சின்ன சின்ன
ஆசை – சுஜாதா – மணிரத்னம் – வைரமுத்து - ஏ.ஆர்.ரஹ்மான் -
ஆத்மார்த்தி
கரகோஷங்களை
எழுப்புங்கள். மீண்டும் ஒருமுறை. சரி. ஏ.ஆர்.ரஹ்மான் என்னும் இளம் இசையமைப்பாளர்
இசையமைக்கிறார் மணிரத்னத்தின் புதுப்படத்துக்கு. சிவப்பு நிறக் கட்டம் போட்ட சட்டை
அணிந்த இந்த சின்னப் பையன் கையில் செங்குத்தாக வைத்திருக்கக் கூடிய கீபோர்ட் எடையை
எப்படித் தாங்க முடிகின்றது இவரால்...? இசையா..? யார் இந்த சின்னஞ்சிறுவனா..? அடப்போங்கய்யா... இது வரைக்கும் மணிரத்னம் படம்
எனில் பாடலும் பின்னணி இசையும் நன்றாக இருக்கும். அந்த வரலாறு இனி என்னவாகவோ
மாறப்போகிறது.
இது தான் விளம்பரம்
பார்த்தவர்கள் மனங்களில் இருந்த எண்ணம். ஆனால் துரியோதன. கர்ண தளபதி வசூல் ராஜா
மணிரத்னம் இந்த முறை கையில் எடுத்தது சத்யவானை எமன் வாயில் இருந்து மீட்டு வந்த
சாவித்ரியின் நவ உருவம். இந்த முறை அவருக்குக் கைக்கொடுத்தவர் சுஜாதா. இந்த
அத்தியாயம் சினிமாவில் சுஜாதா என்பதை அலசப் போகின்றது. அப்புறம் தான் ரஹ்மான்.
சுஜாதாவே பல
இதழ்களில் பல கட்டுரைகளில் எக்கச்சக்க முறை ஆங்கொன்றும் இங்கொன்றுமாகச்
சொல்லிவிட்டாற் போல் சுஜாதா நினைத்த மாதிரி சினிமா இல்லை. சினிமா நினைத்தாற் போல்
இருக்க, சுஜாதாவுக்கு எந்த
நிர்ப்பந்தமும் இல்லை. தனிப்பேரரசனாக எழுத்துலகில் முடிசூடி வாழ்ந்தவர் சுஜாதா. ஒரு
முறை “இந்தியன் எக்ஸ்பிரஸ்” அவருக்கு 50 லட்சம் வாசகர்கள் இருப்பதாக கணக்கெழுதியது. அன்றைக்கு
தமிழகத்தின் மக்கள்தொகை வெறும் 3 கோடி தான்.
‘நினைத்தாலே இனிக்கும்’, ‘காயத்ரி’, ‘ப்ரியா’, ‘கரையெல்லாம் செண்பகப்பூ’, ‘விக்ரம்’, என சுஜாதாவின் சினிமா பங்காளிகள் பெரும்பாலும்
வென்றவர்களாகவே அமைந்தார்கள். கமலும் சுஜாதாவும் எடுத்த ‘விக்ரம்’ ஒரு முக்கியமான படம். வணிகத்தையும்
கலையையும் கலந்த கலவை ரேஷியோ கொஞ்சம் குழப்பிவிட்டதே தவிர இன்றைக்கும்
எழுத்துக்காக சுஜாதாவும் எடுத்தமைக்காக கமல்ஹாசனும் பெருமைப் பட்டுக்கொள்ளக் கூடிய
முயல்வு தான் விக்ரம்,
சுஜாதாவுக்குள்
இருந்த இன்னொரு சுஜாதா அவரை எப்போதும் அலெர்ட்டில் வைத்திருந்தார். அப்போதுதான்
கவிதாலயா பேனரில் மணிரத்னம் எடுக்கப் போகும் ‘ரோஜா’வுக்குள் வண்டாக சுஜாதா நுழைந்தார். மணிரத்னம் என்றில்லை...
