எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 8 March 2014

படித்ததில் பிடித்தது (யானை டாக்டர் - ஜெயமோகன்)


மனிதனின் கீழ்மைகளை ஒவ்வொருநாளும் முகத்திலறைந்தது போலப் பார்க்கவேண்டும் என்றால் நீங்கள் காட்டில் இருக்கவேண்டும். அனேகமாக இங்கே சுற்றுப்பயணம் வருபவர்கள் படித்தவர்கள், பதவிகளில் இருப்பவர்கள். ஊரில் இருந்தே வறுத்த பொரித்த உணவுகளுடனும் மதுக்குப்பிகளுடனும்தான் வருவார்கள். வரும் வழிதோறும் குடித்துக்கொண்டும் தின்றுகொண்டும் இருப்பார்கள். வாந்தி எடுப்பார்கள். மலைச்சரிவுகளின் மௌனவெளியை காரின் ஆரனை அடித்துக்கிழிப்பார்கள். முடிந்தவரை உச்சமாக கார் ஸ்டீரியோவை அலறவிட்டு குதித்து நடனமிடுவார்கள். ஓங்கிய மலைச்சரிவுகளை நோக்கி கெட்டவார்த்தைகளை கூவுவார்கள்.
ஒவ்வொரு காட்டுயிரையும் அவர்கள் அவமதிப்பார்கள். சாலைஓரத்துக் குரங்களுக்கு கொய்யாபழத்தை பிளந்து உள்ளே மிளகாய்ப்பொடியை நிரப்பி கொடுப்பார்கள். மான்களை நோக்கி கற்களை விட்டெறிவார்கள். யானை குறுக்கே வந்தால் காரின் ஆரனை உரக்க அடித்து அதை அச்சுறுத்தி துரத்துவார்கள். என்னால் எத்தனை யோசித்தாலும் புரிந்துகொள்ள முடியாத விஷயம் காலிமதுக்குப்பிகளை ஏன் அத்தனை வெறியுடன் காட்டுக்குள் வீசி எறிகிறார்கள் என்பது. வண்டிகளை நிறுத்தி சோதனையிட்டு மதுக்குப்பியுடன் இருப்பவர்களை இறக்கி பெல்ட்டை கழற்றி வெறியுடன் ரத்தம் சிதற அடித்திருக்கிறேன். ஜட்டியுடன் கடும்குளிரில் அலுவலகம் முன்னால் அமரச்செய்திருக்கிறேன். ஆனாலும் காட்டுச்சாலையின் இருபக்கமும் குப்பிச்சில்லுகள் குவிவதை தடுக்கவே முடிவதில்லை.
மற்ற எந்த மிருகத்தைவிடவும் யானைக்கு மிக அபாயகரமானது அந்த குப்பி உடைசல். யானையின் அடிக்கால் ஒரு மணல்மூட்டை போன்றது. குப்பிகள் அனேகமாக மரத்தில் மோதி உடைந்து மரத்தடியிலேயே கிடக்கும். யானை அதன் மகத்தான எடையுடன் அதன்மேல் காலை வைத்தால் குப்பி நேராக அதன் பாதங்களுக்குள் முழுக்க புகுந்துவிடும். இருமுறை அது காலைத்தூக்கி வைத்தால் நன்றாக உள்ளே செல்லும். அதன் பின்னால் யானை நடக்கமுடியாது. இரண்டே நாட்களில் காயம் சீழ் வைக்கும். புழுக்கள் உள்ளே நுழையும். புழுக்கள் சதையை துளைத்து சீழை உள்ளே கொண்டுசெல்லும். முக்கியமான குருதிப்பாதைகளையோ எலும்பையோ அவை தொட்டுவிட்டதென்றால் அதன்பின் யானை உயிருடன் எஞ்சாது.
