எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday, 22 March 2021

படித்ததில் பிடித்தவை (“வள்ளுவன் சொல்லாத அன்பு” – இரா.இராகுலன் கவிதை)

 


*வள்ளுவன் சொல்லாத அன்பு*

 

“இது

ஒரு பிசாசு

ஒரு சனியன்

ஒரு பைத்தியம்

ஒரு துரோகம்

ஒரு ஆலகால நஞ்சு

ஒரு கம்பிகளில்லா சிறை

ஒரு தொல்லை

ஒரு மக்கு

ஒரு நாராசமாய்ப் போன உயிர்கொல்லி

 

இந்த அன்பு..!”

 

*இரா.இராகுலன்*





Sunday, 21 March 2021

படித்ததில் பிடித்தவை (“மின்சாரக் கொசு மட்டை” – பிருந்தா சாரதி கவிதை)

 


*மின்சாரக் கொசு மட்டை*

 

“நானும் வேட்டைக்காரனாக மாறினேன்

மின்சார கொசு மட்டை வாங்கிய பிறகு.

 

வேறெங்கும் காட்ட முடியாமல்

அடக்கி வைத்த என் கோபமெல்லாம்

பீறிட்டுக் கிளம்புகின்றன

அடங்கா வெறி கொண்டு.

 

நம் ரத்தத்தைக் குடிக்கும்

எத்தனையோ பேரின்

ஒட்டு மொத்தவடிவமாகவும்

ஒரே குறியீடாகவும்

நினைக்கத் தொடங்கினேன்

கொசுவை.

 

கொலைவெறி கொந்தளிக்க

கொசுமட்டையை

ஏ.கே.47 ஆக பாவித்து

சுட்டுத் தள்ளத் தொடங்கினேன்.

 

சட்டத்தின் சந்து பொந்துகளில்

தப்பித்துப் பிழைக்கும் மோசடிப் பேர்வழிகளுக்கு

சற்றும் சளைத்தவை

அல்ல இந்தக் கொசுக்கள்.

 

மட்டையின் ஓட்டைகள் சட்டத்தின்

சந்துபொந்துகள் அளவிற்கு சுலபமானவையாக

இல்லாமல் போனாலும்

குற்றம் புரிந்துவிட்டு தப்பித்து வாழும்

மனிதர்கள் அளவுக்கு

சாமார்தியசாலிகளாக இல்லை கொசுக்கள்.

 

மட்டையில் மாட்டி

படபடவென்ற வெடியோசையோடு

மடிந்து விழுகின்றன.

 

வீழ்ந்தான் எதிரி

என்ற எக்களிப்பைத்

தருகின்றன

அவ்வோசைகள்.

 

ஆழ்மனதில்

நெடுங்கால ரகசிய இச்சையை

தீர்க்கின்றன பிணவாடைகள்.

 

இறகுப்பந்து ஆடுவது போல்

விளையாட்டாக நடந்து முடிகின்றன

கொத்துக் கொத்தாய் கொலைகள்.

 

இம்மட்டையை

வடிவமைத்தவன்

ஒரு மனோதத்துவ நிபுணன்.

 

உள்ளுக்குள் புதைந்து கிடக்கும்

ஆதிமனிதனின்

அடங்காத

வேட்டை வெறிக்கு

தீனிபோடும்

நவீன ஆயுதம் ஒன்றைக்

கண்டு பிடித்து விட்டான்.

 

என் போன்ற

எளியமனிதர்கள் கையிலும்

தண்டிக்கும் அதிகாரம் இருப்பதாய்

எண்ண வைக்கிறது அது.

 

அது கொசுக்களை மட்டும் அழிக்கவில்லை

அநியாயங்களைக்

கண்டும் காணாமல் இருக்கிறேன் என்ற

என் குற்ற உணர்ச்சியையும் சேர்த்தே அழிக்கிறது ஒருவகையில்.

 

அதைவிட முக்கியமானது

கொலைகூட செய்துவிட்டு

மனிதன் எப்படி உறுத்தல் எதுவும் இன்றி

வாழமுடியும் என்கிற

என் சரித்திர சந்தேகத்தைத்

தீர்த்து வைக்கிறது..!”

