எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday, 24 July 2021

படித்ததில் பிடித்தவை (“எரியும் நூலகம்” – ராஜா சந்திரசேகர் கவிதை)

 


*எரியும் நூலகம்*


எரிந்து கொண்டிருக்கிறது நூலகம்.

 

தீவைத்த சதிகாரர்கள் தப்பிவிட்டார்கள்.

 

காலம் தீக்கனலாகிறது.

 

ஊற்றிய நீரை வாங்கி

தன் பசியைத் தீர்த்துக்கொள்ளப் பார்க்கிறது நெருப்பு.

 

கொடும்பாவிகள் சிக்கவில்லை.

 

ஏவப்பட்ட பேய்கள்

குற்றத்தை நிகழ்த்திவிட்டு

தடம் காட்டாதபடி பதுங்கிவிட்டன.

 

கேட்கிறது

தீயில் வேகும்

கதாபாத்திரங்களின் அழுகுரல்கள்.

 

வரலாற்றின் வலிகள்.

 

எரிந்து கொண்டிருக்கிறது நூலகம்.

 

உருவான முதல் நாளிலிருந்து

நூலகத்தின் வாசனையை

உணர்ந்த பெரியவர்

அழுது கொண்டிருக்கிறார்.

 

புத்தகங்களை வெகுவேகமாய்

படிக்கிறது நெருப்பு.

 

உதவி மறுக்கப்பட்ட நூலகம்

அனாதையைப் போல

பார்க்கிறது.

 

புகையில்

கொஞ்சம் கொஞ்சமாய்

தொலைந்துகொண்டிருக்கிறது.

 

மழை வந்து

மீதி பொக்கிஷங்களைக் காப்பாற்றிவிடாதா..?

பிரார்த்தனைகள் காற்றில் கலக்கின்றன.

 

வானம் அசையக் காணோம்.

 

 இறந்து கிடக்கின்றன

உள் வசித்த புறாக்கள்.

 

சூட்சியின் வியூகம்

அறிவு ராஜ்ஜியத்தை வீழ்த்தி இருக்கிறது.

 

எரிந்து கொண்டிருக்கிறது நூலகம்.

 

ஊடகங்கள் நூலகத்தின் இறுதிக் காட்சிகளை

பலகோணங்களில் காட்டுகின்றன

கண்ணீரும் கண்ணும்

அருகருகே இருப்பது போன்று

மிகத் துல்லியமாக

நேரடி ஒளிபரப்பாக.

 

நூலகர் தப்பிவர விரும்பாமல்

நூலகத்தோடு தீ சமாதியானதாக

ஒரு தகவல் கசிகிறது.




எரிந்து கொண்டிருக்கிறது நூலகம்.

 

மூன்று தலைமுறை கண்ட நூலகம்

முடிந்துகொண்டிருக்கிறது.

 

சதிகாரர்கள் பிடிக்கப்படுவார்கள்.

மீண்டும் இதுபோல்

நிர்மாணிக்கப்படுமென்று

செய்திகள் உற்பத்தியாகின்றன.

 

பலூன் வார்த்தைகள்

பஞ்சமின்றி பறக்கின்றன.

 

எரிந்து கொண்டிருக்கிறது நூலகம்.

 

புத்தகத்தைத் திருப்பி தரவந்த சிறுமி

அதைக் காப்பாற்றிவிட்ட பதட்டத்தில்

கைநடுங்க இறுக்கமாகப் பிடித்தபடி

பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

 

புத்தகத்தின் அட்டையில்

ஒளிர்கிறது நூலகத்தின் பெயர்..!

 


*
ராஜா சந்திரசேகர்*




6 comments:

  1. செல்லதுரை24 July 2021 at 06:57

    கவிதை அருமை.

    ReplyDelete
  2. ஸ்ரீராம்24 July 2021 at 08:09

    வாசிப்பவரின் வேதனையை,
    வலியை வடித்தெடுத்த கவிதை.
    பதை பதைக்கும் நிகழ்வை,
    ஆதிக்க வெறியை கண் முன்
    காட்டுகிறார் கவிஞர்.
    நெஞ்சைத் தொட்ட கவிதை.

    ReplyDelete
  3. கெங்கையா24 July 2021 at 10:48

    ராஜா சந்திரசேகர்
    கவிதை அருமை.
    கவிஞருக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  4. கமலநாதன்24 July 2021 at 18:51

    காட்சியை விவரிக்கிறது
    கவிதை.

    படிக்கும் போது
    மனம் பதைபதைக்கிறது
    யாரேனும் வந்து
    தீயை அணைக்க
    மாட்டார்களா? என்று.

    கவிதையின்
    இறுதி வரிகளில் நாமும்...

    ReplyDelete
  5. சக்கையா25 July 2021 at 07:13

    நெஞ்சை உருக வைத்த,
    பதற வைத்த கவிதை.
    நீண்ட கவிதை.
    நீண்டநாள் மனதில்
    நிற்கும் கவிதை.

    "ஒரு இனத்தை
    அழிக்க வேண்டுமானால்
    அந்த இனத்தின்
    நூலகங்களை எரித்து விடு"

    என்று சொல்லப்படுவதுண்டு.
    அதைத் தான் சிங்கள அரசு
    1981 மே 31 இரவில்
    தென்கிழக்காசியாவின்
    மிகப் பெரிய நூலகமான
    90,000 புத்தகங்களை
    தன்னகத்தே கொண்டிருந்த
    யாழ்பாண நூலகத்தை
    எரித்து சாம்பல் மேடாக்கியது.
    வரலாற்றின் தீய்ந்த பக்கங்களை
    எழுதி முடித்தார்கள்
    சிங்களக் காடையர்.
    அந்த கொடுநிகழ்வை மீண்டும்
    கண்ணுக்குள் கொண்டு வந்து
    நிறுத்தியிருக்கிறது
    கவிஞர் ராஜா சந்திரசேகரின்
    கவிதை.

    இணைப்பாய் ஒரு
    அது குறித்தான ஒரு
    குறியீட்டு கவிதை
    கவிஞர் ரகுமான் எழுதியது:


    "புத்த பெருமான்
    ஒரு இரவிலே சுடப்பட்டார்.
    புத்தரின் சிவில் உடையாளர்கள்
    பிணத்தை உள்ளே
    இழுத்துச் சென்றனர்.
    90 ஆயிரம் புத்தகத்தினால்
    புத்தரின் மேனியை
    மூடி மறைத்தனர்.
    சிகாலேகவாத சூத்திரத்தை
    கொழுத்தி எரித்தனர்.
    புத்தரின் சடலம் அஸ்தியானது.
    தம்ம பதமும் சாம்பலானது."

    ReplyDelete
  6. ///
    புத்தரின் சடலம் அஸ்தியானது.
    தம்ம பதமும் சாம்பலானது."
    ///
    வலியறிந்த வரிகள்
    கவிதை விதைத்ததை உணர்பவராரோ

    ReplyDelete