வீங்கிப் பெருத்து சீழ் வழியும் கால்களுடன் பலநாட்கள் யானை காட்டில் அலையும். ஒரு கட்டத்தில் நடமாட முடியாமலாகும்போது ஏதாவது மரத்தில் சாய்ந்து நின்றுவிடும். ஒருநாளில் முப்பது லிட்டர் தண்ணீர் குடித்து இருநூறு கிலோ உணவு உண்டு ஐம்பது கிலோமீட்டர் நடந்து வாழவேண்டிய உயிர் அப்படி ஐந்து நாட்கள் நின்றால் மெலிந்து உருக்குலைந்துவிடும். முதுகு எலும்பு மேலே துருத்தும். கன்ன எலும்புகள் புடைத்தெழும். காது அசைவது குறையும். மத்தகம் தாழ்ந்து தாழ்ந்து வரும். மெல்ல துதிக்கையை தரையில் ஊன்றி குப்புறச்சரிந்து நிற்கும். பின் மத்தகமே தரையில் ஊன்றும். அடுத்தநாள் பக்கவாட்டில் சரிந்து வயுறு பாறைபோல மறுபுறம் எழுந்து நிற்க விழுந்து கிடக்கும். வாலும் துதிக்கையும் மட்டும் சுழல கண்களை மூடித்திறந்தபடி நடுங்கிக்கொண்டிருக்கும். பிற யானைகள் அதைச்சூழ்ந்து நின்று தலையாட்டி பிளிறிக்கொண்டிருக்கும்.
அதன்பின் யானை சாகும். கடைசி துதிக்கை அசைவும் நின்றபின்னரும்கூட பலநாள் யானைக்கூட்டம் சுற்றி நின்று கதறிக்கொண்டிருக்கும். பின்னர் அவை அதை அப்படியே கைவிட்டு பலகிலோமீட்டர் தள்ளி முற்றிலும் புதிய இன்னொரு இடம் நோக்கிச் சென்றுவிடும். யானையின் தோலின் கனம் காரணமாக சடலம் அழுகாமல் இந்தக்காட்டில் எந்த மிருகமும் அதை சாப்பிட முடியாது. அழுகிய யானையை செந்நாய்கள் முதலில் தேடிவந்து வாயையும் குதத்தையும் மட்டும் கிழித்து உண்ணும். பின்னர் கழுகுகள் இறங்கி அமரும். கழுதைப்புலிகள் கூட்டம் கூட்டமாக வெகுதொலைவிலிருந்து தேடிவரும். மனிதனைவிட நூற்றிஎழுபது மடங்கு அதிக நியூரான்கள் கொண்ட மூளை கொண்ட காட்டின் பேரரரசன் வெறும் வெள்ளெலும்புகளாக மண்ணில் எஞ்சுவான்.
ஒருமுறை முதுமலையில் ஒரு யானைக்கு கால்வீங்கி அது காட்டில் அலைவதாக தகவல் வந்தபோது டாக்டர் கேயுடன் நானும் சென்றேன். காட்டுக்குள் அந்த யானை இருக்குமிடத்தை குறும்பர் ஏற்கனவே கண்டு வைத்திருந்தார்கள். அவர்களை ஏற்றிக்கொண்டு ஒரு ஜீப்பில் காட்டுக்குள் நுழைந்தோம். அதுவும் பழங்கால குதிரைப்பாதைதான். நெடுந்தூரம் சென்றபின் ஜீப்பை நிறுத்திவிட்டு நானும் டாக்டரும் காட்டுக்குள் சரிவிறங்கிச் சென்றோம். துப்பாக்கியுடன் இரு வனக்காவலர்களும் மற்ற பொருட்களுடன் இரு குறும்பர்களும் கூடவந்தார்கள்.
உடலை அறுக்கும் வேய்மூங்கில் இலைகளை அகற்றி டாக்டர் கே முன்னால் சென்றுகொண்டே இருந்தார். தரையில் வேர்முடிச்சுகள் காலை தடுக்கின. நான் மரங்களைப்பற்றிக்கொண்டு நடந்தேன். எழுபதை நெருங்கினாலும் டாக்டர் கே மிகக் கச்சிதமான உடல் கொண்டவர். காடு அவருக்கு மீனுக்கு கடல்போல. கொஞ்சநேரத்தில் காற்றில் யானைகளின் நெடி மெலிதாக வர ஆரம்பித்தது. யானைகள் ஏற்கனவே எங்களைக் கவனித்துவிட்டன என்று தெரிந்தது. மெல்லிய யானை உறுமல்கள் கேட்டன. இன்னும் கொஞ்சம் இறங்கிச்சென்றபோது இருபக்கமு மூங்கில்பத்தைகள் பரவிய ஓடை ஒன்றுக்கு அப்பால் பச்சைநிறமாக வெயில் தேங்கி நின்ற புல்வெளியில் பன்னிரண்டு யானைகள் கூட்டமாக நிற்பதைக் கண்டோம்
இன்னும்கூட யானைகள் இருக்கலாமென்று நினைத்து கண்களை ஓட்டியபோது மேலும் ஆறு யானைகள் மூங்கில் புதர்களுக்குள் மேய்ந்துகொண்டு நிற்பது தெரிந்தது. அங்கே நான்கு குட்டிகள் நிற்பது மேலும் கூர்ந்து நோக்கியபோது தெரிந்தது. டாக்டர் கே தன் கருவிகளை எடுத்து பொருத்திக்கொண்டார்.சிறிய ஏர்கன் போன்ற ஒன்று. அதில் மாத்திரையே குண்டாக இருக்கும்.யானையை கூர்ந்து தொலைநோக்கியால் கவனித்தார். அதன் எடையை அவதானிக்கிறார் என்று தெரிந்தது. எடைக்கு ஏற்பத்தான் அந்த யானைக்கான மயக்கமருந்து அளவை தீர்மானிக்க முடியும்.
