எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday, 13 October 2021

படித்ததில் பிடித்தவை (“அந்தப் பறவையைக் கொன்றது யார்?” – கவிதை)



 *அந்தப் பறவையைக் கொன்றது யார்?*

 

அப்பறவை செய்த

தவறென்ன..?

சாலையில் கிடந்த

தண்ணீர் பொட்டலத்தில்

மீதியிருந்த தண்ணீரை

பருக முயன்றதைத் தவிர..!

Tuesday, 12 October 2021

படித்ததில் பிடித்தவை (“அப்பா” – ரசிகவ் ஞானியார் கவிதை)


 

*அப்பா*

 

நீ

உலகப்பயணம் முடித்துச் சென்ற

அந்த அதிகாலை…

 

முன்பே தெரிந்திருந்தால்

முந்தைய இரவில்

நிறைய பேசியிருப்பேனே அப்பா..?

 

யாராவது திருப்பிக்கொடுங்களேன்

அப்பா இறந்தநாளின்

முந்தைய இரவினை..!

கொஞ்சூண்டு

அவரோடு

பேசவேண்டும்..!

 

*ரசிகவ் ஞானியார்*


Monday, 11 October 2021

படித்ததில் பிடித்தவை (“ஆட்டத்தின் முடிவில்...” – சௌவி கவிதை)

 


*ஆட்டத்தின் முடிவில்...*

 

வெளிச்சம் கொட்டிய விளக்குகள்

அணைக்கப்பட்டாயிற்று.

மேசையின் மீதேறி

அமர்ந்துகொண்டன

உட்காரப் பயன்படுத்தும்

நாற்காலிகள்.

உள்ளே வந்து சென்ற

பாதங்களையெல்லாம்

தண்ணீரால் கழுவி வெளியேற்றி

தரையைச் சுத்தப்படுத்தியாயிற்று.

பாய்லரில் கரியை நிரப்பி

மீந்த பாலில் தேநீர் தயாரித்துக்

குடிக்கும்

அந்தக்கடைச் சிறுவர்களுக்கு

தேநீர் இனிப்பதுமில்லை...

கசப்பதுமில்லை..!

 

*சௌவி*



Sunday, 10 October 2021

*எலி*

 


இன்று நான்

ஒரு எலியைப் பொறி வைத்து

கொன்று விட்டேன்.

வீட்டின்  பின்புறம்

தென்னை மர வேர்களுக்கருகில்

ஒரு குழித் தோண்டி

அந்த எலியைப் புதைத்தும் விட்டேன்.

ஏனோ மனம் பரிதவிக்கிறது

பாவமென்று..!

 

வீட்டுத் தோட்டத்தில்

வாழைக்கன்று அருகில்

குழித்தோண்டி கிழங்கைத் தின்றும்,

எந்த செடி வைத்தாலும்

அதன் வேர்களை கடித்தும்,

காரின் மின் கம்பிகளை

சேதப்படுத்தியும்

அட்டகாசம் செய்யும்

அந்த பெருச்சாலியை

கொல்வதைத் தவிர

அதை கட்டுப்படுத்த

என்னதான் என்னால்

செய்ய முடியும்..?

 

இருந்தாலும்

ஏனோ மனம் பரிதவிக்கிறது

பாவமென்று..!

 

வானொலியில்

கொன்றால் பாவம்

தின்றால் போச்சு...

என கண்ணதாசனின்

பாவக் கணக்கைப்

பாடுகிறார் யேசுதாஸ்.

கொல்வதை எல்லாம்

தின்ன முடியுமா என்ன..?

 

மேஜையில் வீற்றிருக்கும்

கெளதம புத்தரை

மெளனமாக பார்த்தபடியே

அமர்ந்து இருக்கிறேன்

பாவ சுமையுடன் நான்..!

 

*கி.அற்புதராஜு*


Saturday, 2 October 2021

படித்ததில் பிடித்தவை (“யாருமில்லாதொரு ராஜ்ஜியம்” – ராம் வசந்த் கவிதை)

 


*யாருமில்லாதொரு  ராஜ்ஜியம்*

 

தன் அப்பாவின்

சிகரெட்டில் ஒன்றையுருவி

இதான் கடைசி தடவை

எனக் கொடுக்கும் சித்தி மகள்.

