எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday, 31 March 2023

*சிவப்புப் பூக்கள்*

 


நான்

கடையில் வாங்கிய

எறும்பு மருந்தால்

ஓராயிரம்

எறும்பையாவது

கொன்ற பின்தான்

உயிர் பிழைத்தது

வீட்டுத் தோட்டத்திலிருந்த

அந்த ஒற்றை

செம்பருத்திச் செடி..!

 

இப்போதெல்லாம்

நிறைய பூக்களை

பூத்து என்னை

மகிழ்வித்தாலும்...

 

பூக்களின் அதீத சிவப்பு

எனது பாவச் செயலை

நினைவுறுத்தி

வருந்த வைக்கிறது..!

 

*கி.அற்புதராஜு*

(31.03.2023)

Thursday, 16 March 2023

*சந்திக்காமலே...*

 


எனக்கும் அவரை

நன்றாகத் தெரியும்.

அவருக்கும் என்னை

நன்றாகத் தெரியும்.

 

அவர் என்னை

பார்க்காத போது

நான் அவரைப்பார்த்தேன்.

அவரும் நான்

பார்க்காத போது

என்னைப் பார்த்திருப்பார்.

 

நான் அவரை 

பார்க்க முயற்சிக்கும்போதெல்லாம்...

அவர் என் கண்களை சந்திக்கவில்லை.

அவருக்கும் எனது கண்கள்

சிக்கவில்லையோ... என்னவோ...

 

அன்றைய தினம்... ஏனோ... 

ஒருங்கிணையவேயில்லை

இருவரின் பார்வையும்..!

 

அந்த ரயில் பிரயாணத்தில்

இறுதி வரை சந்திக்காமலே

இறங்கி விட்டோம்..!

 

*கி.அற்புதராஜு*

(16.03.2023)


Thursday, 8 September 2022

*சிறுமியின் நாடகம்*

 


கடையில்

பொருள் வாங்கி கொண்டு

தெருவில் ஓடி வரும் சிறுமி.

 

நாடக பாவனையில்

தனக்கு தானே

தலையை ஆட்டியபடியே

பேசி செல்கிறாள்.

 

ஒரு சிரிப்புடன்

அந்த சம்பாசனைக்குள்

நுழைத்து வெளியேறுகிறேன்

எதிரே வாகனத்தில்

செல்லும் நான்.

 

பெரு மகிழ்ச்சியடைகிறது

மனசு..!

 


*கி.அற்புதராஜு*

Sunday, 24 July 2022

படித்ததில் பிடித்தவை (“மெளனம்” – கவிதை)

 


*மெளனம்*

 

மொழிகள்

ஆயிரம் இருப்பினும்

மௌனம் மட்டுமே

அழகாய் பேசுகிறது

யாரையும் புண்படுத்தாமல்..!



Saturday, 23 July 2022

படித்ததில் பிடித்தவை (“தயக்கம்” – வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன் கவிதை)

 


*தயக்கம்*

 

தயக்கமேதுமில்லை

பொழியும் மழையில்...

நனைவதற்குத்தான்

அத்தனை தயக்கங்களும்..!

 


*வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்*

Friday, 22 July 2022

படித்ததில் பிடித்தவை (“வத்தல் குழம்பு” – முனைவர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் கவிதை)



 *வத்தல் குழம்பு*

 

வீட்டில்

பருப்பு தீர்த்துப்போக...

சாம்பார் பின் வாங்க,

வத்தல் குழம்பை

தீர்மானிக்கிறாள்

அம்மா..!

 

*முனைவர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன்*




Thursday, 21 July 2022

படித்ததில் பிடித்தவை (“வழி சொல்லும் கண்கள்” – கலாப்ரியா கவிதை)

 


*வழி சொல்லும் கண்கள்*

 

கருக்கிருட்டில்

புது ஊரில்

வழி சொல்லும்

உள்ளூர்க் கண்களில்தான்

எவ்வளவு பத்திர உணர்வு..!

 

*கலாப்ரியா*




Wednesday, 20 July 2022

*அப்பாவின் பிள்ளைகள்*


இதுவரை

காய்க்காத அளவு

மாங்காய்கள் காய்த்திருந்தன

மாமரங்கள் இரண்டிலும்.

 

தொடர்ந்து

காய்த்துக் கொண்டேயிருந்தது

அந்த ஒற்றை தென்னையும்.

 

குலை தள்ளிய

மொந்தன் வாழை

போன வாரம்தான்

அக்கம்பக்கத்து வீடுகளுக்கு

பகிர்ந்தளிக்கப்பட்டது.

 

ஒரு வாரமாக

பூத்துக் கொண்டேயிருந்தது

மாடித் தோட்ட

மல்லிகை பூ செடியும்.

 

எல்லாமே அப்பா

வைத்த மரமும் செடியும்.

 

எல்லாவற்றுக்கும்

தெரிந்திருக்கும் போல...

எனக்குதான் தெரியவில்லை

அப்பா இறக்கப் போவது..!

 

 

*கி. அற்புதராஜு*

Tuesday, 19 July 2022

படித்ததில் பிடித்தவை (“வாசம்” – ராஜா சந்திரசேகர் கவிதை)

 


*வாசம்*

 

கண்கள் ஒளிர

இசையழகு கெடாமல் பாடுவாள் தங்கை

அவளிடம் பாடல் வாசம்.

 

விட்டுக்கொடுக்காதவர் அப்பா

அவரிடம் கண்டிப்பு வாசம்.

 

மழலை மாறவில்லை குட்டித்தம்பியிடம்

அவனிடம் பிஞ்சு சொற்களின் வாசம்.

 

குனிந்த தலை நிமிராமல்

நோண்டிக்கொண்டே இருக்கும் அண்ணனிடம்

செல்போன் வாசம்.

 

டீவித்தொடர்களிலிருந்து

வெளிவராத பாட்டிக்கு

கதைகளின் வாசம்.

 

வாலாட்டிக்கொண்டே

சுற்றி வருவான் அன்பு

அவனை நாயென்று சொல்லக்கூடாது

அவனுக்கு நன்றிதான் வாசம்.

 

காலநேரத்திற்கு ஏற்றார்போல்

மாறும் வாசம் வீட்டிற்குண்டு.

 

அம்மாவிற்கு

அதைத்தானே கேட்கிறீர்கள்..?

 

எப்போதும் மாறாத

சமையலறை வாசம்..!

 

 

*ராஜா சந்திரசேகர்*