எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday, 24 May 2020

படித்ததில் பிடித்தவை (“அப்பாவின் ஞாபகம்” – பழ.புகழேந்தி கவிதை)


அப்பாவின் ஞாபகம்

ஆசிரியப்பணியில்
முதல்முறையாய் பணியில் சேர்ந்தேன்
அந்த இரண்டாம் வகுப்பில்

பாடம் நடத்துகையில்
ஒரு சிறுமியின்
அழுகை
காரணம் கேட்டேன்
அப்பாவின் ஞாபகம்
என்றாள்.
ஊருக்கு போயிருக்கிறாரா..?’
இல்ல போனவருசம்
செத்துப் போயிட்டார்

ஞாபகம் ஏன் திடீரென்று?’
உங்க சட்டை மாதிரியே
அவரும் போட்டிருப்பார்

சட்டையின் கோடுகளுக்குள்
ஒரு ஞாபகத்தின் சிறையிருப்பு
கழற்றி போடும்வரை
கனமாகவே இருந்தது
உடம்பில்..!”

      *பழ.புகழேந்தி*

Saturday, 23 May 2020

படித்ததில் பிடித்தவை (“குழந்தைகளின் உலகம்” – அ.வெண்ணிலா கவிதை)


குழந்தைகளின்  உலகம்

பல்லு தேச்சியா
பால் குடிச்சிட்டியா
ஹோம் ஒர்க் எழுதிட்டியா
யூனிபார்ம் போட்டாச்சா
ரிக்சா வந்திடுச்சா
பென்சில் எடுத்துக்கிட்டியா
விளையாட மாட்ட தானே
அடிக்காம வந்தியா யாரையும்

கை கால் கழுவிக் கிட்டியா
சாப்பிட்டியா
தூங்கப் போ நேரமாச்சு

கேள்விகளால்
சுழற்றி விடப்படுகின்றன
குழந்தைகளின்
உலகம்..!

           *அ.வெண்ணிலா*

Friday, 22 May 2020

படித்ததில் பிடித்தவை (“பயமற்றவன்” – யூமா வாசுகி கவிதை)


பயமற்றவன்

இனி ஒண்டுவதற்கு
எதுவுமில்லாத வெற்று வீதி.
அணையாது காத்து வந்த
சிகரெட்டின் கடைசிப் புகையுடன்
மடியின் கனம் அகல
வழிப்பயமற்ற மழைப் பயணம்.

           *யூமா வாசுகி*

Thursday, 21 May 2020

படித்ததில் பிடித்தவை (“யானை” – ரெஜி தாரகன் கவிதை)


யானை

கடை வீதியில் நடந்து
பிச்சை எடுத்து
நான் கொடுத்த 10 ரூபாய்க்காக
தும்பிக்கை உயர்த்தி
வணங்கிச் செல்கிறது
தன் பலம் தெரியாத யானை
ஒரு சராசரி இந்திய
வாக்காளனைப் போல..!

           *ரெஜி தாரகன்*

Wednesday, 20 May 2020

படித்ததில் பிடித்தவை (“கன்னுகுட்டி” – இலாகு பாரதி கவிதை)


*கன்னுகுட்டி*

பக்கத்து வீட்டு
செல்வியும் நானும்
ஆடிய
அப்பா அம்மா
விளையாட்டில்
நான் அவளுக்கு
கட்டிய முதல்
மல்லிக்கொடி தாலி.

நானும் அவளும்
மாறிமாறி
பொம்மக்காவுக்கு
கொடுத்த முதல்
ஆசை முத்தம்.

நானே செய்து
அவளுக்கு மாட்டிவிட்ட
முதல் ஓலை வளையல்.

யாருக்கும் தெரியாமல்
அவள் வீட்டு
தோட்டத்திலிருந்து
பறித்து
அவளுக்கு
சூட்டிவிட்ட
முதல் காகிதப்பூ.

நான் அவளிடம்
சொன்ன முதல்
காதல் வார்த்தை
உன்னை எனக்கு
ரொம்ப புடிக்கும்டீ
செல்வி’.

நான் அவளுக்கு
கொடுத்த
முதல் காசு
பத்து பைசாவில்
வாங்கிய
பத்து ரூபா

நானும் அவளும்
ஆடிய முதல் ஆட்டம்
கண்ணாமூச்சி
ரே... ரே...
காட்டு மூச்சி
ரே... ரே...

அஞ்சாங்கிளாஸ்
படிக்கும் போதுகூட
என்னைப் பார்த்து
சிரித்து
கண்ணை பொத்திக்கொண்டு
போனவள்
என்னதான் இப்போது
பட்டினத்தில் படித்தாலும்
ஊருக்கு வரும்போதுகூட
என்னைப் பார்க்க
வருவதில்லை.

பாட்டியிடம் சொன்னால்
அவள் பெரிய மனுசிடா
என்கிறாள்.
அப்படியானால்
என்னை மட்டும் ஏன்
வீட்டில் எல்லோரும்
கன்னுகுட்டி கன்னுகுட்டி
என்கிறார்கள்.

   *இலாகு பாரதி*

Tuesday, 19 May 2020

படித்ததில் பிடித்தவை (“தேடல்” – சிவசங்கரி கவிதை)


தேடல்

கடல் பார்க்க
போயிருந்த சிறுமி 
கரையில் அமர்ந்து
கைகளால் மணலை
அளைந்த பொழுது
விரல்களில் சிக்கிய
பழுப்புநிற அரைவட்ட
கிளிஞ்சல் ஒன்றை
வெகுநேரம்
உள்ளங்கையில் வைத்து
அழகு பாரத்தபின்

ஏதோ நினைத்தவளாய்
கடலில் வீசியெறிந்து
திரும்பினாள்,

தேடும் அலைகளின்
தேவையை தீர்த்துவைத்த
நிம்மதியில்...

    - சிவசங்கரி.

Monday, 18 May 2020

படித்ததில் பிடித்தவை (“காற்றின் வீடு” – ஜெயமோகன் கவிதை)


காற்றின் வீடு

கைவிடப்பட்ட வீட்டின் உள்ளே
காற்றுதான் நுழைய துணிகிறது.
இயல்பாக தன்னந்தனியாக
சன்னல் கதவை அசைத்துக்கொண்டு
உள்ளே செல்கிறது.
சுவர்களை வருடியபடி
காலியான அறைகள் தோறும்
ஒழுகிச்செல்கிறது.
ஒட்டடைகள் மீது
மெல்ல ஊதி அதிரச்செய்கிறது.
தரையின் குப்பைகளை அள்ளி
சுவரோரமாகக் கூட்டுகிறது.
பயனிழந்துபோன அனைத்தையும் தொட்டு
மர்மமாகச் சிரித்துக்கொள்கிறது.
வெளியேறும் முன்பு
தூசுப்படலத்தின் மென்மைமீது
தன் விரல்களால்
எதையோ கிறுக்கிச் செல்கிறது.”

         -  ஜெயமோகன்.