எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday, 28 October 2023

படித்ததில் பிடித்தவை (“அவள் நைட்டி அணிந்ததில்லை...” – சாம்ராஜ் கவிதை)

 


*அவள் நைட்டி அணிந்ததில்லை...*

 

“ஷேம் ஷேம் பப்பி ஷேம்” என்று

சின்ன வயதில் ஓடியவள்....

எட்டு வயதில்

முழங்காலுக்கு மேலான காயத்தை

அப்பாவுக்கு காட்ட மறுத்தவள்...

உடை மாற்றும் அறைக்குள்

அம்மாவைக் கூட‍ அனுமதியாதவள்...

எக்ஸ்ரே அறையிலிருந்து ஓடிவந்தவள்...

அருவிகளில் ஒருபொழுதும் குளிக்காதவள்...

வெளிச்சத்தில் கணவனுடன் கூட சம்மதியாதவள்...

மரித்தலுக்கு பின்

அம்மணமாய்க் கிடக்கிறாள் மார்ச்சுவரியில்..!

ஈக்களும், கண்களும் “அங்கேயே” மொய்க்க

இப்படியாகுமெனில்

அன்புலட்சுமி தற்கொலையே

செய்திருக்க மாட்டாள்..!

 

*சாம்ராஜ்*

"என்றுதானே சொன்னார்கள்" கவிதை நூல்.




Wednesday, 25 October 2023

படித்ததில் பிடித்தவை (“சமன்” – கல்யாண்ஜி கவிதை)


*சமன்*

 

“பறிக்க முடியாத

பட்டாம்பூச்சியை

மறக்க…

 

பறக்கமுடியாத பூக்களை

வெடுக்கெனக் கிள்ளி

வீசின

விரல்கள்..!”

 

*கல்யாண்ஜி*



Monday, 16 October 2023

*குடைக்குள் மழை*


 “சிறு தூரலான மழை நாளில்

மடக்கிய குடையுடன்

ரயிலின் வருகைக்காக

நடைப்பாதை கூரையின் கீழே

காத்திருக்கிறேன் நான்.

 

எதிர் திசையில்

ரயிலிலிருந்து இறங்கி

மழையில் நனைந்தபடி

கையில் பெரிய பையுடன்

சிறு சிறு அடிகளாக

நடக்கும் முதியவர்.

 

மழையிலேயே

அவ்வப்போது நின்று

ஆசுவாசப்படுத்திக் கொண்டு

மெதுவாக நடக்கிறார்.

 

எனது குடையை விரித்து

அந்த முதியவரிடம்

பையை வாங்கிக் கொண்டு

நடைப்பாதை முடியும் வரை

அவரின் கைப்பிடித்து

அழைத்து செல்கிறது மனசு.

 

மனசு திரும்பும் வரை

எனக்கான ரயில்

சிக்னலில் காத்திருக்கிறது..!”

 

*கி. அற்புதராஜு*


Friday, 18 August 2023

*பூக்கள் பூக்கும் தருணம்*

 


“ரயில் பயணத்தில்

இருக்கை கிடைக்காமல்

நிற்கிறார் முதியவர்.

முன்னும், பின்னும்

பரபரப்பாக தேடுகிறார்

இருக்கை கிடைக்குமாவென...

அவரது பார்வையைத் தொட்டு

எழுந்து இடம் கொடுக்கிறேன்.

உட்கார்ந்தவர் நன்றியோடு பார்க்கிறார்.

அவரருகில் நின்றுக்கொள்கிறேன்.

 

என் மனம் மகிழ்கிறது.

 

நான் இறங்கப் போகிறேன்

என நினனத்திருப்பார் போல...

நான் நிற்பதைப் பார்த்ததும்

எனக்கு இடம் தேடி

மீண்டும் பரபரப்பானார்.

 

சில நிறுத்தங்களுக்குப் பிறகு

எதிர் இருக்கை காலியாகிறது.

மற்றவர்கள் உட்காரும் முன்

அந்த இடத்தைப் பிடித்து

என்னை உட்கார சொல்கிறார்.

சிறிய புன்முறுவலோடு பார்க்கிறார்.

நானும் புன்னகைக்கிறேன்.

 

இப்போது

அவரது மனமும் மகிழ்ந்திருக்கும்..!”

