எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday 3 April 2020

படித்ததில் பிடித்தவை (“புரிதல்” – தேவதச்சன் கவிதை)


புரிதல்

தன் கழுத்தைவிட உயரமான
சைக்கிளைப் பிடித்தபடி லாகவமாய்
நிற்கிறாள் சிறுமி.

கேரியரில் அவள் புத்தகப்பை
விழுந்துவிடுவதுபோல் இருக்கிறது.

மூன்றாவது பீரியட் டெஸ்ட்க்கு அவள் உதடுகள்
சூத்திரங்களை முணுமுணுத்துக்கொண்டிருந்தன.

அவள்
கண்ணுக்கு அடங்காமல்
கனரக வாகனங்கள் அவளைக்
கடந்து சென்றன.

வேகமாய்த் தாண்டிச் செல்லும் பஸ்ஸில்
இன்னொரு பகலில் போய்க்
கொண்டிருக்கும் குண்டுப்பெண்
சிறுமியின் ஷூ லேஸ்
அவிழ்ந்திருப்பதைப் பார்த்தாள்.
சொல்லவிரும்பிக் கை அசைத்தாள்.

சிறுமிக்குக் கொஞ்சம் புரிந்தது
கொஞ்சம் புரியவில்லை.

   – தேவதச்சன்.

(போராடும் பலம் வறுமை இயல்பாகவே கொடுப்பது. எதிர்காலம் கல்வியில் தான் இருக்கிறது என்னும் புரிதல் வளர்ப்பில் வந்துள்ளது. வெளி உலகில் இருந்து அவள் சவால்களை எதிர்பார்க்கிறாள். உதவியை அல்ல. அதே சமயம் தனது பிரச்சனைகளில் எதை நகரும் வாகனத்துப் பெண் கவனித்தாள் என்பதே இவளது மனதுள் உள்ள கேள்வி. வாசகன் வாழ்க்கையின் புதிர்களில் தனது இருப்பிடமான புள்ளி தன்னுடன் பிறர் தம்மை இணைத்துக்கொள்ளும் புள்ளியே விடை தெரியாதது. முன்னுரிமை பெறும் விஷயங்களே கடந்து செல்லுதலில் துணையாகின்றன.இன்னொரு பகலில் என்பது வாழ்க்கையின் பின்னணி மலைக்கும் மடுவுக்குமாக இரு ஜீவிகளிடையே வேறுபடுவதை மிகக் கலையாகத் தொட்டுச் செல்வது.)

No comments:

Post a Comment