பயணப் பொழுதுகளில்...
“கண்டக்டர் தர வேண்டிய
சில்லரை பாக்கிக்காய்
தூக்கம் இழந்த பயணம்...
எடுத்து வைக்க மறந்த
மாற்று உடைக்காய்
மனைவியோடு
பேசாமல் போன பயணம்...
முன் சீட்டுக் குழந்தை
வெளியே நீட்டும் கையை
பதறிய படியே பார்த்த பயணம்...
பேருந்து சத்தம் கேட்டு
வேலியோரம் ‘ஒதுங்கிய’ பெண்ணின்
வெருண்ட முகம் பார்க்கக் கூசி
தலை கவிழ்ந்த பயணம்...
கைக் குழந்தைகாரிக்கு
இடம் கொடுப்பதால்
பக்கத்துக்கு இருக்கைக்காரர்
ஏதாவது நினைப்பாரோ என
யோசிப்பினூடே தொடர்ந்த பயணம்...
எப்படியோ
எல்லா பயணங்களிலும்
எனக்கு மட்டும் கிடைத்து விடுகிறது
ஜன்னலோர இருக்கையும்,
சில கவிதைகளும்..!”
- மு. முருகேஷ்.
No comments:
Post a Comment