எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday 9 July 2014

படித்ததில் பிடித்தவை (சுஜாதா! பதில்களிலும் ராஜா! - கட்டுரை)

சுஜாதா! பதில்களிலும் ராஜா!
பால கணேஷ்                                                         

சுஜாதாவை நினைக்கும் போதெல்லாம் பிரமிப்புதான் எழும். எல்லா சப்ஜெக்ட்டையும் கையாண்ட இந்த ஆல்ரவுண்டர் ஒரு தீர்க்கதரிசியும் கூட. எம்.எல்.ஏ. கடத்தல் என்கிற விஷயத்தை இவர் பதவிக்காகநாவலில் எழுதினார். பின்னாட்களில் நிஜமாகவே தமிழக அரசியலில் அந்தக் கூத்து அரங்கேறியது. மேட்ச் பிக்ஸிங் என்கிற விஷயத்தை கறுப்புக் குதிரைகதையில் இவர் எழுதிய சில காலத்தின் பின் பல கிரிக்கெட் பிரபலங்கள் இதில் சிக்கியிருந்தது வெளிப்பட்டு சீரழிந்தார்கள். தவிர, தன் கற்றதும் பெற்றதும் பகுதியில் ‘‘இன்னும் பத்து ஆண்டுகளில் தமிழில் தொடர்கதைகளும், சிறுகதைகளும் வழக்கொழிந்து போகும். Non-fiction தான் ஆட்சி செய்யும்’’ என்று எழுதினார். இன்றைய தேதியில் அப்படியே!

சுஜாதா குமுதம் இதழின் ஆசிரியராக இருந்த போது எழுதிய கேள்வி பதில் பகுதியும் பிரபலம். வேறு வேறு இதழ்களில் அவர் எழுதிய கேள்வி - பதில் பகுதிகள் புத்தகங்களாக வந்துள்ளன. சுஜாதா அம்பலம்இணைய இதழில் சில காலம் ஆசிரியராக இருந்தார். இணைய வாசகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார் அப்போது. நிறையப் பேர் அதைப் படித்திருக்க வாய்ப்பில்லை என்பதால், அவர் அளித்த நறுக்-சுருக் பதில்களிலிருந்து எனக்குப் பிடித்தவைகளை அம்பலம் இணைய இதழ் தொகுப்புநூலிலிருந்து தேர்ந்தெடுத்து உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
 v  மீண்டும் எல்லோரும் கூட்டுக் குடும்ப முறையை விரும்புவது போல் தோன்றுகிறதே?
 v  யார் சொன்னது? மெகா தொடர்களை நம்பாதீர்கள். எல்லாமே பொய். கூட்டுக் குடும்ப அமைப்பை ஃப்ளாட்டுக்கள் வந்தபோதே தாரை வார்த்து விட்டோம்!

 v  உலகில் நீங்கள் அதிகம் கவலைப்படும் விஷயம் எது? சந்தோஷப்படும் விஷயம் எது?
 v  நம் குழந்தைகள் சீக்கிரமாக இழக்கும் அறியாமை, நம் குழந்தைகள் சீக்கிரமாகப் பெறும் திறமை!

 v  இன்னும் ஆயிரம் வருடங்கள் கழித்து ஜாதி, மதங்கள் இருக்குமா?
 v  ஆயிரம் ஆண்டுகளில் ஜாதி மதங்கள் வேறு வேஷத்தில் இருக்கும்!

 v   திடீரென்று ஒரு நாள் இப்போதிருக்கும் இமெயில் கம்பெனிகள் எல்லாம் தங்கள் சேவையை நிறுத்தி விட்டால் என்ன ஆகும்?
 v  சம்பிரதாய மெயிலுக்குத் திரும்புவோம். அவர்களும் வேலையை நிறுத்தினால் ஷெர்ஷா காலத்து குதிரை தபாலுக்குச் செல்வோம்!

 v   கவிதை எழுத பெண்கள் அவசியமா?
 v  இல்லை. எழுதாமலிருக்க!

 v  ஒரு வெற்றிகரமான சினிமா எடுக்க என்ன ஃபார்முலா என்பதைத் தெரிந்து கொண்டீர்களா?
 v  தெரிந்து கொண்டேன்- ஃபார்முலா எதுவும் இல்லை என்பதை!

