எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday, 20 November 2013

*வெங்காயம்*

 

“வெங்காயம் நறுக்க 

சொல்லும் போதெல்லாம்...

மருமகள் மாமியாரை

அழ வைக்கிறார்..!”

 

 *கி.அற்புதராஜு*

Tuesday, 19 November 2013

*இடைவெளி*



“வெளியூரில் உள்ள

கல்லூரியில்        

மகனை சேர்த்து 

ஹாஸ்டலில் 

விட்டு வந்த 

தாய், தந்தை... 


வீட்டுக்கு திரும்பியவுடன் 

நடந்தவற்றை தந்தை 

தன்னுடன் பணிபுரியும் 

அலுவலக நண்பருக்கு 

விலாவாரியாக 

விவரித்துக்கொண்டிருந்தார் 

தொலைபேசியில்... 


பேரனைப் பற்றிய 

உரையாடலை 

வராந்தாவிலிருந்த 

தாத்தாவும், பாட்டியும் 

கேட்டுக் கொண்டிருந்தனர்..!”

 

 *கி.அற்புதராஜு*

Monday, 18 November 2013

*மேய்ச்சல் நிலம்*

“பயணங்களில்... 

ஜேம்ஸ் ஹேட்‌லீ சேஸோ, 

சுஜாதாவோ... 


யாருடைய நாவலை படித்தாலும்,

ஆவலுடன் மேய்கிறோம்... 


பக்கத்து இருக்கையில் இருப்பவர் 

படிக்கும் தினசரியை..!”

 

*கி.அற்புதராஜு*


Sunday, 17 November 2013

*மஞ்சள் பை*



“கிராமங்களில் 
உறவினர்களிடையே 
பண்ட பரிமாற்றம் 
தினமும் நடைப்பெறும். 
எல்லாமே மஞ்சள் பையில்தான்..!

 

தேங்காய், மாங்காய், 
வத்தல், வடாம், 
காய்கள்... 
என சகலமும். 

 

வீட்டில் உள்ள சின்ன 
பிள்ளைகள்தான் 
எடுத்து செல்வார்கள். 

‘மறக்காமல் பையை 
வாங்கி வந்து விடு’ 
என சொல்லித்தான் 
அனுப்புவார்கள். 

சமயங்களில் 
அதே பையில் 
வேறு பண்டங்கள் 
அவர்கள் வீட்டிலிருந்து 
வந்து சேரும். 

பொருளின் மதிப்பு 
அதிகம்தான் என்றாலும் 
பை திரும்பவில்லையெனில் 
மன வருத்தம்தான்..!”

 

*கி.அற்புதராஜு*


Saturday, 16 November 2013

*அலைபாயுதே*


“என்னதான் நம்

உடம்பு ஆண்டவனை

தரிசித்தாலும்...

 

மனசு என்னவோ 

வெளியில் விட்ட 

செருப்பின் மீதுதான்..!”

 

*கி.அற்புதராஜு*

Friday, 15 November 2013

*அங்கீகாரம்*


காவிரி டெல்டா 
பேருந்து பயணம் 
ஒரு புறம் காவிரி 
மறுபுறம் கொள்ளிடம் 
இடையில்... 

கரும்பு, 
நெல், 
உளுந்து, 
பச்சை பயிர், 
முள்ளங்கி, 
எள், 
பருத்தி, 
வேர் கடலை... 
என பயிர்கள் 
விளை நிலங்களில்..! 

நடுவில் 
உறுத்தலாக 
விளம்பர பலகையில்…

“அண்ணாமலையார் நகர் 
அரசு அங்கீகாரம் பெற்ற 
வீட்டு மனைகள்- விற்பனைக்கு..!”

 

*கி.அற்புதராஜு*

Thursday, 14 November 2013

*டீன் ஏஜ் கிறுக்கல்கள்*


“மின்சார ரயிலில் 
மார்க்கர்
 பேனாவால் 
கல்லூரி
 மாணவர்கள் 
எழுதியிருந்த
… 

Ranjith weds Nithya 
Vimal
in love with Madhu 
Ravi
loves Jamuna 
            . 
            . 
            .
 


வாசகங்களை
 வாசித்துத் 
தனது
 டீன் ஏஜ் கனவுகளுக்குள் 
நுழைந்த
 நடு வயதுக்காரர் 
கடைசி
 வரியைப் படிக்கும் போது 
அடி
 வயிறுப் பற்றி எரிந்தது…

தனது
 மகள் பெயரும் 

மகள் படிக்கும் 
கல்லூரியின் பெயரும் 
வாசகத்தின் கடைசியில்..!” 

 

*கி.அற்புதராஜு*

Wednesday, 13 November 2013

*இடம்*



“பேருந்தில்....

குழந்தையுடன் நின்ற

அம்மாவுக்கு

எழுந்து இடம் கொடுத்தார்

பெரியவர்..!

 

அம்மா உட்கார்ந்ததும்

குழந்தை தாவியது

நின்றுக் கொண்டிருந்த

அப்பாவிடம்..!”

 

*கி.அற்புதராஜு*