எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday, 25 June 2021

படித்ததில் பிடித்தவை (“மோதிர விரல்” – ராஜா சந்திரசேகர் கவிதை)

 


*மோதிர விரல்*

 

கடைசி வரை

அம்மாவின்

மோதிர விரல்

வெறும் விரலாகவே

இருந்தது..!

 

*ராஜா சந்திரசேகர்*


Thursday, 24 June 2021

படித்ததில் பிடித்தவை (“கடவுளும் மனிதனும்” – நல்லவன் கவிதை)


*கடவுளும் மனிதனும்*

 

கடவுள்

மனிதனை படைத்தார்.

மனிதனும்

பல கடவுள்களை படைத்தான்.

 

மனிதன்

கடவுள் இல்லா இடங்களில்

பேயை கண்டான்.

கடவுள்

மனிதம் இல்லா மனித மனங்களில்

பேயை கண்டார்.

 

கடவுள்

மனிதன் மனதை

கல்லாய் கண்டார்.

மனிதன்

கடவுளை

கல்லில் கண்டான்.

 

மனிதன்

சில தருணங்களில்

கடவுள் ஆனான்.

கடவுள்

இதிகாசங்களில்

மனிதன் ஆனார்.

 

கடவுளும்

பூமியில் மனிதனை

தேடுகிறார்.

மனிதன்

கடவுளை தேடி

அலைகிறான்.

 

ஆனால் இறுதியில்,

கடவுள்

கடவுளாகவே இருக்கிறார்.

மனிதன்

மனிதனாகவே இருக்கிறான்..!

 

*நல்லவன்*

Wednesday, 23 June 2021

படித்ததில் பிடித்தவை (“மழைக்குள் குடை” – ராஜா சந்திரசேகர் கவிதை)

 


*மழைக்குள் குடை*

 

நனைந்து போகும்

சிறுமியிடம்

குடைக்குள் வருகிறாயா..?

என்றேன்.

மழைக்குள் வருகிறீர்களா..?

என்கிறாள்..!

 

*ராஜா சந்திரசேகர்*



Tuesday, 22 June 2021

படித்ததில் பிடித்தவை (“கூடவரும் வைக்கோல்” – சௌவி கவிதை)

 


*கூடவரும் வைக்கோல்*

 

இருசக்கர வாகனத்தின் பின்சக்கரத்தில்

சிக்கிக்கொண்டு கூடவரும்

ஒரு வைக்கோல் ஞாபகப்படுத்துகிறது...

ஒரு பச்சை வயலை

நாற்று நட்டப் பெண்ணை

சேறு குழப்பிய காளைகளை

வாய்க்கால் சுமந்த தண்ணீரை

தண்ணீருக்காக நடந்த உண்ணாவிரதத்தை

வரப்பிலமர்ந்து உண்ட மத்தியானச் சோற்றை

கோவணத்தோடு ஏரோட்டும் தாத்தாவை

பயத்தை ஏற்படுத்திய சர்ப்பத்தை

வளையல் கரங்களில் விளைந்திருந்த கருக்கருவாளை

வேலாமரத்தில் தொங்கிய தூளியை

மருந்து தெளிப்பானின் சுருதி பிசகாத ஓலத்தை

வயல்களினூடே நேர்க்கோடுகளை

நீட்டியிருக்கும் தண்டவாளத்தை

தண்டவாளத்தில் எப்போதேனும்

தடதடத்துப்போகும் ரயிலை

அறுவடைக் காலத்து மாட்டுவண்டிகளை

வீட்டு முற்றத்தில் கூடு கட்டும் சிட்டுக்குருவியை

இன்னும் தள்ளுபடியாகாத கடனை

வந்துசேராத மானியத்தை

தூக்கிட்டுக்கொண்ட பரமசிவத்தை

கட்டடங்கள் கொலைசெய்த வயல்வெளிகளை..!

 

*சௌவி*





Monday, 21 June 2021

படித்ததில் பிடித்தவை (“காணக் கிடைக்காத நிழல்” – மு.மகுடீசுவரன் கவிதை)



*காணக் கிடைக்காத நிழல்*

 

அப்பத்தா இறந்த ஏழாம் நாள்

பந்தல் பிரித்த இரவில்

துக்கம் விசாரிக்க

வீடு வந்திருந்த பெரியவர்

எங்களில் யாருக்கும் அறிமுகமில்லாதவர்.

தகவல் தாமதமாகக் கிடைத்ததாக வருந்தியவர்

அப்பத்தாவின் பூர்வீகம் குறித்து

நாங்கள் அறியாத செய்திகளைப் பகிர்ந்தார்.

பழைய நினைவுகளில் மூழ்கிக்

கண்ணீரோடு கொஞ்ச நேரம்

பொட்டாட்டம் அமர்ந்திருந்தவர்,

தன் வயது நண்பர்களில்

அவர் மட்டும் மிஞ்சியிருப்பதாகச் சொன்னார்.

பின் கனத்த நெஞ்சோடு எழுந்தவர்

என்ன நினைத்தாரோ

சற்றே திரும்பி வீட்டுக்குள் எட்டிப்பார்த்து

மாடத்தில் ஏற்றியிருந்த தீபத்தை

வணங்கி விடைபெற்று நடந்தார்

காணக் கிடைக்காத

கடவுளின் நிழல்போல..!

 

*மு.மகுடீசுவரன்*



Sunday, 20 June 2021

படித்ததில் பிடித்தவை (“மதிப்பீடு” – நா.கோகிலன் கவிதை)

 


*மதிப்பீடு*

 

சட்டை கேட்டால்

நூறு ரூபாயில் காட்டட்டுமா?’

என்கிறார் துணிக்கடைக்காரர்.

 

உள்நுழையும்போதே

ஐம்பது ரூபாய் ரப்பர் செருப்பை

எடுத்து நீட்டுகிறார் செருப்புக்கடைக்காரர்.

 

மெனு கார்டுக்குள் நுழையவிடாமல்

பரோட்டாவா?’ என்கிறார்

ஹோட்டல்காரர்.

 

உரிய ஸீட்டோடு ரயிலேறுகையில்

இது முன்பதிவு செய்த பெட்டி

என்கிறார் பயணச்சீட்டுப் பரிசோதகர்.

 

அந்த மணியை அடிக்கக்

கொஞ்சம் தூக்குங்க அங்கிள்

என்னும் அச்சிறுமி

என்மீதான அத்தனை மதிப்பீடுகளையும்

உடைத்து உயர்த்துகிறாள் என்னை..!

 

*நா.கோகிலன்*

Saturday, 19 June 2021

படித்ததில் பிடித்தவை (“அப்பா” – மகுடேசுவரன் கவிதை)

 


*அப்பா*

 

அப்பாவைப் பற்றி

ஆயிரம் சொன்னாலும்

 

அப்பா... என்று

நான் சொல்ல

 

என்னப்பா... என்று

நீங்கள் கேட்பதுபோல்

 

ஆகுமா

அப்பா..?

 

*மகுடேசுவரன்*