சுஜாதா யாருக்குக் கிடைத்திருந்தாலும் சரி, அவர் ஒரு முழுமையான மனிதர். முழுமையான எழுத்தாளர். இந்த
இரண்டையும் விட அவர் மற்றவர்களை உள்வாங்கி அவர்களை முழுவதுமாகப் பேசவிட்டு அதன்
பின் அவர்களை செரிமானம் செய்து தான் நினைத்ததை நிறுவக் கூடிய அசாத்திய பொறுமையும்
பேரமைதியும் அவர் தம் பலங்கள்.
மணிரத்னமும் கூட
இவ்வகையான குணாம்சம் நிரம்பியவரே... வாடகை வீட்டுக்கு வாஸ்து பார்க்கத் தேவையில்லை
என்ற கணக்காய் அவருக்கு அப்போதைக்குத் தேவை ஒரு எழுத்தாளர் ஒரு வசனகர்த்தா. ஆனால்
சுஜாதாவுக்கு முன் சுஜாதாவுக்குப் பின் என அவர் வாழ்க்கை ஊடுபாவிற்று என்றே
சொல்லலாம். சுஜாதாவுக்கு சினிமா மீது நிறைய்ய காதல். அவரொரு பொறுப்பான காதலர். தன்
காதலான சினிமாவை அவர் நிறைய்ய அறிந்துவைத்திருந்தார். அந்த நேரத்தில் தனக்கு
இதுவரைக்கும் வாய்க்காத சுதந்திரமான சினிமாவுக்கான எழுதுதலை மணிரத்னம் மூலமாகப்
பெற்ற சுஜாதா அழகாகத் திரைக்கதைக்கு வசனம் அமைத்தார்.
பாடல்களுக்கான
சிச்சுவேஷன்களை முடிவு செய்வதில் இருந்து படம் முடிந்து அனைவரும் வெளியே கிளம்பும்
வரை ஒரு இசை அமைப்பாளரின் பணி நிரம்பித் தளும்பும் சினிமாவில். அவரொரு இரண்டாம்
இயக்குநர் என்றே சொல்ல முடியும். அந்த வகையில் வைரமுத்து, சுஜாதா, மணிரத்னம் என மூன்று பேர்
ஒருபுறம்... மறுபுறம் ஏ.ஆர்.ரஹ்மான் என புதுமையான இசையாட்டம் துவங்கியது.
சின்னச் சின்ன ஆசை
பாடல் இந்த அளவுக்கு இந்தியாவைப் புரட்டிப் போடும் என யார் சொல்லியிருந்தாலும்
ரஹ்மானே நம்பி இருக்க மாட்டார். ஆனால் ஒரு பட வாய்ப்பு. முதல் திரைப்பட வாய்ப்பு. அதில்
முதலாம் பாடல். அதிலொரு கதாநாயகி அவளது அறிமுகப் பாடல். அவள் இருக்கிற கிராமப்
பகுதி மலை சார் நிலம். அதிலொரு அருவி. அதில் நனைந்தபடி குளித்தபடி அறிமுகமாகிற
அழகி அவள். இது சிச்சுவேஷன்.
ரஹ்மானைப் பொறுத்தவரை
அவரிடம் முதல் படத்தின் முதல் பாடலில் இருந்து இந்த நொடி வரை முதல் வித்தியாசம்
அவர் மிகத் தனிமையானவர் என்பதால் அவரால் தான் உருவாக்கப் போகும் இசை என்னவாக மலர
வேண்டும் என்ற தன் முன் எதிர்பார்ப்பொன்றை இசைத்திட்டமொன்றை வரைந்து கொள்ள
முடிகின்றது. இது அவருக்கு அவரடைந்த வெற்றிகள் அனைத்திற்கும் மிக ஆதாரமான
அஸ்திவாரம் போன்றது.
தன்னைச் சார்ந்தவர்
அவர் இயக்குநரோ அல்லது வேறு யாராகவும் இருந்தாலும் அவர்கள் தன்னிடம் முன்வைக்கும்
தேவையை உதாரணத்துக்கு... நான் மேலே சொன்ன சிச்சுவேஷனை சொன்னதும் அதனைக்
கையிலெடுத்துக் கொண்டு பாடல் அமைக்க சென்றுவிடுவது என்பது ரஹ்மானின் வழக்கத்தில்
இல்லவே இல்லை. பிறகு என்ன வித்தியாசம் என்றால் அதில் ஒரு மாபெரும் வித்தியாசம்
இருக்கிறது.