 

*பிருந்தா சாரதி*




Saturday, 20 March 2021

படித்ததில் பிடித்தவை (“பதற்றம்” – அ.வெண்ணிலா கவிதை)

 


*பதற்றம்*

 

“தோட்டத்திற்குள் நுழையும்

ஒவ்வொரு முறையும்

தவிர்க்க இயலாமல்

நடந்தே விடுகிறது

ஓர் அணிலோ,

தரை கொத்தும் குருவி ஒன்றோ

திடுக்கிட்டு ஓடுவது.

 

தெருவில் நடக்கும் நேரங்களில்

ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்

நாயொன்றைத்

திடுக்கிட்டு எழச் செய்கின்றன

காலடி ஓசைகள்.

 

நடந்தே விடுமென நம்பி

கடைசி விநாடிகளில்

தவிர்க்கப்பட்ட விபத்துகள்

பதற்றமேற்படுத்துகின்றன.

 

சட்டென்று

அறைக்குள் நுழைந்த காற்று

எதிர்பாராமல்

என்னைப் பார்த்ததில்

பதற்றமடைந்து

திரும்புகிறது

கதவை அறைந்து சாத்தி.

 

பதற்றங்கள் பொதுவானவை போலும்..!”

 

*அ.வெண்ணிலா*




Friday, 19 March 2021

படித்ததில் பிடித்தவை (“மலையும்...நானும்..!” – லி போ கவிதை)

 


*மலையும்...நானும்..!*

 

“பறவைகள் அனைத்தும் பறந்து மறைந்தன;

ஓர் ஒற்றை மேகம் மிதக்கிறது.

ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருப்பதில்

நாங்கள் சலிப்பதே இல்லை -

அந்த மலையும் நானும்..!”

 

*லி போ*

(சீனக் கவிஞர்)




Thursday, 18 March 2021

படித்ததில் பிடித்தவை (“சங்கடம்” – வண்ணநிலவன் கவிதை)

 


*சங்கடம்*

 

“எப்போதும் என்னை

எங்காவது அழைக்கின்றனர்

நண்பர்கள்.

 

சிந்தனைச் சிறகடித்துப் பறக்க

கூட்டத்துக்குக் கூப்பிடுகின்றனர்.

 

வேறு சிலர்

‘நாட்டைத் திருத்த வா’ வென்கின்றனர்.

 

பிரம்மானந்த சுவாமிகளோ

ஞானந்தேட வாயேன் என்கிறார்.

 

இதில் பூனைகள் வேறு

தங்களோடு

விளையாட வரவில்லையென்று

கோபிக்கின்றன.

 

யாருடன் போவேன்?

யாருக்கென்று வாழ்வேன்?”

 

*வண்ணநிலவன்*





Wednesday, 17 March 2021

படித்ததில் பிடித்தவை (“குருவிகள் சப்தம்” – தேவதச்சன் கவிதை)

 

*குருவிகள்  சப்தம்*

 

“துணி துவைத்துக் கொண்டிருந்தேன்

காதில் விழுந்தது குருவிகள் போடுகிற சப்தம்

தொடர்ந்து துவைத்துக் கொண்டிருந்தேன்

காதில் விழுகிறது குருவிகள் போய்விட்ட நிசப்தம்

அடுத்த துணி எடுத்தேன்

காதில் விழுந்தது நிசப்தம் போடுகிற குருவிகள் சப்தம்..!”

 

*தேவதச்சன்*


Tuesday, 16 March 2021

படித்ததில் பிடித்தவை (“அவர்கள் வருகிறார்கள்” – மனுஷ்ய புத்திரன் கவிதை)

 


*அவர்கள் வருகிறார்கள்*

 

“அவர்கள் உன் வீடு நோக்கித்தான் வருகிறார்கள்

அவர்கள் என் வீடு நோக்கித்தான் வருகிறார்கள்

அவர்கள் நம் வீடு நோக்கித்தான்

வந்துகொண்டிருக்கிறார்கள்

 

ஒவ்வொரு முறையும்

அதுதான் அவர்கள் கடைசி இலக்கு

என்று நம்புகிறீர்கள்

இல்லை

அவர்கள் ஒவ்வொரு அரணாக

தகர்த்துக்கொண்டு வருகிறார்கள்

கைபர் போலன் கணவாயின் வழியாக

முதல் ஊருடுவல் நிகழ்ந்தது

பிறகு அவர்கள் ஒருபோதும்

வீடு திரும்பவே இல்லை

 

