*ராஜா ராணி ஜாக்கி*
"சீட்டுக்கட்டின் வழவழப்பில்
ஒரு மாயமிருந்தது.
ஐம்பத்திரண்டு என்கிற
அதன் எண்ணிக்கையிலும்
ஏதோ ஒன்று.
தலைகீழாகவும் நேராகவும்
நிற்கிற ராஜா ராணிகளின்
இதுவரை பாராத சாயல்கள்
அரசசபைக்கும் அந்தப்புரத்திற்கும்
ரகசியமாக அழைத்தன.
கெட்டபுத்தகங்களை
வாசிக்கத் தரும்
பதின்வயது சினேகிதன் போல
ஜாக்கி இருந்தான்.
யாரிடமும் புகையிலை
வாங்கிப்போட்டு
எப்போதும் கதை சொல்லும்
கிழவி போல பிரியமானது
ஜோக்கர்.
ஆடுகிறவர்கள் நேர்த்தியில்லாமல்
அவரவர் சௌகரியப்படி அமர்ந்து
அவரவர்க்குத் தோன்றுவதைப்
பேசுவது பிடித்திருந்தது நிரம்ப.
ஜெயித்தவர்களை விட,
தோற்றவர்கள்
விளையாட்டைத் தொடரும்படி
இருந்த ஒரு வினோத அழைப்பு
சிக்கல் நூல்கண்டு போல்
சவாலுடன்
அவிழ்க்கத் தூண்டியது.
பக்கத்திலிருந்த என்னிடம்
கஜேந்திர மாமா
‘சீட்டைப் பார்த்துக்க மாப்ளே' என்று சிறு நீர் கழிக்கப்
போன சமயம்
சும்மாதான் கையில் எடுத்தேன்.
சூதாடியாவதற்குப் போதுமானதாக
இருந்தது அந்தச் சும்மா என்கிற
சின்னஞ் சிறு நொடி..!"
*கல்யாண்ஜி*