எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday 31 March 2014

படித்ததில் பிடித்தவை (தூர் – நா.முத்துக்குமார் கவிதை)

                                                                             
“வேப்பம் பூ மிதக்கும்
எங்கள் வீட்டு கிணற்றில்
தூர் வாரும் உற்சவம்
வருடத்துக்கு ஒரு முறை
விஷேசமாக நடக்கும்.

ஆழ் நீருக்குள்
அப்பா முங்க முங்க
அதிசயங்கள் மேலே வரும்...
கொட்டாங்குச்சி, கோலி, கரண்டி,
துருப்பிடித்தக் கட்டையோடு
உள் விழுந்த ராட்டினம்,
வேலைக்காரி திருடியதாய்
சந்தேகப்பட்ட வெள்ளி டம்ளர்...
எடுப்போம் நிறையவே!                                                                                   

‘சேறுடா சேறுடா’ வென
அம்மா அதட்டுவாள்
என்றாலும்
சந்தோஷம் கலைக்க
யாருக்கு மனம் வரும்?

படை வென்ற வீரனாய்
தலைநீர் சொட்டச் சொட்ட
அப்பா மேலே வருவார்.

இன்று வரை அம்மா
கதவுக்குப் பின்னிருந்துதான்
அப்பாவோடு பேசுகிறாள்.

கடைசி வரை அப்பாவும்
மறந்தேப் போனார்
மனசுக்குள் தூர் எடுக்க..!”

                 -    நா. முத்துக்குமார்.

(கணையாழி இதழ் விழா ஒன்றில் எழுத்தாளர் சுஜாதா பேசிய போது, “கணையாழி இதழில் வர்ற கவிதைகளை, கடந்த 10 வருஷமா நான்தான் தேர்ந்தெடுத்துட்டு வர்றேன். இந்தக் கணையாழி இதழ்லகூட ஒரு கவிதை வந்திருக்கு. தமிழில் வெளிவந்த சிறந்த 25 கவிதைகளை பட்டியலிடச் சொன்னால் ‘தூர்’ கவிதையை அதில் நான் சேர்ப்பேன்” என்றார். உலகத்துக்கு நா.முத்துக்குமார் அவர்களை வெளிச்சம் போட்டு காட்டிய நிகழ்ச்சி அது.)

8 comments:

  1. எனக்கு புடித்துஇருக்குது

    ReplyDelete
  2. இந்த மதிரி அனுப்புங்க

    ReplyDelete
  3. மிகச்சிறந்த சிந்தனை நா.முத்துக்குமார் ஒரு மிச்சிறந்த படைப்பாளன்...

    ReplyDelete
  4. எனது மனம் சோர்வடையும்போது ஆறுதலான வரிகள் ❤️இக்கவிஞனின் வரிகள்.....

    ReplyDelete
  5. கவிஞர்களும் பாடலாசிரியர்களும் வான்நிலாவையும் விண்மீன்களையும் உவமை செய்து கொண்டிருந்த காலங்களில்
    .
    .
    .
    .
    .
    மீன் விற்பவளையும் அவளது வட்ட பொட்டுக்களையும் வர்ணித்து கொண்டிருந்தவன் இவன்.....
    .
    .
    .
    .
    வானில் பறவையின் கால் தடம் தேடியவன்......
    .
    .
    .
    .
    .
    கால் தடம் இல்லாமல் மனதில் பதிந்தவன்.....
    .
    .
    .
    .
    இந்த வாய்மொழிக்கு எல்லாம் சொந்தகாரன்
    ❤முனைவர்.நா.முத்துக்குமார் ❤
    அவர்கள்.....
    🙏🙏🙏🙏🙏🙏🙏

    ReplyDelete
  6. யதார்த்தமான செயல்கள் கவிதைகள் ஆகும்போது அதன் சுவை அசாதாரனமாஇருக்கும்.

    ReplyDelete