அவர்கள் முதலில்

தேசத்தின் எல்லைகளை ரத்த ஆறுகளால் வரையறுத்தார்கள்

பிறகு வழிபாட்டிடங்களை இடித்தார்கள்

பிறகு ஓவியக்கூடங்களில் ஓவியங்களை எரித்து

ஓவியனை நாடு கடத்தினார்கள்

பிறகு கலவரத்தில் ‘மற்றவர்களின்’ கடைகளை உடைத்து

பொருள்களை திருடினார்கள்

பிறகு ‘மற்ற’ பெண்களின் ஆடைகளை பலவந்தமாக களைந்தார்கள்

பிறகு சிந்தனையாளர்களை

துப்பாக்கியால்

தெருவில் வைத்து சுட்டார்கள்

பிறகு நீதிக்கு போராடுகிறவர்களை

தேசவிரோதிகள் என சிறைக்கு அனுப்பினார்கள்

பிறகு மாட்டு மாமிசம் உண்பவர்களின்

மாமிசத்தை உண்டார்கள்

இப்போது கல்விக்கூடங்களில்

முகமூடியணிந்து ஆயுதங்களுடன் நுழைகிறார்கள்

 

ரத்தம் சிந்தும் புகைப்படங்கள்

பரவலாகக் காணக்கிடைக்கின்றன

நாசிகளின் புதிய குழந்தைகள்

கடைவாயில் கோரைப் பற்களுடன்

சிரிக்கும் புகைப்படங்களும் கிடைக்கின்றன

அவர்களுக்கான எதிர்ப்பின் காணொளிகளும் கூட

கிடைக்கின்றன

கோபத்தின் முகங்கள்

அனல் போல் தகிக்கின்றன

 

அவர்கள் இலக்கு கடைசியாக

உங்கள் வீடுகளுக்குள் நுழைவது

உங்கள் வீட்டை எடுத்துக்கொள்வது

உங்கள் குழந்தைகளை

உங்களிடமிருந்து பிரித்து அகதிகளாக்குவது

நீங்கள் என்றால் யார்?

அவர்களோடு இல்லாத எல்லோரும்தான்

அப்போது மதமோ இனமோ

ஒரு பொருட்டில்லை என்றாகிவிட்டிருக்கும்

நீதியின் பக்கம் நிற்கும்

எல்லோர் கரங்களையும்

பின்புறமாகப் பிணைத்து

தெருவில் நடத்திச் செல்வார்கள்

அல்லது நீங்கள் காணாமல் போனவர்களின்

புகைப்படங்களில் ஒரு படமாகிவிடுவீர்கள்

 

நம்புங்கள்

நான் உங்களை அச்சுறுத்தவில்லை

அஞ்சுவதால் எதுவும் மாறப்போவதில்லை

 

அவர்கள் எங்கெல்லாம் வர முடியாது என

நம்புகிறீர்களோ

அங்கெல்லாம் வருகிறார்கள்

எதெல்லாம் உங்கள் பாதுகாப்பென்று நினைக்கிறீர்களோ

அது எல்லாவற்றையும் உடைக்கிறார்கள்

 

முகமூடி அணிந்து தடியுடன் நிற்கும் ஒருவர்

ஆணா பெண்ணா என்று குழப்பமாக இருக்கிறது

தலை முடியும் உடலின் நளினமும்

அது பெண்ணாக இருக்கக்கூடும் என்ற

சாத்தியத்தை அளிக்கிறது

ஆனால் ஒரு பெண் அதைச் செய்யமாட்டாள் என

என் இந்திய மனம் நம்ப விரும்புகிறது

இந்த தேசம் குறித்த எல்லா நம்பிக்கைகளும்

இப்படித்தான் உடைகின்றன

 

அவர்கள் தெருமுனைக்கு வந்துவிட்டார்கள்

தெருவிளக்கின் வெளிச்சத்தில்

பட்டியலில்

உங்கள் பெயர் இருக்கிறதா என

படித்துப்

பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்..!”

 

*மனுஷ்ய புத்திரன்*