எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday, 31 March 2014

படித்ததில் பிடித்தவை (தூர் – நா.முத்துக்குமார் கவிதை)

                                                                             
“வேப்பம் பூ மிதக்கும்
எங்கள் வீட்டு கிணற்றில்
தூர் வாரும் உற்சவம்
வருடத்துக்கு ஒரு முறை
விஷேசமாக நடக்கும்.

ஆழ் நீருக்குள்
அப்பா முங்க முங்க
அதிசயங்கள் மேலே வரும்...
கொட்டாங்குச்சி, கோலி, கரண்டி,
துருப்பிடித்தக் கட்டையோடு
உள் விழுந்த ராட்டினம்,
வேலைக்காரி திருடியதாய்
சந்தேகப்பட்ட வெள்ளி டம்ளர்...
எடுப்போம் நிறையவே!                                                                                   

‘சேறுடா சேறுடா’ வென
அம்மா அதட்டுவாள்
என்றாலும்
சந்தோஷம் கலைக்க
யாருக்கு மனம் வரும்?

படை வென்ற வீரனாய்
தலைநீர் சொட்டச் சொட்ட
அப்பா மேலே வருவார்.

இன்று வரை அம்மா
கதவுக்குப் பின்னிருந்துதான்
அப்பாவோடு பேசுகிறாள்.

கடைசி வரை அப்பாவும்
மறந்தேப் போனார்
மனசுக்குள் தூர் எடுக்க..!”

                 -    நா. முத்துக்குமார்.

(கணையாழி இதழ் விழா ஒன்றில் எழுத்தாளர் சுஜாதா பேசிய போது, “கணையாழி இதழில் வர்ற கவிதைகளை, கடந்த 10 வருஷமா நான்தான் தேர்ந்தெடுத்துட்டு வர்றேன். இந்தக் கணையாழி இதழ்லகூட ஒரு கவிதை வந்திருக்கு. தமிழில் வெளிவந்த சிறந்த 25 கவிதைகளை பட்டியலிடச் சொன்னால் ‘தூர்’ கவிதையை அதில் நான் சேர்ப்பேன்” என்றார். உலகத்துக்கு நா.முத்துக்குமார் அவர்களை வெளிச்சம் போட்டு காட்டிய நிகழ்ச்சி அது.)

Sunday, 30 March 2014

படித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)

                                                                                 
1. “தவழும் குழந்தையை
   தாய் அழைக்க
   தட்டு தடுமாறி எழுந்து
   முதல் அடி எடுத்து வைத்து
   அம்மாவை நெருங்க...

   கடவுளிடமிருந்து
   ஒவ்வொரு அடியாக
   விலகத் தொடங்கியது..!”

                                      -    பா. மதியழகன்.

                                             

2. “மடக்கும் விரல்களைப் போல
   பலம் இல்லை
   நீட்டும் விரல்களுக்கு..!”


                                         -    ரத்னப்பிரியன்.

Saturday, 29 March 2014

படித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)

                                                         
1. “இந்த
   உலகத்திற்கு
   நீ
   யாரோ
   ஒருவன்தான்..!

   ஆனால்
   யாரோ
   ஒருவருக்கு
   நீதான்
   உலகம்..!”

                             

2. “கவர்ந்திழுக்கும்
   ஆளையெல்லாம்
   காதலித்துவிட
   முடிவதில்லை...

   அவ்வகையில்
   ஆசிர்வதிக்கப்பட்டது
   நட்பு..!”

        -  ச. பிரேம்குமார்.

Friday, 28 March 2014

படித்ததில் பிடித்தவை (சிரிப்பு – வைரமுத்து கவிதை)

                                         
"ஒரு
பள்ளத்தாக்கு முழுக்கப்
பூப் பூக்கட்டுமே
ஒரு
குழந்தையின் சிரிப்புக்கு ஈடாகுமா?
சிரிப்பு
இடம்மாறிய முரண்பாடுகளே
இதிகாசங்கள்.
ஒருத்தி
சிரிக்கக்கூடாத இடத்தில்
சிரித்துத் தொலைத்தாள்
அதுதான் பாரதம்.
ஒருத்தி
சிரிக்க வேண்டிய இடத்தில்
சிரிப்பைத் தொலைத்தாள்
அதுதான் ராமாயணம்."
                      -    கவிஞர் வைரமுத்து.

Thursday, 27 March 2014

படித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)

                                                                       
1. “தன் மகன்
   இல்லையென்று
   உறுதியான பின்
   பார்த்தவள்
   அழுகை நின்றது.

   பார்க்கப் போகிறவளுக்கு
   அழுகை
   ஆரம்பித்தது...”
                                                -    கவிஜி.
                                         

2. “ஆற்றில்
   கபடிப் போட்டி
   ஆடுகளம் தயாரானது...

   அரை லோடு
   மணல் அடித்து..!”

                              -    சுசீ மைந்தன்.

Wednesday, 26 March 2014

படித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)

   
                                                           
1. “விதம் விதமாய்
   மீசை வைத்தோம்...
   வீரத்தை எங்கேயோ         
   தொலைத்து விட்டோம்..!”   
                                      
                                          -    கந்தர்வன்.

                                 
2. “வெற்றுத் தாளில்
   கோடீஸ்வரனாய்
   ஆக்கிக் காட்டுகிறார்
   எம். எல். எம்.
   ஆசாமி..!”

                        -   செல்வேந்திரன்.

Tuesday, 25 March 2014

படித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)

                                                     
1. “காதலிக்கும் போது
   எல்லா மனிதனும்
   கவிஞனாகிறான்!”




                                                                           

2. “பருவத்தில்       
   பன்றிக்கூட
   அழகாக இருக்கும்!”

           -   எஸ். மோகன்தாஸ்.

Monday, 24 March 2014

படித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)

                                                                 
1. “ஈழத்தில்
   யுத்த 
   பிட்சுக்கள்!”

          -    யு.கே.செங்கோட்டையன்.



                    
2. தாத்தாவுடையது...
  தோப்பும், துரவும்.

  அப்பாவுடையது...
  தோட்டம், வீடு.

  என்னுடையது...
  வீட்டுக்குள் தோட்டம்
  ‘போன்ஸாய்’.

            -   நாராயணன் வெங்கிட்டு.

Sunday, 23 March 2014

படித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)

                                                                       
1. “இரண்டடி
   இடத்தையே
   எடுத்துக்கொண்டு
   உயர்ந்து
   தன்
   அன்பை
   விரித்திருக்கிறது
   மரம்!”
                   -   தேவதேவன்.
                                      

2. “ஒன்றை
   சத்தமாக
   சொல்வதை விட
   கிசுகிசுப்பாகச்
   சொல்லும்போது
   மக்கள்
   நம்பிவிடுகிறார்கள்..!”

Saturday, 22 March 2014

படித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)

                                                                                   
1. “ஆயிரம் ஆயிரமாய்
   அநியாயங்கள்
   அகலமாய்
   நீளமாய் நடக்கையில்
   அங்குலங்கூட நகரவில்லை
   காளியின் திரிசூலம்..!”
                                               
                                                  -   கந்தர்வன்.

                                    

2. “நூறு முறை
   கொள்ளி வைத்தது
   ஒரு முழக்கயிறு...
   பெட்டிக்கடை வாசலில்!”

                                    -    உமா மகேஸ்வரி.