சபல ஆண்களை சமாளிப்பது எப்படி?
(ஜி.எஸ்.சுப்ரமணியன்)
பணி இடத்தில் அனைவரும் பெண்களிடம் கண்ணியமாக
நடந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. சில சபலபுத்தி கொண்டவர்களும்
இருக்கத்தான் செய்வார்கள். அவர்களிடம் இருந்து தப்பிக்கும் கலையை பெண்கள்
தெரிந்துகொள்ள வேண்டும். அவர் மேலதிகாரியாக இருந்து தொலைத்தால் அதிக சங்கடம்.
என்றாலும்கூட சில உத்திகளைக் கடைப்பிடித்தால், இதுபோன்ற தொல்லைகளைத் தவிர்த்துவிடலாம்.
சக ஆண் ஊழியர்கள் தொடக்கத்தில் நல்ல மாதிரி பட்டால்கூட
அளவுக்கு அதிகமாக அவர்களிடம் பேச வேண்டாம். யாரைப் பற்றியுமே சரியான முடிவுக்கு வர
சிறிது காலம் தேவை. அதுவரை பொறுத்திருந்து, பிறகு நட்பு பாராட்டுவது நல்லது.
உங்களுக்கு உங்கள் வேலை மிகவும் தேவையானதாக இருக்கலாம்.
அந்த வருமானத்தை நம்பித்தான் உங்கள் குடும்பமும், வருங்காலமும் இருக்கிறது என்கிற நிலைகூட
இருக்கலாம். ஆனால் இதையெல்லாம் உங்கள் மேலதிகாரியிடம் சொல்லாதீர்கள். 'நாம் கொஞ்சம் அத்துமீறினாலும் இந்த வேலை
இவளுக்கு மிக முக்கியம் என்பதால் ஒத்துப்போகக் கூடும் (அல்லது குறைந்தது தன்னைக்
காட்டிக் கொடுக்கமாட்டாள்)' என்கிற எண்ணத்தை அவர் மனதில் பதிய வைப்பானேன்?
சொந்த சோகங்களை அதிகமாக வெளிப்படுத்தினால் 'நான் இருக்கிறேன் உனக்கு. கவலைப்படாதே' என்கிற போர்வையில் மேலதிகாரி எல்லைமீறப்
பார்க்கலாம்.
உடை விஷயத்தில் சுயசிந்தனை இருப்பதில் தவறில்லை. என்றாலும்
பொதுவாக ஆடை குறித்த ஆண்களின் எண்ணம் கொஞ்சம் பிற்போக்குத்தனமானதுதான். அதனால் ஆடை
விஷயத்தில் கவனம் தேவை. அதே சமயம் உடையைவிட முக்கியம் பாடி லாங்குவேஜ் எனப்படும்
உடல் மொழி. துணிச்சலான பெண்களிடம் வாலாட்டுவதைவிட பயந்து நடுங்கும் பெண்களிடம்
எல்லைமீறப் பார்ப்பது சபலக்காரர்களுக்கு எளிது.
பலரும் காரில் செல்லும்போது ஒன்றை மறந்து விடுவார்கள்.
ஓட்டுநர் ஒருவர் இருக்கிறார் என்பதை மறந்துவிட்டு வீட்டின் அந்தரங்கங்களை எல்லாம்
பேசிக் கொள்வார்கள். இதேபோல பணி இடத்திலும் ஒரு தவறு நடக்கலாம். தொலைபேசியில்
அந்தரங்க விஷயங்களைப் பேசும்போது பிறர் கேட்க வாய்ப்பு உண்டு என்பதை மறக்க
வேண்டாம்.
எந்த நியாயமான காரணமும் இல்லாமல் மேலதிகாரி உங்களுக்குத்
தனி சலுகை எதையாவது அளித்தால், அதை உறுதியுடன் மறுத்து விடுங்கள். “எனக்குப் பிறந்த நாள்” என்று ஸ்வீட் பாக்ஸை நீட்டினால், மறுப்பது நாகரிகமாக இருக்காது என்கிறீர்களா? வா ங்கிக் கொள்ளுங்கள். உடனடியாக உங்கள்
துறையிலிருக்கும் பிறரையும் கூப்பிட்டு, அந்த மேலதிகாரி முன்பாகவே, பகிர்ந்து கொள்ளுங்கள்.
சக ஆண் ஊழியர்கள் 'அடல்ட்ஸ் ஒன்லி' ஜோக்குகள் அடித்தால், உடனே உங்கள் எதிர்ப்பை பதிவுசெய்துவிடுங்கள்.
அதைவிட முக்கியம் நீங்களும் அதுபோன்ற ஜோக்குகளைப் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது. 'இவ்வளவு தாராளமாக இருப்பவள், பிறவற்றிலும் தாராளமாக இருப்பாள்' என்ற எண்ணம் எழலாம்.
சக பெண் ஊழியர்களிடம் நட்பை வளர்த்துக் கொள்ளுங்கள். சபல
ஆண் பணியாளர்களை எதிர்க்க இது உதவும். உங்கள் முழு நம்பிக்கையைப் பெற்ற சக
ஊழியர்களும் உங்களுக்கு உதவ முன்வருவர். தனித்தீவாக இருக்காதீர்கள்.
உங்கள் வேலையில் நீங்கள் மிகச் சிறப்பானவராக
இருந்துவிட்டால், எந்த மேலதிகாரியும் உங்களை அலட்சியப்படுத்திவிடவோ, தவறான கண்ணோட்டத்தில் அணுகவோ முயற்சிக்க
மாட்டார்கள். 'ஏடாகூடமாக நடந்து
கொண்டால், ஒரு மிக நல்ல பெண்
ஊழியரை இழந்து விடுவோம்' என்ற எண்ணமேகூட சில தவறான நடவடிக்கைகளை தடுத்து
நிறுத்தக்கூடும்.
(நன்றி: தி இந்து, 27.04.2014)
No comments:
Post a Comment