அவர் முழுமையாக தனக்குள் மூழ்கி வேலைசெய்வதை பார்த்துக்கொண்டிருந்தேன். கருவிகளைப் பொருத்தி கையில் எடுத்துக்கொண்டதும் ‘நீங்க இங்க இருங்க…நான் போய் பாக்கறேன்’ என்றேன். அவரிடம் எதுவும் சொல்லமுடியாதென்று ஏற்கனவே நன்றாக அறிந்திருந்தேன். ‘அது பெரிய மரத்தடி பக்கத்திலே நின்னிட்டிருக்கு. கீழே விழுந்தா அடிபட்டிரும். அத கொஞ்சம் சதுப்புக்கு கொண்டு வரணும். மத்தயானைகளுக்கு நான் என்ன செய்யப்போறேன்னு தெரியாது. அதனால அதுங்க ரெஸிஸ்ட் பண்ணும்’ என்றார். ‘யானைகளுக்கு தெரியுமா, இந்த காயத்துக்குக் காரணம் மனுஷங்கதான்னு’ ‘கண்டிப்பா…ரொம்பநன்னா தெரியும்’ ‘அப்ப என்ன பண்றது?’ என்றேன். ‘பாப்போம்’ என்றார்.
டாக்டர் கே மெதுவாக கீழே இறங்கி ஓடையைக் கடந்து சேற்றுப்பரப்பில் இறங்கினார். யானைகள் அழுந்த நடந்து உருவான குழிகள் கால் உள்ளே போகுமளவுக்கு ஆழமாக நெருக்கமாக படிந்திருந்தன. அவற்றின் விளிம்புகளில் கால் வைத்து மெதுவாக அவற்றை நெருங்கினார். யானைகளின் நடுவே நின்ற பெரிய பிடியானை உரக்க உறுமியது. அதைக்கேட்டு மற்ற யானைகளும் பிளிறின. ஒரு யானை டாக்டர் கேயை நோக்கி திரும்பியது. அதன் காதுகள் வேகமாக அசைந்தன. தலையை வேகமாக குலுக்கியபடி டாக்டரை நோக்கி வந்தது. டாக்டர் கே அசையாமல் நின்றார். அது மேலும் தலையைக் குலுக்கி எச்சரிக்கை விடுப்பது போல உறுமிக்கொண்டு இன்னும் இரண்டடி முன்னால் வந்தது.
யானை தலையைக்குலுக்கினால் அது எச்சரிக்கிறது, தாக்குவேன் என்கிறது என்றுதான் அர்த்தம். என் இதயத்துடிப்பை காதுகளில் கேட்டேன். எழுந்து ஓடி டாக்டரிடம் சென்று அவர் அருகே நின்றுகொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டேன். என் கண்ணெதிரே டாக்டரை யானை சிதைத்துப்போட அதைப்பார்த்தபடி சும்மா இருந்தால், அவரது சடலத்தை சுமந்தபடி திரும்பிச்செல்ல நேர்ந்தால் நான் என்னை ஒருபோதும் மன்னிக்கப்போவதில்லை. ஆனால் என்னால் அசைய முடியவில்லை. என் நாக்கு வரண்டு உள்ளே இழுத்துக்கொண்டு வாய் காலியாக இருப்பதைப்போல் இருந்தது.
