எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday, 7 July 2017

படித்ததில் பிடித்தவை (“உலகம் தெரிந்தும் உள்ளம் தெரியாதவர்கள்!” - சுஜாதா கட்டுரை)


உலகம் தெரிந்தும் உள்ளம் தெரியாதவர்கள்!

மாலை, தினம் போல் மெரீனாவில் நடந்துவிட்டு, சிமென்ட் பெஞ்சில் உட்கார்ந்துகொண்டு, முகத்தில் கடற்காற்று விளையாட, பிரபஞ்சத்தின் ஆரம்பத்தையும் இன்கம்டாக்ஸையும் யோசித்துக் கொண்டிருந்தபோது, பக்கத்தில் வீற்றிருந்தவர் என்னை அறியாமல் என் செல்போனைக் கவர்ந்துகொண்டு, 'சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார்' என்று சொல்ல ஆகும் நேரத்தில் காணாமல் போனார்!

இந்த மாதிரி சந்தர்ப்பங்களில், அடுத்து ஆகவேண்டியதைத்தான் யோசிப்பேன். முதலில் செல் கம்பெனிக்குத் தகவல் சொல்லி, சிம் கார்டை எந்த விதக் குற்ற நோக்கத்துக்கும் பயன்படாமல் செயலறச் செய்ய வேண்டும். அதன்பின், மறு செல் பற்றி யோசிக்க வேண்டும்.

இடையே, செல்லில்லாத வாழ்க்கையை யோசித்தேன். முகம் தெரியாத பெண்கள், எனக்கு வங்கிக் கடன்கள் கொடுப்பதாக வற்புறுத்தமாட்டார்கள். சங்கராச்சாரியார் கைதிலிருந்து global warming வரை எனக்கு எஸ்.எம்.எஸ். வராது!

ரிங்டோனை 'கல்யாணம்தான் கட்டிக்கிட்டு'வுக்கு மாற்ற முடியாது. 'பிரகாஷ்? க்யா யார்... அபிதக் மால் நை பேஜா?' என்கிற நடு ராத்திரி தப்பு நம்பர் அதட்டல்கள் நின்றுபோகும். யோசித்துப் பார்த்ததில், 'செல்லற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்ற தீர்மானத்துக்கு வந்தேன். அன்வர் அக்காவியின் (Anwar Accawi) 'டெலிபோன்' என்னும் கட்டுரை (Best American Essays, 1998) நினைவுக்கு வந்தது. லெபனானில் மக்தலோனா என்ற அவரது கிராமத்தில் முதன் முதலாக டெலிபோன் வந்தது பற்றிய அருமையான கட்டுரை அது.

கிராமத்தின் கலாசாரமே, அடையாளமே ஒரு டெலிபோன் வருகையால் மாறிப் போகிறது. நகரம் போன் மூலம் வேலைக்கு அழைக்கிறது. குடும்பங்கள் ம் பெயர்கின்றன. கிராமம் தன் அடையாளங்கள் சிலவற்றைத் திரும்பப் பெற முடியாமல் இழக்கிறது. To get something, you have to give something. எதையாவது பெற, எதையாவது இழக்க வேண்டும்! செல்போனுக்கு நாம் இழந்தது, நம் அந்தரங்கத்தை! என் மனைவி, ‘'அப்பவே சொன்னேனே... உங்க ஞாபக மறதிக்கு செல்போன் உதவாது. கழுத்துல கயிறு கட்டிண்டு தொங்க விட்டுக்குங்கோ இனிமேல்!’' என்றாள். 'அந்தத் தாலி வேண்டுமா?' என யோசிக்கிறேன்.
 
