எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday, 22 July 2014

படித்ததில் பிடித்தவை (சுஜாதா கட்டுரை)


மனித உறவில் வெயில்..! - சுஜாதா.

சென்னையில் வெயில் எப்போதும் போலத்தான். மே மாதம்  தகிக்கத் துவங்கிவிட்டது. சோலார் ஹீட்டர் ஏதும் இல்லாமல் வீட்டுக் குழாயில் வெந்நீர் வருகிறது. காருக்குள், வீட்டுக்குள், பாத்ரூமில் கூட ஏசி தேவையாக இருக்கிறது. ஒரு நிமிஷம் அது வேலை செய்யாவிடில் பதறிப்போய், உதறிப்போகிறோம்.

ஸ்ரீரங்கத்தில் ‘சம்மர் ஹாலிடே’ சமயத்தில் மலை வாசஸ்தலம் ஏதும் கிடையாது. பட்டை உரியும். வெயிலில் செருப்பில்லாமல் நடந்து போவோம். ஹை ஸ்கூல் மைதானத்தில் தஞ்சாவூர் டீமுடன் கிரிக்கெட் மேட்ச் ஏற்பாடு செய்வோம். தலைக்கு குல்லாய் ஏன், கைக்குட்டை கூடக் கிடையாது. ஆட்டத்தின் சுவாரஸ்யம் எந்த வெயிலையும் தாங்கக்கூடியதாக இருந்தது. இப்போது அதை எண்ணிப் பார்த்தாலே வியர்த்து ஊற்றுகிறது.

தாங்கும் சக்தி, சகிப்புத்தன்மை பொதுவாகவே நாட்டில் குறைந்து வருவதாகத்தான் எண்ணுகிறேன். அதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள். ஒன்று, சௌகரியங்கள் அதிகமாகிவிட்டன. குடிசை வீட்டில் கூட மின்விசிறி இருக்கிறது. மத்தியதர வீடுகளில் கூலர், ரூம் ஏசி, ஸ்பிலிட் ஏசி போன்றவை மலிந்துவிட்டன. அதனால் வெயிலை நேரடியாக எதிர்கொள்ள வேண்டிய தருணங்களைக் குறைத்துக்கொண்டுவிட்டோம்.

மற்றொரு காரணம், மக்கள் தொகை அதிகரித்து விட்டதால் சகிப்புத்தன்மை குறைந்துவிடுகிறது. எதற்கும் கூட்டம், க்யூ வரிசை, போட்டி என்றிருக்கும்போது மற்றவருக்கு வழிவிடும் எண்ணம் மறைந்து விடுகிறது. இப்போது யாரும் வயசானவர்களுக்கோ, பெண்மணிகளுக்கோ பஸ்சில் முதலில் ஏற வழிவிடுவதில்லை.

நகர மனிதர்களிடையே புன்னகை பரிமாற்றம் என்பதே இல்லாமல் போய்விட்டது. அதனால்தான் அன்று மெரினாவில் என்னை எதிர் கொண்ட ஒரு பெரியவரைப் பார்த்துப் புன்னகைத்தபோது நெற்றியைச் சுருக்கிக்கொண்டு விரைவாக விலகிச் சென்றார்.

       -    அம்பலம் இணைய இதழ் (22.05.2005)      

No comments:

Post a Comment