டாக்டர் கே அசையாமல் சில நிமிடங்கள் நின்றார். யானையும் அசையாமல் நின்றது. பிற யானைகள் மொத்தமும் உடலால் அவரைக் கவனிக்கின்றன என்று தோன்றியது. டாக்டர் கே மேலும் முன்னே சென்றார். இப்போது அந்த யானை நெருங்கி வந்தது. ஆனால் தலையை குலுக்கவில்லை. மத்தகத்தை நன்றாக தாழ்த்தியது. அதுவும் எச்சரிக்கை அடையாளம்தான். டாக்டர் கே சீராக அதைநோக்கிச் சென்று அதன் முன் நின்றார். அது பேசாமல் நின்றது. நெடுநேரம். என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை. பலமணிநேரம் ஆகிவிட்டதென்று தோன்றியது
என்ன நடந்தது என்றே தெரியவில்லை, அந்த யானை பின்வாங்கியது. பெரிய பிடியானை திரும்பி டாக்டர் கே-யை பார்த்து உறுமியபின் வாலை சுழற்றி வைத்துக்கொண்டது. பின்பு ஒவ்வொரு யானையாக மேலே ஏறி மறுபக்க மலைச்சரிவில் மூங்கில் கூட்டங்களுக்குள் சென்றன. கடைசி யானையின் வால்சுழற்சியும் பச்சை இலைகளுக்குள் மறைவது வரை நம்பமுடியாமல் நான் பார்த்து நின்றேன். டாக்டர் கையை தூக்கி எங்களிடம் வரும்படி சைகை காட்டினார். நானும் பிறரும் ஒடைக்குள் இறங்கி சென்றோம்
எங்களைக்கண்டதும் காயம்பட்ட யானை கோபத்துடன் தலையை குலுக்கி முன்னால் வர முயன்றது. பின்பு மெல்ல பிளிறிவிட்டு அங்கேயே நின்றது. டாக்டர் எங்களை மேலும் அருகே வரச்சொன்னார். வனக்காவலர்கள் நின்று விட்டார்கள். நானும் குறும்பர்களும் மட்டும் முன்னால் சென்றோம். யானை சட்டென்று சாய்ந்திருந்த மரம் அதிர நிமிர்ந்து எங்களை நோக்கி வந்தது. அதன் பின்னங்கால் வீங்கி மற்ற கால்களைவிட இருமடங்காக இருந்தது. அதை கிட்டத்தட்ட இழுத்துத்தான் அது முன்னகர முடிந்தது.
அது நாலடி முன்னால் வந்ததும் டாக்டர் அதைச் சுட்டார். மாத்திரை அதன் தோளுக்கு மேல் பதமான சதையில் புதைந்ததும் யானை உடல் அதிர்ந்து அப்படியே நின்றது. காதுகளை அசைப்பது நின்றது. பின்பு வேகமாக அசைக்க ஆரம்பித்தது. அந்த அசைவு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. முன்காலை கொஞ்சம் வளைத்து ஆடியது. சட்டென்று பக்கவாட்டில் விழுந்து சேற்றை அறைந்து புல்மேல் விழுந்தது. துதிக்கை புல்மேல் ஒரு தனி விலங்கு போல புரண்டது. துதிக்கையின் நுனி மட்டும் தூக்கி சிறிய நாசிக்குமிழ் அசைய எங்களை வாசம் பிடித்தபின் யானை அசைவிழந்தது.
டாக்டர் கே யானையின் அருகே அமர்ந்து சுறுசுறுப்பாக வேலையை தொடங்கினார். நான் அவருக்கு உதவினேன். எங்களைச்சுற்றி மூங்கில் காடுகளுக்குள் யானைகள் எங்களையே கூர்ந்து நோக்கிக்கொண்டு நிற்பதை உணர்ந்தேன். என் முதுகு மேல் குளிர்ந்த பனிக்காற்று போல அவற்றின் பார்வையை அறிந்தேன். ஏதாவது ஒரு கணத்தில் அந்த யானைகளுக்கு நாங்கள் தவறாக ஏதோ செய்கிறோம் என்று தோன்றினால் என்ன ஆகும்?
யானையின் காலில் பாதி பீர்புட்டி ஒன்று முழுமையாக உள்ளே ஏறியிருந்தது. அதைச்சுற்றி சீழ் கட்டி சீழில் புழு வைத்து சிறுதேன்கூடு போல பொருக்கோடியிருந்தது. கத்தியால் டாக்டர் கே அந்தப்பொருக்கை வெட்டியதும் பெரிய தயிர்க்கலயம் உடைந்தது போல சீழ் வெளியே கொட்டியது. தேன்கூடு போல சிறிய துளையறைகளுக்குள் வெண்புழுக்கள் நெளிந்தன. டாக்டர் அந்த சீழபட்ட சதையை முழுக்க சிறிய கோடாலி போன்ற கருவியால் வெட்டி எடுத்தார். புழுக்கள் என் கைகளில் ஏறின. அவற்றை சுண்டி எறிந்தேன். மொத்த சீழையும் வெட்டி வீசியபின் பீர்க்குப்பி ஆழப்பதிந்திருந்த சதையை கத்தியால் அறுத்து எடுத்து வீசி காயத்தை நன்றாக விரித்து புட்டியை உருவி எடுத்தார். ஆச்சரியமாக இருந்தது. கிட்டத்தட்ட என் கையளவு பெரிய புட்டி.