'பக்கப் பாதைகள்' (Sideways) என்னும் திரைப்படம், இந்த வருடம் தங்க பூகோள அவார்டு வாங்கியிருக்கிறது. ஆஸ்கருக்கும் சிறந்த படமாகப் பரிந்துரைக்கப்பட்டு இருக்கிறது. இரண்டு நண்பர்கள். ஒருவன் எழுத்தாளன். மற்றவன் டி.வி. நடிகன். பின்னவனுடைய திருமணத்துக்குக் காரில் செல்கிறார்கள். கலிபோர்னியாவின் திராட்சைத் தோட்டங்களைச் சார்ந்த ஒயின் தயாரிக்கும் சிறுசிறு நகரங்களின் ஊடே பயணம்.

தன் நாவல் பிரசுரமாகுமா என்ற எழுத்தாளனின் கவலை. ஒயின் தயாரிப்பதைப் பற்றிய அவனது நுட்பமான அறிவு. முதல் திருமணம் முறிந்து போனவன். நடிகன், அடுத்த வார திருமணத்துக்கு முன்பு குறைந்தபட்சம் இரண்டு பெண்களையாவது 'கரெக்ட்' பண்ணிவிட்டு, நல்ல பையனாக வேண்டும் என்னும் அவசரத்தில் உள்ளவன்.

இவர்களின் ஒரு வாரப் பயணத்தில், அமெரிக்க மண வாழ்க்கையில் உள்ள நிலையாமையையும், உலகம் தெரிந்தும் உள்ளம் தெரியாதவர்கள் வாழ்க்கையைப் பாழடித்துக் கொண்டு சந்தோஷம் தேடும் வினோதத்தையும் அலெக்ஸாண்டர் பெய்ன்திறமையாகச் சொல்லியிருக்கிறார்.

'ஏவியேட்டர்' உடன் போட்டி போட முடியாதெனினும், ஒரு விருதாவது கிடைக்கும்!

 யாரும் நம் தின வாழ்க்கையில் உள்ள 'டாப் 10' பொய்களைச் சேகரித்ததாகத் தெரியவில்லை. இதோ அந்தப் பட்டியல்! எந்தச் சூழ்நிலையில், இந்தப் பொய்கள் சொல்லப்படுகின்றன என்பதை விகடன் வாசகர்கள் சுலபமாக யூகிக்கலாம்.

1. அனுப்பிச்சாச்சே... இன்னும் வந்து சேரலையா?
2. இந்தப் புடவைல நீ பருமனாவே தெரியலை!
3. இப்படித் தலை வாரினா, உங்களுக்கு நல்லா இருக்கு!
4. நாப்பது வயசுனு சொல்லவே முடியாது!
5. ஒரு தடவை கேட்டுட்டா, அப்படியே பாடிடுவா!
6. ஒரே ஒரு மார்க்ல போச்சு!
7. இந்த விருதை நான் எதிர்பார்க்கவே இல்லை.
8. உங்க நம்பர் என்கேஜ்டாவே இருந்தது!
9. நான் பொய் சொல்லவே மாட்டேன்.
10. ஏழ்மை நிச்சயம் ஒழிஞ்சுடும்!

இந்த 'டாப் 10' பொய்களில் விட்டுப்போன கீழ்வரும் வார்த்தைகளைச் சேர்த்தால், 'டாப் 10' நிஜங்கள்...

1. எத்தனைனு ஞாபகமில்லை.
2. விலையையே பார்த்துக்கிட்டு இருக்கேன்.
3. வழுக்கையை மறைக்கிறதால...
4. நாப்பத்தஞ்சு சொல்லலாம்.
5. அபஸ்வரமா!
6. நாலாவது தடவையும்.
7. எத்தனை பேரைப் பார்த்து, எத்தனை லஞ்சம் கொடுத்தேன்!
8. உங்க நம்பர் என்ன?
9. மௌன விரதத்தின்போது!
10. எப்பனு சொல்ல மாட்டேன்.

[‘கற்றதும் பெற்றதும்’ – சுஜாதா]

நன்றி: ஆனந்த விகடன்.

