எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday, 26 July 2021

படித்ததில் பிடித்தவை (“ஒரு சித்திரம்” – ராஜா சந்திரசேகர் கவிதை)

 


*ஒரு சித்திரம்*

 

அந்த மின்விசிறி

அவளுக்கு மிகவும் பிடிக்கும்.

 

அதை ஒரு

தொங்கும் கவிதையைப் போல ரசிப்பாள்.

 

சுழலும் ஓவியம் போல பார்ப்பாள்.

 

அது தரும் காற்று

தன்னோடு பேசுவது போல உணர்வாள்.

 

பெஞ்ச் மேல் ஏறி நின்று

குதிகால் தூக்கி

எட்டிப் பிடிக்கும் குழந்தையைப் போல

அதை அழகாய் துடைப்பாள்.

 

அப்போது ஒரு பாடலை முணுமுணுப்பாள்.

 

குளிர் காலத்தில்

மின் விசிறி ஓய்வெடுக்கும்.

 

ஓடாத அதன் மெளனம்

அவளை நிம்மதி

இழக்கச் செய்யும்.

 

ஒரு முறை பழுதடைய

உடனே போன் செய்து

எலக்ட்ரீஷியனை

வர வைத்து

சரி செய்து

ஓடியவுடன்

முகம் துடைத்து

பெருமூச்சு விட்டாள்.

 

கனவில் வரும் அம்மாவின்

கை விசிறி போல

இதன் மீதும்

அவளுக்குப் பிரியம் அதிகம்.

 

மின்விசிறிப் பற்றி

சின்ன சின்ன கவிதைகளை

எழுதி வைத்திருக்கிறாள்.

 

உன் காற்றைப் போல

நானும் மறைந்து போவேன்

என்ற வரியை

ஆழமாய் முணுமுணுத்தபடியே

ஒரு மழை இரவில்

அந்த மின்விசிறியில்

தொங்கிப் போனாள்..!

 

*ராஜா சந்திரசேகர்*



9 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *கவிஞர் ராஜா சந்திரசேகர்*

    பிடித்த வாசகம்:
    "என்னவும் செய்.
    செய்வதில் நீ இரு."

    ராஜா சந்திரசேகர் எழுதிய
    கவிதைத்தொகுப்புகள்:

    1. கைக்குள் பிரபஞ்சம்
    2. என்னோடு நான்
    (2003ஆம் ஆண்டுக்கான
    கவிப்பேரரசு வைரமுத்துவின்
    கவிஞர்கள் திருநாள் விருது
    பெற்றது)
    3. ஒற்றைக்கனவும்
    அதைவிடாத நானும்
    (2002ஆம் ஆண்டுக்கான
    திருப்பூர் தமிழ்ச்சங்க விருது
    பெற்றது)
    4. அனுபவ சித்தனின்
    குறிப்புகள்
    5. நினைவுகளின் நகரம்
    6. மீனுக்கு நீரெல்லாம்
    பாதைகள்
    7. மைக்ரோ பதிவுகள்

    ReplyDelete
  2. செல்லதுரை26 July 2021 at 09:01

    கவிதை அருமை.

    ReplyDelete
  3. ஸ்ரீராம்26 July 2021 at 09:01

    மிக அருமை.

    ReplyDelete
  4. சங்கர்26 July 2021 at 09:02

    அருமை.

    ReplyDelete
  5. கெங்கையா26 July 2021 at 09:03

    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  6. கமல நாதன்26 July 2021 at 10:06

    கலங்கடித்து விட்டது இக் கவிதை.
    புன்னகையோடு துவங்கி இறுதியில்
    கண்ணீரை வரவழைத்து விட்டது.

    ReplyDelete
  7. கமலநாதன்26 July 2021 at 10:07

    படித்தவுடன் மனதை
    கலங்கடித்து விட்டது
    இக் கவிதை.

    புன்னகையோடு
    படிக்கத் துவங்கி
    கண்ணீரோடு
    முடிந்தது
    இக் கவிதை
    படிக்கும் போது...

    சமீபத்தில் படித்த
    சிறந்த
    கவிதைகளில்
    இதுவும் ஒன்று.

    கவிதைக்கு
    அலங்காரமான
    வார்த்தைகள்
    தேவையில்லை.

    அடுக்கு மொழி
    தேவையில்லை.

    எளிய வரிகள் போதும்
    என்று ராஜா
    சந்திரசேகர்
    மீண்டும் மீண்டும்
    நிரூபிக்கிறார்.

    ReplyDelete
    Replies
    1. காலை வணக்கம்.
      கவிதைக்கு
      தாங்கள் கூறிய
      பின்னூட்டம் மிகவும்
      உண்மை.


      லயித்துப் போய்
      விடுகிறோம்.
      அருமையாக எழுதுகிறார்
      கவிஞர் ராஜா சந்திரசேகர்
      அவர்கள்.

      Delete
  8. சீனிவாசன்26 July 2021 at 14:00

    சில நேரங்களில்
    நாம் அடுத்தவர்களின்
    உணர்வுகளை புரிந்து
    கொள்வதில்லை.
    Balanced life is best.

    ReplyDelete