எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday, 16 July 2022

படித்ததில் பிடித்தவை (“அந்தக் காலம்தான் நன்றாக இருந்தது” – மகுடேசுவரன் கவிதை)

 


*அந்தக் காலம்தான் நன்றாக இருந்தது*

 

பேருந்துக்குள் கொணர்ந்து

மாலைமுரசு விற்பார்கள்.

 

எந்த நிறுத்தத்தில் ஏறினாலும்

அமர இடம் கிடைக்கும்.

 

மிதிவண்டி வைத்திருந்தோம்.

நான் பஞ்சர் ஒட்டப் பழகியிருந்தேன்.

 

எம்.ஜி.ஆர். உயிரோடு இருந்தார்.

கலைஞரின் அறிக்கைகளைத் தேடிப் படித்தார்கள்.

 

எல்லா வீடுகளிலும்

முதல் மரியாதை பாடல் ஒலித்தது.

 

வானொலி நாடகங்களை

ரசித்துக் கேட்டோம்.

 

சாவி, இதயம் பேசுகிறது

பத்திரிகைகள் வந்தன.

 

எல்லாருமே

அரசுப் பள்ளிகளில் படித்தோம்.

 

சாலையில்

எப்போதாவது ஒரு வண்டி போகும்.

 

மழை

நின்று நிதானமாகப் பொழியும்.

 

சாராயக் கடைகள் இருந்தன

இன்றைய கூட்டம் அக்கடைகளில் இருந்ததேயில்லை.

 

தமிழாசிரியர்கள்

தந்நிகரற்று விளங்கினார்கள்.

 

வேலைக்குப் போகாதவன்

எந்தக் குடும்பத்திற்கும் பாரமாயில்லை.

 

எளிதில் மணப்பெண் கிடைத்தாள்.

 

வெஸ்ட் இண்டீசை வெல்லவே முடியாது.

 

சந்தைக்குப் போக பத்து ரூபாய் போதும்.

முடிவெட்ட இரண்டு ரூபாய்தான்.

 

யுவதிகள் பாவாடை தாவணி உடுத்தினர்.

சிலிண்டர் மூடுதுணிபோல்

யாரும் நைட்டி அணியவில்லை.

 

ராமராஜனைக் கூட விரும்பி ரசித்தோம்.

 

சுவாசிக்கக் காற்று இருந்தது

குடி தண்ணீரை விலைக்கு வாங்கவில்லை.

 

தெருவில் சிறுமிகள் பல்லாங்குழி ஆடுவார்கள்.

நாங்கள் அவர்களை டபாய்த்துக் கொண்டே

நுங்கு வண்டி ஓட்டுவோம்..!

 

மயில் இறகுகள் குட்டி போட்டன புத்தகத்தில்.

ஐந்து ரூபாய் தொலைத்ததற்கு அடி வாங்கினேன்.

 

மூன்றாம் வகுப்பிலிருந்து மட்டுமே ஆங்கிலம்.

ஐந்தாம் வகுப்பு வரை அரைக்கால் டவுசர்.

 

கடந்து தொலைந்துப் போனவை-

 

நாட்கள் மட்டுமல்லநம் சுகங்களும், நம்பிக்கைகளும்தான்..!

 

ஆம்

அந்தக் காலம் நன்றாக இருந்தது..!

 

 

*மகுடேசுவரன்*



9 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *மகுடேசுவரன்*

    தொழில் : வணிக சேவைகள்

    வேலை : ஆடை ஏற்றுமதி
    ஆலோசகர்

    இடம்: திருப்பூர், தமிழ்நாடு.

    அறிமுகம் :
    வாழ்க்கையை அதன்
    அத்தனை கசப்போடும்
    இனிப்போடும் எதிர்கொண்டவன்.
    அவற்றில் பலவற்றைக்
    கவிதைகளின் வழியே
    கடந்தவன்.
    சிலவற்றைக் கடக்கவே
    முடியாமல் தவித்திருப்பவன்.
    சொந்த ரசனைகளின்
    உணர்கொம்புகள்
    கூர்மையடைந்ததால் இன்னும்
    உயிர்த்திருப்பவன்.
    முழுமையை நோக்கி என்றும்
    முடிவடையாத யாத்திரையில்
    சென்றுகொண்டிருப்பவன்.

    பிடித்தமானவை :
    நண்பர்கள், பயணங்கள்,
    படித்தல்கள், படைத்தல்கள்.