‘ஒருவாரம் கூட ஆகலை, பொழைச்சுது’ என்றார் டாக்டர் கே. புட்டியை உருவியதும் மேலும் சீழ் கொட்ட ஆரம்பித்தது. அந்தப்பகுதிச்சதையை முழுக்க வெட்டி ,சீவி எடுத்து வெளியே கொட்டினார். சீழ் வாடை குறைந்து குருதிவாடை எழ ஆரம்பித்தது. குருதி ஊறி சிவப்பாக புண்ணை நனைத்து வழிந்து பின் குமிழியிட ஆரம்பித்ததும் தலையணை அளவுக்கு பஞ்சை எடுத்து அதில் மருந்தை நனைத்து உள்ளே திணித்து இறுக்கி வைத்து பெரிய பேண்டேஜ் நாடாவால் சுற்றிக்கட்டினார். அதன் பசை இறுக்கமாக ஒட்டிக்கொண்டது. அதன் காலின் கூடாரத்துணிபோன்ற தோலின் மீது சிறிய எவர்சில்வர் கிளிப்புகளை குத்தி இறுக்கி அதனுடன் பேண்டேஜை சேர்த்து ஒட்டிக்கட்டி இறுக்கி முடித்தார். அதன் மேல் கீழே கிடந்த கரிய சேற்றை அள்ளி நன்றாக பூசிமூடினார்.
யானையின் காதில் அதை திரும்பவும் கண்டுபிடிப்பதற்கான சிக்னலர் கம்மலை குத்தி அணிவித்து விட்டு எழுந்தோம். எங்கள் உடைகளும் கைகளும் முழுக்க ரத்தமும் சீழுமாக இருந்தது. புழுக்களை உதறிவிட்டு பொருட்களை சேகரித்துக்கொண்டு கிளம்பினோம். திரும்பி வந்து ஓடையில் கைகளை கழுவிக்கொண்டிருந்தபோது பிளிறல் ஒலியுடன் யானைகள் ஒவ்வொன்றாக இறங்கி வந்து அந்த யானையைச் சூழ்ந்து கொண்டன. அந்த யானைப்பாட்டி கிடந்த யானையின் காலில் பெரிதாக தெரிந்த பாண்டேஜை துதிக்கையால் தடவி பரிசோதனைசெய்து மெல்ல பிளிற மற்ற யானைகளும் பிளிறின. சில யானைகள் அப்பகுதியில் பரவிக்கிடந்த குருதியை துதிக்கையால் மோப்பம் பிடித்தன. ஒரு யானை அங்கே நின்று காதுகளை முன்னால் தள்ளி எங்களை பார்த்தது
’பேண்டேஜை அவுத்திராதில்ல?’ என்றேன். ‘அதுக்கு தெரியும்’ என்றார். ‘ஆனா யானைக்கு பொதுவா வெள்ளை நிறம் புடிக்காது. சேறு பூசலைன்னா நிம்மதியில்லாம காலை நோண்டிண்டே இருக்கும்.’ ‘குணமாயிடுமா?’ என்றேன். அனேகமா பதினஞ்சுநாளிலே பழையபடி ஆயிடும். யானையோட ரெஸிஸ்டென்ஸ் பயங்கரம். சாதாரண ஆண்டிபயாட்டிக் கூட அபாரமா வேலைசெய்யும்’ என்றார். முதுமலையில் இருந்து மீண்டும் டாப்ஸ்லிப்புக்கு காரில் திரும்பும்போது டாக்டர் கே சொன்னார் ‘என்ன ஒரு டிவைன் பீயிங். என்னிக்காவது தமிழ்நாட்டிலே யானை இல்லாம போனா அப்றம் நம்ம பண்பாட்டுக்கே என்ன அர்த்தம்? மொத்த சங்க இலக்கியத்தையும் தூக்கிப்போட்டு கொளுத்திர வேண்டியதுதான்’

                                                                                         *** ***

[ ஜெயமோகன் எழுதிய "அறம்" சிறுகதை தொகுப்பில் "யானை டாக்டர்" சிறுகதையிலிருந்து சில பகுதிகள்...முழுவதும் படிக்க... http://www.jeyamohan.in/?p=12433 ]

No comments:

Post a Comment