இன்னும் கொஞ்சம் சுஜாதா!
பால கணேஷ்
1970களில் சுஜாதா குமுதம் இதழில் ‘கண்ணோட்டம்’ என்ற தலைப்பில் தொடர்ந்து வாரம் ஒரு பக்கம் எழுதி வந்திருக்கிறார்.
அதிலிருந்து ஒரு சின்னக் கட்டுரை இங்கே...
லிஃப்ட்!
-சுஜாதா-
அறைக்குள் நுழைந்ததும் அவரைப் பார்த்தேன். கைகளைக் கட்டிக் கொண்டு என்
நாற்காலிக்கு எதிர் நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். நான் இதுவரை
சந்தித்திராதவர். நடுத்தர வயதும், சதைப் பற்றான உடலுமாக இருந்தார். லிஃப்ட்டுகள் தயாரிக்கும் ஒரு
கம்பெனியிலிருந்து தான் வருவதாகவும், சில தினங்களுக்கு முன் அவர் கம்பெனி
லிஃப்ட்டுகள் பற்றி நான் தொலைபேசியதை ஞாபகப்படுத்தினார். புதிதாகக் கட்டப்படும்
ஒரு கட்டிடத்திற்கு லிஃப்ட் வசதி பற்றி யோசித்துக் கொண்டிருந்த போது அந்தக்
கம்பெனிக்கு போன் செய்தது நினைவுக்கு வந்தது. வந்தவர் தன் கம்பெனி
லிஃப்ட்டுகள் பற்றி விஸ்தாரமாகப் புகழ்ந்து சொன்னார். அவைகள் தானாக இயங்கக்
கூடியவையாம். ஒரு சிறு குழந்தைகூட அவற்றை இயக்கலாமாம். கதவுகள் சிறிதுகூடச்
சப்தமிடாதாம். தானாகத் திறந்து கொள்ளுமாம். தானாக மூடிக் கொள்ளுமாம். புறப்படும்
போது மிகவேகமாகச் சென்று விரும்பிய மாடிக்கு வந்து சேரும் முன் வேகம் குறைந்து
நிற்க வேண்டிய இடத்திற்கு முக்கால் இன்ச்சுக்குள் சப்தமிடாமல் நின்று, கதவு திறந்து வழிவிட்டு நுழைபவர்களை அணைத்துக்
கொண்டு கதவு மூடும். ஆம்!
இந்த லிஃப்ட்டுக்கு மூளை கூட இருக்கிறதாம். முதலில் யார் பட்டனை அழுத்தினார், அவர் மேலே போக வேண்டியவரா, கீழே போக வேண்டியவரா, அடுத்து அழுத்தியது யார், அவர் நோக்கம் மேலா, கீழா என்று பற்பல செய்திகளை எல்லாம் கிரகித்துக் கொண்டு சிக்கனமாகவும், புத்திசாலித்தனமாகவும் செயல்படும். ‘‘ஷி இஸ் எ ப்யூட்டி! உள்ளே லினோலியம் கண்ணாடி. எமர்ஜென்ஸி பட்டன். மெளனமான மின் விசிறி... ஹைஃபி சங்கீதம்... நீங்கள் கொடுக்கப் போகும் ஒவ்வொரு ரூபாய்க்கும் மதிப்பு!’’
‘‘என்ன விலை?’’ என்றேன்.
‘‘லட்சத்து எண்பதாயிரம்’’ என்றார்.
நான் மனத்திற்குள் ஒரு குட்டிக்கரணம் அடித்தேன். முழுக்க முழுக்க ஆட்டோமாட்டிக் டிக் டிக் டிக் என்றார்.
இந்த ஆட்டோமாட்டிக் திடீரென்று பாயைப் பிராண்டினால் என்ன ஆகும்? தானாகப் பிரிந்து மூடிக் கொள்ளும் கதவுகளுக்கு இடையில் யாராவது கை மாட்டிக் கொண்டு கதவு சடக்கென்று மூடிக் கொண்டு உடனே கிளம்பி விட்டால் என்ன ஆகும் என்றெல்லாம் சந்தேகம் எழுந்தது எனக்கு.
கேட்கவில்லை. கேட்டால் அவர் எங்கே லிஃப்ட்டுக்கு (லட்சத்து எண்பதினாயிரம்) ஆர்டர் எடுத்துக் கொண்டு செக் கிழிக்கச் சொல்வாரோ என்று பயந்து, ‘‘யோசித்துச் சொல்கிறேன். உங்களுக்கு மறுபடி போன் பண்ணுகிறேன்’’ என்று கத்தரித்துக் கொண்டேன்.
அவர் மேலே கொஞ்சம் தன் லிஃப்ட்களைப் பற்றி ஆராதனை செய்துவிட்டு ஒரு வழியாகப் புறப்பட எழுந்தார். எழுந்தவருடன் வழக்கம் போல் கை குலுக்க முற்பட்ட போது என் ரத்த ஓட்டத்தில் குபுக் என்று ஒரு பாய்ச்சல் ஏற்பட்டது.
அவர் தன் இடது
கையால் கை குலுக்கினார். வலது கை மணிக்கட்டுடன் நின்று மொண்ணையாக இருந்தது..!
** ** **
No comments:
Post a Comment