எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday, 23 June 2022

படித்ததில் பிடித்தவை (“குழந்தையின் பந்து” – மதார் கவிதை)

 


*குழந்தையின் பந்து*

 

இனி எனக்கு

வேண்டாமென

பந்தைக் கீழே

குத்துகிறது

குழந்தை

 

துள்ளியெழும் அதன் செய்கை கண்டு

கத்துகிறது

 

துள்ளித் துள்ளி

உயரம் குறையும் பந்தின் அன்பில்

குழந்தைக்கு

அழுகையே வந்துவிடும் போல் தெரிகிறது

 

குழந்தை பந்தைத் தூக்கி முத்துகிறது

கொழகொழக்கும் எச்சிலோடு

 

பந்து கீழே விழுந்து துள்ளி ஓடுகிறது

குழந்தை சிரித்துக்கொண்டே

பின்னால் ஓடுகிறது

சமாதானப்படுத்த..!

 

 *மதார்*

(கல்குதிரை இதழ்)




Wednesday, 22 June 2022

படித்ததில் பிடித்தவை (“தவறிய குறி” – மதார் கவிதை)

 


*தவறிய குறி*

 

இயக்கத்தில் உள்ள

புலியைச் சுட

வெற்று வெளியைத்தான்

சுடவேண்டியிருக்கிறது

 

புலி ஓடி வெற்று வெளியை

அடைந்து மரணிக்கிறது

 

குறி பார்ப்பதென்பது

குறி தப்பிப் பார்ப்பதா

தலைக்குக் குறி வைப்பது

வாலை வீழ்த்தவா

 

வாலிபன் மரணித்துவிட்டான்

கிழவன் தப்பி

குருவி மடிந்தது

வானைக் காப்பாற்றி

 

ஆற்றின் தவளைக்கல்

நீர்த்தவளையை ஓடச் செய்கிறது

மூன்று நான்கு முறைகள்

நான்கு ஐந்தில்

சடலம் மூழ்குகிறது

நீருக்குள்

அடி ஆழம் நோக்கி..!

 

 *மதார்*

(கல்குதிரை இதழ்)



Tuesday, 21 June 2022

படித்ததில் பிடித்தவை (“பார்வை தந்த பறவை” – மதார் கவிதை)

 


*பார்வை தந்த பறவை*

 

கண்ணை மூடிக்கொண்டே

இருந்த பொழுது

குருடனானேன்

 

எங்கும் ஒரே நிறம்

 

வானை பார்த்துக்கொண்டே

இருந்த பொழுது

குருடனானேன்

 

எங்கும் ஒரே நிறம்

 

போகிற போக்கில்

பார்வை தந்து போனது

ஒரு பறவை..!

 

 

*மதார்*

(கல்குதிரை இதழ்)



Monday, 20 June 2022

படித்ததில் பிடித்தவை (“கள்ளன்” – கல்யாண்ஜி கவிதை)

 


*கள்ளன்*

 

நான் கள்ளன்

உங்கள் உணர்வுகளைத்

திருடும் போது அல்ல.

என் உணர்வுகளை

உங்களுக்குத் தெரியாமல்

ஒளித்துவைக்கையில்..!

 

 *கல்யாண்ஜி*




Sunday, 19 June 2022

*ஆல்பம்*

 


திருமண வரவேற்பில் கலந்துக்கொள்ள

அவசர அவசரமாக

அலுவலகத்திலிருந்து கிளம்பியதும்...

 

மெட்ரோவிலும், பேருந்திலும் பயணித்து

மாநகரத்து விளிம்பிலிருக்கும்

மண்டபத்துக்கு சென்றதும்...

 

மணமக்கள் மேடையேறும் வரை

நீண்ட காத்திருந்தலும்...

 

நீளமான வரிசையில் முன்னேறி

மணமக்களை வாழ்த்தியதும்...

 

இரவு விருந்தில்

இடம் கிடைத்ததும்

அவசரமாக சாப்பிட்டதும்...

 

வாகன நெரிசலில் சிக்கி

நடு இரவில் வீடு திரும்பியதையும்...

 

தாமதமானதற்கு மனைவியை

சமாதானப்படுத்தியதும்...

 

நினைவில் வந்து செல்கின்றன...

 

நண்பர் மகளின்

திருமண வரவேற்பு ஆல்பத்தை

பார்க்கும் போது..!

 


*
கி.அற்புதராஜு*

Saturday, 18 June 2022

படித்ததில் பிடித்தவை (“இது போதும் எனக்கு” – மனுஷ்ய புத்திரன் கவிதை)


 

*இது போதும் எனக்கு*

 

பிரியமாய்தான் பேசவேண்டும்

என்றில்லை…

சும்மாவேனும் ஏதாவது

பேசிக்கொண்டிருந்தால்கூட போதும்.

 

கூட இருக்கவேண்டும்

என்றில்லை…

இருப்பதுபோல

இருந்தாலே போதும்..!”

 

*மனுஷ்ய புத்திரன்*




Friday, 17 June 2022

படித்ததில் பிடித்தவை (“உதிர்தல்” – இளங்கோ கிருஷ்ணன் கவிதை)

 


*உதிர்தல்* 

 

இவ்வளவு பெரிய பூமியில்

ஒரு பூ உதிர்ந்து

என்ன ஆகிவிடப் போகிறது

நண்பா என்றான்

இவ்வளவு பெரிய பிரபஞ்சத்தில்

இந்தப் பூமியே

உதிர்ந்தாலும் ஒன்றும்

ஆகிவிடாது நண்பா என்கிறான்..!

 

 *இளங்கோ கிருஷ்ணன்*


Thursday, 16 June 2022

படித்ததில் பிடித்தவை (“உதிரும் பூ” – கல்யாண்ஜி கவிதை)


 *உதிரும் பூ*

 

முன்னிருக்கையில் யாரோ

முகம் தெரியவில்லை

தலையில் இருந்து

உதிர்ந்து கொண்டிருந்தது பூ

தாங்க முடியவில்லை..!


*கல்யாண்ஜி*





Wednesday, 15 June 2022

படித்ததில் பிடித்தவை (“குளிர் சுட்ட இரவு” – செ.புனிதஜோதி கவிதை)

 


*குளிர் சுட்ட இரவு*

 

தூங்கிக்கொண்டிருந்த

எங்களை

எழுப்பமுடியாமல் எழுப்பி

சொந்த ஊரை விட்டு

அழைத்துச் சென்ற

அம்மாவின் வலி...

 

வாடையை மென்று

வீசிக்கொண்டிருக்கும்

தென்றலுக்கு மட்டுமே

தெரிந்திருக்கக்கூடும்...

.

 

எத்தனையோ சொந்தபந்தங்கள்

இருந்தும்

கிளைகள் அற்ற

ஒற்றைமரமாய் நடந்து சென்ற

அப்பாவின் வலி

இருளுக்குள் மூழ்கிக்கிடந்த

காலத்திற்குத் தெரியும்...

 

அவமானங்களை

படிகளாக்கி

விடாமுயற்சியில்

நடை போடும்

வேளையில்…

 

கருணை கொண்ட

கடவுள் தற்போது

முகத்தைப் பார்த்து

புகழின் உச்சியில்

நிறுத்திவிட…

 

இல்லாத உறவுகள்

உறவு என்றே

எமை அழைத்து

சிறப்பு செய்தாலும்...

 

காயப்பட்ட மனம்

சிரித்துக்கொண்டே

இருளில் நடந்து வந்த

சுட்ட குளிரைத்தான்

போர்த்திக்கொள்கிறது..!

 

 *செ.புனிதஜோதி*