*** *** *** ***

Sunday, 2 July 2017

படித்ததில் பிடித்தவை (“டிஸ்கவரி” - சுஜாதா கட்டுரை)


டிஸ்கவரி பற்றி சுஜாதா

பதினான்கு நாட்கள் விண்வெளியில் சுற்றிவிட்டு சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்று அங்கேயே நீண்டநாள் வாழும் இருவரை விசாரித்துவிட்டு, அத்யாவசியப் பொருள்களைக் கொடுத்துவிட்டு, கொஞ்சம் ரிப்பேர் பார்த்துவிட்டு செவ்வாய்க்கிழமை அமெரிக்காவின் விண்ஓடம் ஷட்டில் டிஸ்கவரிஃப்ளோரிடாவில் வானிலை சரியில்லாததால் கலிபோர்னியாவில் அதிகாலை வந்து இறங்கியபோது, அரியானாவிலிருந்து அமெரிக்கா வரை லட்சக்கணக்கானவர்கள் பெருமூச்சுவிட்டார்கள். டிஸ்கவரி விண்ணில் சீறியபோதுஹூஸ்டனில் உள்ள விண்வெளி அதிகாரிகள் சாதாரணமாக விண்கப்பல் வந்து இறங்கியவுடன் ஒருவரை ஒருவர் கட்டியணைத்துக் கொள்வார்கள். இந்தமுறை சுருக்கமாக, “டிஸ்கவரி வந்து சேர்ந்துவிட்டதுஎன்றார்கள். காரணம், நினைவுத் திரைகள் பின்னோக்கிச் செல்லுகின்றன…
 டிஸ்கவரி டீம்2003-ம் ஆண்டு பிப்ரவரியில் கொலம்பியாவிண்ஓடம் திரும்பி வரும்போது பூமியின் காற்று மண்டலத்தில் அசுரகதியில் நுழைந்ததும் வெடித்து சிதறி, இந்தியாவின் கல்பனா சாவ்லா உட்பட ஏழு விண்வெளி வீரர்கள் இறந்து போனார்கள். இதனால் நாசாவின் நிகழ்ச்சிநிரல் தாமதமாகி பல்வேறு எச்சரிக்கைகள் எடுத்துக்கொள்ள வேண்டியிருந்தது. கொலம்பியா விண்ஓடத்தை வீழ்த்தியதுமுக்கால் கேஜி நுரைத் தண்டு அதன் எரிபொருள் டாங்கிலிருந்து பிய்ந்து, இறக்கையில் ஒரு சின்ன ஓட்டை போட்டதே. இது மறுபடி நிகழாமல் இருக்கஇரண்டரை ஆண்டுகளில் நூறு கோடி டாலர் செலவழித்து சரிபார்த்து அனுப்பியும் கொலம்பியா விண்கலம் போலவே டிஸ்கவரியிலும் கொஞ்சம் நுரைமெத்தை பிய்த்துக்கொண்டு கலங்க வைத்தது. கொலம்பியா போல இதுவும் வெடித்துவிடும் அரிய சாத்தியம் இருந்ததால் எல்லார் வயிற்றிலும் நெருப்பு. கொலம்பியா டீம்
இந்த விண்ஓடங்களை எதற்கு அனுப்புகிறார்கள்? விண்வெளியில் மற்ற கிரகங்களை நோக்கி பயணம் செய்யக்கூடிய விண்கலங்களையும் சேட்டிலைட்களையும் கொண்டுசென்று விடுவிக்கிறார்கள்.

பூமிக்கு மேலே 369 கிலோமீட்டர் உயரத்தில் 92 நிமிடத்துக்கு ஒருமுறை சுற்றிக் கொண்டிருக்கும் சர்வதேச விண்நிலையத்துக்கு விஜயம் செய்து, அங்கு அளவுக்கு தேவையான அத்தியாவசியப் பொருள்களைச் சேர்ப்பித்து, தேவையற்ற குப்பையை சேகரித்துக்கொண்டு திரும்புகிறார்கள்.

