எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday, 22 June 2022

படித்ததில் பிடித்தவை (“தவறிய குறி” – மதார் கவிதை)

 


*தவறிய குறி*

 

இயக்கத்தில் உள்ள

புலியைச் சுட

வெற்று வெளியைத்தான்

சுடவேண்டியிருக்கிறது

 

புலி ஓடி வெற்று வெளியை

அடைந்து மரணிக்கிறது

 

குறி பார்ப்பதென்பது

குறி தப்பிப் பார்ப்பதா

தலைக்குக் குறி வைப்பது

வாலை வீழ்த்தவா

 

வாலிபன் மரணித்துவிட்டான்

கிழவன் தப்பி

குருவி மடிந்தது

வானைக் காப்பாற்றி

 

ஆற்றின் தவளைக்கல்

நீர்த்தவளையை ஓடச் செய்கிறது

மூன்று நான்கு முறைகள்

நான்கு ஐந்தில்

சடலம் மூழ்குகிறது

நீருக்குள்

அடி ஆழம் நோக்கி..!

 

 *மதார்*

(கல்குதிரை இதழ்)



1 comment:

  1. "உக்கிரமான கவிதை.
    இயக்கத்தில் இருக்கும்
    புலியைச் சுட வேறெங்கோ
    சுட வேண்டியிருப்பது
    ஆழமான படிமம்.
    அன்றாடச் செயல்களில்
    கால இடப் பரிமாணங்களின்
    பங்கை எத்தனை குறைத்து
    மதிப்பிட்டுக்கொள்கிறோம்.
    வாலிபன் மறைந்து கிழவன்
    தப்புவதும், குருவி மடிந்து
    வானைக் காப்பாற்றுவதும்
    பிரபஞ்சத்தின் சமநிலைப்
    படுத்தும் ஒரு போக்குதான்.

    தர்க்கரீதியாக எனக்கு
    ‘Sniper’ களின் பிம்பம்
    மனதில் எழுகிறது.
    பார்வைத்திறன், கவனக் குவிப்பு,
    காற்று, வெளி, தற்செயல்,
    இலக்கின் நிலைத்தன்மை என்று
    பல காரணிகளை உத்தேசித்து
    செயல்படுபவர்கள்.
    குண்டு விடுபடும்
    தருணத்திற்கும், இலக்கை
    அடைவதற்கும் உள்ள
    இடைவெளிகள் யாரால்
    நிர்ணயிக்கப்படுகின்றன?

    ‘தவளைக்கல் வீழ்த்தும் தவளை‘
    எனும் குறியீடு தொந்தரவு
    செய்கிறது, மதாரை மீறி எழுந்த
    வரிகள் என்றே எண்ணுகிறேன்.
    சில நேரங்களில் கவிஞர்களின்
    கடிவாளங்களுக்கு சொற்கள்
    அடங்குவதில்லை, இலக்கை
    நோக்கி ஓடிக்கொண்டிருக்கும்
    ஒரு விளையாட்டு வீரன்
    மெல்லத்தான்
    நிலைத்தன்மைக்கு வரமுடியும்,
    எல்லைக்கோட்டைத் தாண்டி சில
    அடிகளேனும் ஒட்டம் எனும் விசை
    அவனை நகர்த்திவிடக்கூடும்,
    கவிமனதின் ஓட்டங்களும்
    அப்படித்தான். என்னால் கடைசி
    ஏழு வரிகளைப் புரிந்துகொள்ள
    முடியவில்லை, கவிதையில் இந்த
    வரிகளின் தேவை ஒரு
    புகைமூட்டக் காட்சியாய்
    தெரிகிறது. அர்த்தம்
    இல்லாமலேயே கவிதை வரிகள்
    மனதுக்குப் பிடிப்பது,
    சலனங்களை ஏற்படுத்துவது,
    கவிதை வாசிப்பின்
    வினோதம்தான்.
    இந்தக் கவிதையில் எனக்கு
    தேவதச்சன் தெரிகிறார்
    என்பதைப் பாராட்டாகவே
    முன்வைக்கிறேன்.

    கவிதையின் கடைசி ஏழு வரிகள்,
    கவிதைகளைப் புரிந்துகொள்தல்
    எனும் புறவயமான
    வரையறையின் கைகளிலிருந்து
    நழுவிப் பறந்துவிடும் தன்மைக்கு
    மிகச் சரியான ஒரு மாதிரி. நீண்ட
    நாட்கள் என் மனதில்
    நிலைக்கப்போகும் கவிதை இது,
    மதாருடைய அடுத்த தொகுப்பில்
    பரவலாகப் பேசப்படும்
    ஒன்றாகவும் அமையலாம்."

    *பாலாஜி ராஜூ*

    "கல்குதிரை, மதார்
    கவிதைகள் பற்றிய
    வாசகர் கடிதம்."

    https://www.jeyamohan.in/166951/

    ReplyDelete