    பிடித்த திரைப்படங்கள் :
    அகிரா குரோசாவா,
    ஐரோப்பிய/ ஈரான்
    இயக்குநர்களின் படங்கள்.
    தமிழில் மகேந்திரன்,
    பாலுமகேந்திரா படங்கள்.

    தமிழ்த் திரை வரலாற்றின்
    மிகச் சிறந்த 10 படங்கள் :
    1. உதிரிப்பூக்கள்
    2. முள்ளும் மலரும்
    3. பூட்டாத பூட்டுக்கள்
    4. மூன்றாம் பிறை
    5. பதினாறு வயதினிலே
    6. நாயகன்
    7. வீடு
    8. எச்சில் இரவுகள்
    9. கிராமத்து அத்தியாயம்
    10. சுவர் இல்லாத சித்திரங்கள் /
    ரத்தக் கண்ணீர்.

    பிடித்த இசை :
    இசை என்பது திரைப்பட இசை
    மட்டுமேயில்லைதான் என்றாலும்
    என் உயிரில் கலந்த ஒலிகளைத்
    தந்தவர் இளையராஜாதான் !
    நானும் உங்களைப்போலவே
    வெகுநாள் இளையராஜாவின்
    இசையைத் தாழ்த்தி
    மதிப்பிட்டிருந்தவன் தான்.
    என் தந்தை இறந்தபோது
    எனக்கு அவர் பிரேதத்தைக்
    கண்டபோதோ, அதைக் குழியில்
    இறக்கியபோதோ பெரிதாய்
    ஒன்றும் அழுகை வரவில்லை.
    அடுத்த எட்டாம் நாள் காரியப்
    பொருள்களை எடப்பாடி
    சந்தையில் உறவுகளோடு வந்து
    வாங்கிக்கொண்டு பேருந்து
    நிலையத்தில் நின்றிருந்தேன்.
    அங்கிருந்த டீக்கடை
    ஒன்றிலிருந்து
    இளையராஜாவின் குரலில்
    ஒலித்தது ‘இதயம் ஒரு கோயில்...
    அதில் உதயம் ஒரு பாடல்’ என்ற
    பாடல்.
    அடக்கப்பட்ட துக்கம் பொங்கிப்
    பெருகி மண்ணில் விழுந்து
    புரண்டு சுய உணர்ச்சியற்று
    அரை மணிநேரம் அழுது
    தீர்த்தேன்.
    அன்று உணர்ந்தேன்
    அவனை நான்.

    பிடித்த புத்தகங்கள் :
    திரு. வி. கல்யாணசுந்தரனார்
    இயற்றிய அத்தனை நூல்களும்
    அவற்றில் வழங்கும்
    நற்றமிழுக்காகப் பிடிக்கும்.
    மனோன்மணீயம் என்கிற
    நாடகத் தமிழ்க் காப்பியம்.
    மரபில் முடியரசன் கவிதைகள்.
    சுஜாதாவின் புதுமைத் தமிழ்நடை.
    சுந்தர ராமசாமியின் கடைந்து
    பிழிந்த கட்டுரை நடை.
    பிரமிளின் படிம நடை.
    கண்ணதாசனின் நெகிழ்ந்த
    நடை.

    ReplyDelete
  2. ஸ்ரீராம்16 July 2022 at 07:28

    பழைய
    இனிய நினைவுகளை
    நினைவூட்டும் கவிதை.
    மிக அருமை.

    ReplyDelete
  3. இனிமையான காலம். அலைபேசிக்கு தலை வணங்காமல் தலை நிமிர்ந்து இருந்த காலம்.

    ReplyDelete
  4. செல்லதுரை16 July 2022 at 09:06

    👌👌👌

    ReplyDelete
  5. சத்தியன்16 July 2022 at 09:09

    அற்புதம் அண்ணா 🎉🙏

    ReplyDelete
  6. சீனிவாசன்16 July 2022 at 10:15

    "சிலிண்டர் மூடுதுணிபோல்
    யாரும் நைட்டி அணியவில்லை."
    - அருமையான உவமை.
    😊😊😊👌👌👌

    ReplyDelete
  7. அம்மையப்பன்16 July 2022 at 18:16

    🤣

    ReplyDelete
  8. லதா இளங்கோ18 July 2022 at 11:33

    👏👏👏

    ReplyDelete