விண்வெளியில் நடப்பது, ரிப்பேர் செய்வது, விண் விவசாயம், நெடுநாள் விண்வெளிப் பயணத்தின் பாதிப்புகள் போன்ற விஷயங்களில் ஆராய்ச்சி செய்ய பரிசோதனைகள் செய்கிறார்கள். விண்ணில் மிதந்துதரையில் தவழ்ந்துஅப்பாடா 

கொலம்பியா வெடித்தபோது நாசாநிறுவனம் கலங்கித்தான் போய்விட்டது. கோடிக்கணக்கான டாலர்கள் செலவழித்து உருவாக்கிய டிஸ்கவரியிலும் குறைகள் தென்பட்டதால், அடுத்து அவர்கள் அனுப்பவிருக்கும் அட்லாண்டிஸ்ஷட்டில் புரோக்ராம் தாமதமாகிறது. இந்தமுறை தப்பித்தோம் பிழைத்தோம்தான். சிதைந்த பாகம்இப்படி அனுப்பப்படும் விண்ஓடங்கள் விலைமதிப்பில்லாதவை என்ற போதும்…. செலவுக் கணக்கு என்று பார்த்தால் 200 கோடி டாலர்களைத் தொடுகிறது. அமெரிக்கா ஏற்கெனவே அனுப்பியிருக்கும் எண்டெவர்விண்ஓடத்தைக் கட்டுவதற்கு 210 கோடி டாலர்கள் செலவாயின.

இத்தனை செலவழிக்க வேண்டுமா என்று அமெரிக்காவை கேட்டால், அவர்களுக்கு கோபம் வரும். இதனால் மனித சாதிக்கு எத்தனையோ நன்மைகள் எதிர்காலத்தில் ஏற்படும் என்று சொல்லி, நிகழ்காலத்தில் ஆப்பிரிக்காவில் சோனிக் குழந்தைகள் செத்துப்போவதை நிராகரிக்கிறார்கள்.

ரஷ்யா, அளவாகத்தான் செலவிடுகிறது. அவர்களின் மிர்என்னும் விண்நிலையமும் சோயுஸ்என்னும் விண்கப்பலும் அத்தனை செலவில்லை. 

எதிர்காலத்தில் இவ்வகையிலான விண்நிலையங்களை பெரிதாக்கி சூரியக் குடும்பத்தின் மற்ற கிரகங்களை நோக்கி நீள்பயணம் செய்யவும், ஸ்டீபன் ஹாக்கிங் சொன்னது போன்ற விண் நகரங்கள் அமைக்கவும் இந்த டிஸ்கவரியின் பயணம் ஒருவிதத்தில் உதவியிருக்கிறது. இடையிடையே தடங்கலுக்கு வருந்தினாலும், ”நாசாமெள்ள மெள்ள தவறுகளைக் குறைத்து வருகிறது.

என்றாவது ஒருநாள் உங்கள் கொள்ளுப்பேத்தி, ”தாத்தா! செவ்வாய்கிரகத்திலிருந்து உங்களுக்கு என்ன வாங்கிட்டு வரணும்?“ என்று கேட்டால், ”ஒண்ணும் வேண்டாம்மாபத்திரமா திரும்பி வாம்மா. அங்கேயே யாரையாவது கல்யாணம் கட்டிக்கிட்டு செட்டில் ஆகாம இருந்தா சந்தோஷம்" என்பீர்கள்!