 v  ஹைக்கூ முதல் யாப்புவரை தெரிந்த நீங்கள் ஏன் கவிதை எழுதுவதில்லை?
 v  ரசிப்பது, படைப்பது - இரண்டும் ‌வெவ்வேறு விஷயங்கள். நல்ல சமையலை எல்லோரும் ரசிக்கலாம்!

 v  பெண்களுக்கு ஏற்ற உடை என்று எதைச் சொல்வீர்கள்?
 v  எந்த நேரத்தில் என்பதைச் சொல்லுங்கள்!

 v  நான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன். உங்கள் அறிவுரை என்ன?
 v  இப்போதே பேச விரும்புவதையெல்லாம் பேசி விடுங்கள்!

 v  உலகில் மிகவும் அத்தியாவசியமான மொழி ஆங்கிலம் என்கிறேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
 v  அந்தப் பட்டியலில் மெளனம், பார்வை, கணினி மொழிகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள்!

 v  வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று எல்லோரும் சொல்கிறார்களே, வாய்ப்புகள் நல்ல வாய்ப்புகள் என்று எப்படித் தெரியும்?
 v  நழுவிப் போனதும் தெரிந்து விடும்!

 v  யார் அழகு? ஆண்களா? பெண்களா?
 v  ஆண்களக்கு பெண்கள். பெண்களுக்கு பெண்கள். முக்கியமாக கண்ணாடியில் தெரியும் பெண்!

 v  எந்த மொழியிலும் இல்லாத சில சொற்கள் தமிழில் புகுந்து வருவது தமிழுக்கு பின்னாளில் பிரச்சனையாகாதா? (உதாரணம்: அசால்ட்)
 v  உடான்ஸ் கதைகளையெல்லாம் நம்பாதீர்கள். இவ்விஷயத்தில் அசால்டா இருந்தா தப்பில்லை. மனதில் உள்ளதை தெளிவாக கடத்தினால் போதும்!

 v  ஆண்கள், பெண்கள் - பொய் பேசுவதில் யார் கில்லாடி?
 v  பொய் பேசுவதில் கில்லாடிகள் ஆண்கள். அதை சட்டென்று கண்டுபிடிப்பதில் கில்லாடிகள் பெண்கள்.

 v  வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருப்பதால் பலன் கிடைக்குமா?
 v  கிடைக்கும்- விரத சாமான்கள் விற்பவருக்கு!

 v  கவிஞர்களுக்கு மட்டும் எப்படி கற்பனைகள் விதவிதமாய் வருகின்றன? எவ்வளவு யோசித்தாலும் எனக்கு எந்தக் கற்பனையும் வரமாட்டேன் என்கிறதே, இதை எப்படி வளர்த்துக் கொள்வது?
 v  கல்யாணராமன், நீங்கள் பாக்கியம் செய்தவர். கற்பனை இல்லாதவர்களுக்கு அதற்குப் பதிலாக நிம்மதி கிடைக்கும்!

 v  எந்த நம்பிக்கையில் நாம் இன்னும் ஓட்டுப் போட்டுக் கொண்டிருக்கிறோம்?
 v  வேதாளத்தை மரமிறக்கிய விக்ரமாதித்தன் கதையைப் படித்த நம்பிக்கையில்தான்!

 v  லஞ்சம் வாங்காத அரசு ஊழியர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
 v  வழக்‌கொழியும் அபாயத்தில் உள்ள, பாதுகாக்க வேண்டிய உயிரினம்!

 v  வாழ்க்கையில் நீங்கள் கற்றதிலேயே முக்கியமான விஷயம் என்று எதைக் கருதுவீர்கள்?
 v  கற்றது போதாது என்பதை!

 v  கடவுள் கொள்கையில் உங்கள் தெளிவான முடிவு என்ன?
 v  கடவுள் இருக்கிறார். கடவுள்கள் இல்லை!

 v  தமிழன் என நினைத்து நீங்கள் கர்வப்பட்டது எப்போது?
 v  சங்க இலக்கியங்களைப் படிக்கும் போது!

 v  காதலுக்கும் தாடி வளர்ப்பதற்கும் என்ன தொடர்பு?
 v  காதலைத்தான் வளர்க்க முடியவில்லை, தாடியையாவது வளர்க்கலாமே என்கிற எண்ணம்தான்.

v   

No comments:

Post a Comment