ஒரு சிச்சுவேஷன்
தனக்கு முன்னே தேவையாக விரிகையில் அதனை ரஹ்மான் உடனே இசையாக அணுகாமல் ஒலிகளாக
அணுகுகின்றார். இது தான் அவரது முதல் பணி.
அந்த இடத்தில் அந்த
நாயகி அங்கே அவ்வளவு அற்புதமாகக் குளித்தபடி தன் ஏகாந்தத்தை அனுபவிக்கையில் என்ன
மன நிலையில் இருப்பாள் என்பதை உணர்ந்தபடியே அங்கே அந்த சூழல் ‘அந்த இடம்’ அந்த தனிமையில் இயல்பாக
அமையப் பெறுகிற சப்தங்களைக் கோர்க்கத் தொடங்குவார். அதில் இருந்து தான் தன்
பாடலிசைக்கான மைய இழையை நிரடி நிரடி சட்டென்று ஒரு தங்க இழை அகப்பட்டதும் உடனே
அதனை உருவி எடுத்து பாடல் செய்துவிடுகிற வல்லமை ரஹ்மானுடையது. கலோக்கியலாக
சொல்லப்போனால் ரஹ்மான் ஒரு பாட்டுக்கு முன்னால் காத்திருப்பது 10 மணி நேரமென்றால்
அதற்கடுத்த பத்தாம் நிமிடம் பாடல் மொத்தத்துக்கான இசை ரெடி. டபுள் ரெடி என்று
சொல்லலாம்.
மதுபாலா பாத்திரம்
எத்தனை முறை எத்தனை மழைகளில் நனைந்ததோ அதைவிட அதிகமாக மானசீக அருவிமழையில்
நனைந்துகொண்டே ஈரம் சொட்டச் சொட்ட உருவாக்கிய பாடல் தான் சின்ன சின்ன ஆசை. அந்தப்
பாடலின் முன் இசையை அதாவது பாடல் ஆரம்பிப்பதற்கு முன்னால் இருக்கிற பிட்டை மட்டும்
ஒலிக்கச் செய்து பாருங்கள். கண்மூடி கேட்டால் நம் மனங்களில் ஈரம் கசியும். பிசுபிசுக்கும்
நீர்மை.
இங்கே தான் ரஹ்மான்
வித்தியாசப்பட்டார். எடுத்த எடுப்பிலேயே இசையைப் பல கருவிகளைக் கொண்டு ஓசைக்கு
நிகராய் ஒலிக்க செய்யும் அன்றைய பாணியில் இருந்து மெல்ல தன்னை விலக்கிக் கொண்டு
அந்த இசையை ஒரு பெண்ணாக்கி, மெல்ல அதனை பூனைப்
பாதங்களால் நடக்கச் செய்து அதன் பின் அருவிக்கரையில் ஏறி சரியாக நீர் விழும்
இடத்தை நெருங்கி அதன் பின் பாடலைத் துவக்கி இருப்பார். இன்னும் சில
அத்யாயங்களுக்கு அப்புறம் முன்பே வா என் அன்பே வா பாடலில் ரஹ்மானின் மாயாஜாலம்
பற்றி குறிப்பிடுகையில் இதே போன்றதொரு உணர்வு மீளுரு செய்யப் படும். அதனை பிறகு
பார்க்கலாம்.
குரலையும் இசையையும்
தனித்தனியாக பிரித்ததே ரஹ்மான் செய்த அடுத்த வித்தியாசம். குரல் மேலேறுகையில் இசை
பம்மியதும் இசை மேலேறுகையில் குரல் கம்மியதும் அதுவரை நிகழ்ந்தவை.அப்படி இல்லாமல்
அதற்கு மாற்றாக இரண்டையும் இணைத்துப் பிசைந்தார் ரஹ்மான்.
சின்னச் சின்ன ஆசை
தமிழ் நிலத்தைப் புரட்டிப் புரட்டி அடித்தது.
** ** **
No comments:
Post a Comment