 

ஆத்துல உம்ம தேவதை

துணி துவைச்சிட்டு இருக்கு

தகவல் தரும் அண்ணி.

 

மாப்ள நீ சிங்கமடா

பயந்த என்னைத் தாங்கி

நீச்சல் பழக்கிய தாய்மாமன்.

 

அவிங்கள வெட்டனும்

பன்னெண்டு போடறா அப்பு

தாயக் கூட்டாளி பெரியம்மா.

 

முள் எடுத்த மீன்களை

மகன் தட்டிலிருந்து எனக்கு

பரிமாற்றம் செய்யும் அத்தை.

 

அண்ணன் மவன் என்னைய வச்சு

டபுள்ஸ் அடிக்கிறான்லே

சொல்லி வியக்கும் சித்தப்பா.

 

இப்படி யாருமில்லாதொரு

ராஜ்ஜியத்தில்

தன்னைத்தானே

செல்பி எடுத்துக்கொண்டிருக்கிறான்

என் மகன்..!

 

 *ராம் வசந்த்*

Friday, 1 October 2021

படித்ததில் பிடித்தவை (“துரோகத்தின் ருசி” – மனுஷ்ய புத்திரன் கவிதை)

 

*துரோகத்தின் ருசி*

 

யாரும் இருக்கிறார்களா

என்று இன்னொருமுறை

பார்த்துக் கொண்டார்கள்.

 

துரோகத்தின் கோப்பை

முழுமையும் நஞ்சால்தான்

நிரம்பியிருந்தது.

 

ஆனால் முதல் மிடறை

அருந்தும் போது மட்டும்

அது ஏன் அப்படி

தித்திக்கிறது?

 

அதுதான்

அமிர்தம் என்று

நம்மை முழுமையாக

நம்பச் செய்கிறது..!

 

*மனுஷ்ய புத்திரன்*




Thursday, 30 September 2021

படித்ததில் பிடித்தவை (“பெயரிடப்படாத பறவையின் இறகு” – ரஞ்சித் பிரேதன் கவிதை)

 


*பெயரிடப்படாத பறவையின் இறகு*

 

வெளிச்சம் வியாபித்த பெருவெளியில்

பெயரிடப்படாத பறவையின் இறகொன்று

மென்காற்றில் சுழன்றபடி

முற்றிலும் எதிர்பாராத நாளொன்றில்

என் விரல்களை வந்தடைந்தது.

 

அதன் வண்ணம்

அதன் வாசம் மற்றும்

அதன் மென்மை

எனக்கு பரிட்சியமான

ஒரு பறவையின் பெயரினை

நினைவூட்டி செல்கிறது.

 

எனது காதுகளை குடையவும்

எனது அலமாரியை அலங்கரிக்கவும்

எப்போதாவது மை-தொட்டு எழுதவும்

என்னோடே பயணித்துவருகின்றது

அந்த பறவை விட்டு சென்ற இறகு.

 

ஒவ்வொரு நாளும்

ஒவ்வொரு பறவையின்

ஒவ்வொரு இறகென

என்னை வந்தடைந்த வண்ணமாய்

இறகுகளால் நிரம்பி

வழியத்தொடங்கியது வாழ்வு.

 

இப்படியாய் காலம் கடந்து

இறகுகளை ஒன்றுசேர்த்து

ஒரு சிறகாகவும்

சிறகுகளை ஒன்று சேர்த்து

ஒரு பறவையாகவும்

என்னை நான் உருவாக்கிக்கொண்டு

பறக்கத்தொடங்கினேன்.

 

தனது இறகுகள் இழந்த சூட்சமத்தை

அறிந்துவிட்டிருந்த பறவைகள்

பறக்கத்தயங்கி பீதியில்

கூடடைந்து விட்டன..!

 

*ரஞ்சித் பிரேதன்*