“அறியாமையின் பெருவெளி
சிறகடிக்கத்
தூண்டியது...
அவநம்பிக்கையின்
ஒரு கல்
பறத்தலை
ஊர்தலாக்கியது..!”
*பெருந்தேவி*
“அறியாமையின் பெருவெளி
சிறகடிக்கத்
தூண்டியது...
அவநம்பிக்கையின்
ஒரு கல்
பறத்தலை
ஊர்தலாக்கியது..!”
*பெருந்தேவி*
“சிரித்து
சிரித்து
பேசிவிட்டு
செல்லும்
கோமளாவின்
ஒவ்வொரு
சிரிப்பு
முடிச்சில்...
அவளுக்குத்
தெரியாமலே
அவிழ்ந்து
விழுகிறது
ஏதோவொரு
வலி…
ஏதோவொரு
அவமானம்…
ஏதோவொரு
இயலாமை…
ஏதோவொரு
பொறாமை…
அத்தனையும்
நானும்
சிரித்துக்கொண்டே
ஏதும்
அறியாதவளைப்போல்
கேட்டுக்கொண்டேயிருந்தேன்…
இப்படியான
ஆறுதலைத்
தவிர
வேறு
என்ன
தந்திட
முடியும்
அவளுக்கு..!”
*செ.புனிதஜோதி*
*இழுத்துச் செல்லாது*
“கோரைப் பல்லிலிருந்து
பீரிட்ட
உறுமல்
கழுத்துப்
பட்டியை மீறி
முன்சென்றது.
தொய்வற்ற
சங்கிலியின்
விறைத்த
கண்ணிகள்
வளர்ப்பு
மனிதனின்
வியர்த்த
உள்ளங்கையை
இழுத்தன.
நாய்கள்
மேல் ஒரு அபிமானம்
எனக்கும்
உண்டு.
ஆனாலும்
ஒன்றின்
மீதான அபிமானம்
ஒருநாளும்
என்னை
இழுத்துச்
செல்லாது தெருவெங்கும்..!”
*கல்யாண்ஜி*
*மூக்குக் கண்ணாடி*
“மூக்குக் கண்ணாடி
அணியாமல்
தூரக்காட்சிகளின்
மங்கல்
எனக்கொரு
தைரியத்தைக் கொடுத்துக்கொண்டிருந்தது
மேடை
பயம் விலக
பள்ளி
நாடகமொன்றில்
மூக்குக்
கண்ணாடி அணியாமல்
நடித்த
நாள்
நினைவிற்கு
வந்தது
எதிர்வரும்
மனிதர்கள்
கலங்கலாகிவிட்டனர்
இப்போது
பயம் நீங்கிவிட்டது
பார்வைத்
தெளிவெனும் அச்சம்
என்
வீட்டுப் பரணில் கிடக்கிறது
எத்தனை
நாள்
அதை
தூசி
போகத்
துடைத்திருப்பேன்
அறியாமை
அறியாமை
அந்த
பைனாக்குலர்
இனி
எனக்கு வேண்டாம்
இனி
தூரத்துப் பறவை
என்
கண்களில் பறக்காது
அது
வானத்தில் பறக்கிற
செய்தியை
ஏந்தி வரும்
தபால்காரர்
போதுமெனக்கு..!”
(“கல்குதிரை” இதழ்)
*கைக்குட்டை*
“என் கைக்குட்டை பறந்தது
காற்றில்
தலையிலிருந்து
வானத்தில்
இதுவரை
நான்
வாய் துடைத்தது
ஒரு
சிறகின் முனையில்
சட்டைப்பைக்குள்
ஒளித்து
வைத்திருந்தது
ஒரு
பறவையை
கூண்டை
உதறி
அது
இப்போது
பறந்துவிட்டது
மழையில்
நனைகிறது
என்
கேசம்
கைக்குட்டைக்
கம்பளத்தில்
ஏறிப்
பறக்கிறது
வானின்
ஒரு துளி
கைக்குட்டைக்
கம்பளத்தில்
பறக்கிறது
வளி..!”
*மதார்*
(“கல்குதிரை” இதழ்)“நெடுந்தூர ரயில் பயணம்.
சுட்டிக்
குழந்தையுடன்
இளம்
தம்பதிகள்.
அழுகை
சிரிப்பு
கோபம்
கேள்வி
என
அடிக்கடி மாறிக் கொண்டிருக்கிறது
குழந்தையின்
செயல்கள்.
தேற்றல்
பூரிப்பு
ஆறுதல்
பதில்
என
செயல்களுக்கு
ஏற்றப்படி
நிலைமையை
அந்த
சிறிய வயதிலும்
அழகாக
கையாள்கிறார்
குழந்தையின்
தாய்.
கைப்பேசிக்கு
தாவும்
குழந்தை.
தாய்
வழி, தந்தை வழி
தாத்தா, பாட்டியை
வீடியோவில்
அழைத்து
குழந்தையுடன்
பேச
வைக்கிறார்.
கதைச்
சொல்லியாகி
குழந்தைக்குப்
பிடித்த
நாய், பூனை, யானை
கதைகளால்
பிரமிக்கவும்,
பேய், பூதம், மோகினி
கதைகளால்
பயமூட்டவும்
செய்கிறார்.
எந்தவித
சலிப்புமில்லாமல்
இரண்டடி
இருக்கைக்குள்
எட்டு
மணி நேரப்பயணத்தை
சுட்டிக்
குழந்தையையும்
பயணிப்பவர்களையும்
இனிமையாக்கி
எல்லாருடைய
மனதிலும்
இடம்
பிடித்தும் கொள்கிறார்
அந்த
தாய்..!”
*கி.அற்புதராஜு*