 


*
கி. அற்புதராஜு*

Tuesday, 15 August 2023

படித்ததில் பிடித்தவை (“என் கண்களில்...” – ராஜா சந்திரசேகர் கவிதை)

 


*என் கண்களில்...*

 

“கைதட்டிக் கூப்பிட்டவர்

அப்பா போலிருந்தார்.

அருகில்போய் கேட்டேன்.

‘ஒன்னுமில்ல தம்பி…

என் பையன் சாயல்ல இருந்தீங்க…

அதான் ஒருவாட்டி

பாத்துக்கலாம்னு கூப்பிட்டேன்.’

கண்களைத் துடைத்துக்கொண்டார்.

‘ஏன் அழறீங்க..?’ என்றேன்.

‘அவன் போயி சேர்ந்துட்டான்’ என்றார்.

வேறெதும்

சொல்லிக்கொள்ளாமல்

திரும்பி நடந்தேன்.

என் கண்களில்

நீர் இருந்தது..!”

 


*
ராஜா சந்திரசேகர்*



Sunday, 13 August 2023

படித்ததில் பிடித்தவை (“பெருந்துயர்” – யாத்திரி கவிதை)

 


*பெருந்துயர்*

 

“புரியாது போன

பிரியங்களில் பெருந்துயர்

எது தெரியுமா..?

வாழும்மட்டும்

அதனை நானே

சுமந்தலைய வேண்டும்..!

இறகான அன்பின்

மலையான கனத்தை..!”

 

*யாத்திரி*




Saturday, 29 July 2023

படித்ததில் பிடித்தவை (“கடைசி ராப்போஜனம்” – வண்ணதாசன் கவிதை)

 


*கடைசி ராப்போஜனம்*

 

கிறுக்குத் தனமாக,

இன்றைய இரவுச் சாப்பாடுதான்

என் ‘கடைசி ராப்போஜனம்’ என்று

நினைத்துக் கொண்டேன்.

 

மெஸ்ஸிலிருந்து

சாப்பாடு விநியோகிப்பவரிடம்

இன்று அதிகம்

பேச வேண்டும் என்று ஆசை.

 

அவரிடம் சொல்ல

ஒரு ஸென் கதையைத்

துடைத்து வைத்தேன்.

 

ஆட்டோ பழுதினால்

அவர் மிகப் பிந்தி வந்தார்.

நான் தூக்குச் சட்டியை 

வாங்கின கையோடு கேட்டேன்,

“நாளை காலையில் பூரி கிழங்கு தானே..?!”

 


*
வண்ணதாசன்*



Saturday, 22 July 2023

படித்ததில் பிடித்தவை (“சிறுவனும்... முதியவரும்...” – ஷெல் சில்வர்ஸ்டீன் கவிதை)

 


*சிறுவனும்... முதியவரும்...*

 

“அந்தச் சின்னப் பையன் சொன்னான், 

‘சில சமயம் நான் கரண்டிகளை

கீழே போட்டு விடுகிறேன்.’

முதியவர் சொன்னார்

‘நானும் அப்படிச் செய்வது உண்டு.’

 

சின்னப் பையன் கிசுகிசுத்தான்

‘நான் கால்சட்டையை ஈரமாக்கிவிடுகிறேன்.’

‘நானும் அப்படிச் செய்துவிடுவதுண்டு’

சிரித்தார் அந்த முதியவர்.

 

சிறுவன் சொன்னான்,

‘நான் அடிக்கடி அழுகிறேன்’

முதியவர் தலையசைத்தார்,

‘நானும்தான்.’

 

எல்லாவற்றையும் விட மோசமாக –

பையன் சொன்னான் - ‘வளர்ந்தவர்கள்

என்னைக் கவனிப்பதாகவே தெரியவில்லை.’

அவன் இப்போது ஒரு சுருக்கம் விழுந்த

வயதான கையின் வெதுவெதுப்பை

உணர்ந்தான்…

 

‘நீ சொல்கிறது என்னவென்று எனக்குத் தெரியும்’

அந்த முதியவர் சொன்னார்..!”

 

*‘The Little Boy and the Old Man’ by Shel Silverstein*

(தமிழில்: வண்ணதாசன்)