சலிக்காமல் சுமந்தது குதிரை.

 

எதற்கும் பூமியிலேயே தேடுவோமென்று

பிரான்ஸுக்கு போகச் சொன்னேன்.

 

பழைய ஆட்கள் யாருமில்லை.

 

ரோமாபுரி நகரத்தில்

போப்பும் பிஸியாயிருந்தார்.

 

நாகூர் தர்க்காவில்

நொடிகள் சில நின்றுவிட்டுக்

குதிரையிடம் சொன்னேன்

காலத்தைக் கடந்திடுவோம் என்று.

 

சரியென்று அழைத்துச் சென்றது

அலெக்ஸாண்டரின் போர்முகாமிற்கு.

 

கடுங்காய்ச்சலில் சுரணையற்றுப் படுத்திருந்த

அவன் வாள் தொட்டுப்பார்த்தேன்.

அத்தனையொன்றும் கூர்மையாயில்லை.

 

போதகர் புத்தரின்

ஆசையறுக்கும் தம்மபதம்

அத்தனை சுவாரஸ்யாமாயில்லை.

 

ராஜராஜ சோழனை அரண்மனையில் சந்தித்தோம்.

மணிமுடி பாரமென்று புலம்பினான்.

 

சாணக்கியனை சந்தித்தபோது

சபதத்தில் தீவிரமாயிருந்தான்.

 

அந்நிய மண்ணில்

காந்தியிடம் சொன்னேன்

நீங்கள்தான்

பின்னாளில் எங்கள் தேசத்தந்தையென.

 

ரயிலிலிருந்து இறக்கிவிட்டார்களென்று

சோகமாகச் சொன்னார்.

 

சுஜாதாவைப் பார்க்க

ஸ்ரீரங்கம் சென்றோம்.

சிறுவனாக நண்பர்களோடு

கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்.

 

குதிரை இப்போது பேச்சை நிறுத்தி

பைத்தியம்போல பார்க்கத் தொடங்கியது என்னை.

 

இலங்கைக்குச் சென்றோம்.

போர்நிறுத்தும் உத்தேசத்தில்

பயனின்றிக் கிளம்பிவிட்டோம்.

 

எதிர்காலம் போவென்றேன்.

எங்கும் மரமில்லை. நீரில்லை உணவில்லை.

ஆக்ஸிஜன் மாஸ்க்குகளோடு

அலைந்து கொண்டிருந்தார்கள் அனைவரும்.

 

வேண்டாம் செல் நிகழ்காலமென்றேன்.

 

குதிரை சொன்னது

மூடிக்கொள் உனது கண்களை.

நான் அழைத்துச் செல்கின்றேன் உன்னை.

விருப்பிடம் வந்ததும் சொல்

விட்டுவிடுகின்றேன் என்று.

 

எங்கெங்கோ அழைத்துச்சென்றது

இது ஓகேவா..? இது ஓகேவா..? எனக்கேட்டது.

 

 இதுவேண்டாம் இது வேண்டாமென்று

மறுத்துக் கொண்டிருந்தேன்.

 

இறுதியாக அது நின்ற இடம்

நிரம்பப் பிடித்திருந்தது.

பரவசத்தில் கண்திறந்தேன்.

என் வீடிருந்தது

குதிரையைக் காணவில்லை..!

 

*ஸ்ரீரங்கம் மாதவன்*


2 comments:

  1. ஸ்ரீராம்21 December 2020 at 10:47

    சொர்க்கமே என்றாலும் அது நம்ம வீடு போல வருமா?

    ReplyDelete
  2. கவிஞர் ஊர் ஸ்ரீரங்கம்... அதனால் சுஜாதாவின் இளமைக்காலத்தையும் பார்த்து விட்டு வருகிறார் தனது மாயக் குதிரையில்..!

    ReplyDelete