[நன்றி: ஜூனியர் விகடன்]

Saturday, 24 June 2017

படித்ததில் பிடித்தவை (“பணம்” - சுஜாதா கட்டுரை)


பணம்
பணம் என்பது எனக்கு வெவ்வேறு பிராயத்தில் வெவ்வேறு அர்த்தங்கள் கொண்டிருந்தது. பள்ளியில் படிக்கும்போது மத்தியானம் சாப்பிட வீடு திரும்பிவிடுவதால், பாட்டி கண்ணில் காசைக் காட்டமாட்டாள். எப்போதாவது இரண்டணா கொடுத்து பப்பரமுட்டுவாங்கிச் சாப்பிடு  என்று தருவாள். இரண்டணா ஒரு இரண்டுங்கெட்டான் நாணயம். ரங்கராஜா கொட்டகையில் சினிமா தரை டிக்கெட் வாங்கலாம். பிரச்சனை, வெளியே வரும்போது சட்டையெல்லாம் பீடி நாற்றம் அடிக்கும். பாட்டி கண்டு பிடித்துவிடுவாள்.

பாட்டிக்கு ஜனோ பகார நிதி என்று ஒரு வங்கியில் கொஞ்சம் குத்தகைப் பணம் இருந்தது. அதிலிருந்து எப்போதாவது எடுத்து வரச்சொல்வாள். 25 ரூபாய். நடுங்கும் விரல்களில் இருபத்தைந்து தடவையாவது எண்ணித்தான் தருவார்கள். பாங்கையே கொள்ளையடிக்க வந்தவனைப்போல என்னைப் பார்ப்பார்கள்.

திருச்சி செயிண்ட் ஜோசப் காலேஜில் படித்தபோது, ஸ்ரீரங்கத்திலிருந்து திருச்சி டவுனுக்கு மூணு மாசத்துக்கு மஞ்சள் பாஸ் ஒன்று வாங்கித் தந்துவிடுவாள். லால்குடி பாசஞ்சரில் பயணம் செய்து கல்லூரிக்குப் போவேன். மத்யானம் ஓட்டலில் சாப்பிட இரண்டணா கொடுப்பாள். பெனின்சுலர் ஓட்டலில் ஒரு தோசை இரண்டணா. சில நாள் தோசையத் துறந்து விட்டு இந்தியா காப்பி ஹவுசில் ஒரு காப்பி சாப்பிடுவேன். ஐஸ்க்ரீம் எல்லாம் கனவில்தான்.

 எம்.ஐ.டி படிக்கும் போது அப்பா ஆஸ்டல் மெஸ் பில் கட்டிவிட்டு என் சோப்பு சீப்பு செலவுக்கு 25 ரூபாய் அனுப்புவார். பங்க் ஐயர் கடையிலும் க்ரோம்பேட்டை ஸ்டேஷன் கடையிலும் எப்போதும் கடன்தான். எப்போது அதைத் தீர்த்தேன் என்று ஞாபகமில்ல.

இன்ஜினீயரிங் படிப்பு முடிந்து ஆல் இண்டியா ரேடியோவில் ட்ரெய்னிங்கின்போது ஸ்டைப்பெண்டாக ரூ.150 கிடைத்தது. ஆகா கனவு போல உணர்ந்தேன். அத்தனை பணத்தை அதுவரை பார்த்ததே இல்லை. சவுத் இண்டியா போர்டிங் அவுசில் சாப்பாட்டுச் செலவு ரூ.75. பாக்கி 75_ஐ என்ன செய்வது என்று திணறினேன். உல்லன் ஸ்வெட்டர்,  ஏகப்பட்ட புத்தகங்கள் என்று வாங்கித் தள்ளினோம். மாசக் கடைசியில் ஒரு ரூபாய், ரெண்டு ரூபாய் மிச்சமிருந்தது.

அதன்பின் வேலை கிடைத்தது. 1959_ல் சென்ட்ரல் கவர்மெண்டில் ரூ.275 சம்பளம். அப்பாவுக்கு ஒரு டிரான்சிஸ்டர் வாங்கிக் கொடுத்தேன். அம்மா எதுவும் வேண்டாம் என்று சொல்லி விட்டாள். ஒரு மாண்டலின் வாங்கி ராப்பகலாக சாதகம் பண்ணினேன். வீட்டுக்குள் ஆம்பிளிஃபயர், ரிகார்ட் ப்ளேயர் எல்லாம் வைத்து அலற வைத்தேன். எல்லாவற்றையும் அம்மா சகித்துக் கொண்டிருந்தாள்.

பி.எஸ்சி., பரீட்சை எழுதி டில்லிக்கு டெக்னிக்கல் ஆபீசராக வந்துவிட்டேன். சம்பளம்? மயங்கிவிடாதீர்கள் ரூ.400! முதன்முதலாக ஐ.ஓ.பி.யில் என் பெயரில் ஒரு அக்கவுண்ட், சகட்டு மேனிக்கு புத்தகங்கள், வெஸ்பா ஸ்கூட்டர் அலாட்மெண்ட் ஆன போது உலகத்தின் உச்சியைத் தொட்டமாதிரி இருந்தது.

அடுத்தபடி பாரத் எலக்ட்ரானிக்ஸில் டெபுட்டி மேனேஜராகச் சேர்ந்தபோது சம்பளம் முதல் முதலாக நான்கு இலக்கத்தைத் தொட்டது. பங்களூருக்கு இடமாற்றம். செகண்ட் ஹாண்டில் கருப்பு அம்பாஸடர் கார்; திருமணம்.
 என்னிடம் ஒரு பழக்கம் தொடர்ந்து இருந்து வந்தது. ஒரு அளவுக்கு மேல் பணம் சேர்க்க மாட்டேன், சேராது. எப்போதும், தேவைக்குச் சற்றே சற்று குறைவாகவே பணம் இருக்கும். இதில் ஒரு பரவசம் இருக்கிறது. யாராவது வந்து பெரிசாக எதிர்பார்த்து கடன் கேட்டால் வேஷ்டியை அவிழ்த்து ஸாரி, பாங்க் புத்தகத்தைத் திறந்து காட்டிவிடலாம். ஒரு சிறிய அறிவுரை, அதிகப் பணம் சேர்க்காதீர்கள். இம்சை, தொந்தரவு...


இன்று பலபேருக்கு என்னிடம் சந்தேகம். சினிமாவுக்கு எல்லாம் கதை எழுதி வருகிறாய், அவர்கள் இரண்டு கைகளிலும் தாராளமாய் பணம் கொடுப்பார்கள். புத்தகங்களிலிருந்தும் பத்திரிகைகளிலிருந்தும் ராயல்டி வரும். இத்தனை பணத்தை வைத்துக் கொண்டு என்னதான் செய்கிறாய்?

என் அனுபவத்தில் ஓரளவுக்கு மேல் பணம் சேர்ந்து விட்டால், ஒரு பெரிய செலவு வந்தே தீரும். இது இயற்கை நியதி. அந்தச் செலவு வைத்தியச் செலவாக இருக்கும் அல்லது வீடு, கார் ஏதாவது வாங்கினதுக்கு வங்கிக்கடனாக இருக்கும். இதிலிருந்து முக்கியமாக நான் கண்டுகொண்டது, செலவு செய்தால்தான் மேற்கொண்டு பணம் வருகிறது என்பதே.

இன்று பலருக்கு என் பண மதிப்பைப் பற்றிய மிகையான எண்ணங்கள் இருக்கலாம். உண்மை நிலை இதுதான். இன்றைய தேதிக்கு கடன் எதுவும் இல்லை. என்னிடம் இருக்கும் பணத்தில் குற்றநிழல் எதுவும் கிடையாது. ராத்திரி படுத்தால் பத்து நிமிஷத்தில் தூக்கம் வந்து விடுகிறது.

எகனாமிஸ்ட்டுகள் என்ன என்னவோ கணக்குகள் போட்டு ஜிஎன்பி, ஜிடிபி என்றெல்லாம் புள்ளிவிவரம் தரலாம். நான் தரும் எளிய புள்ளி விவரம் இது. ஒரு ரூபாய், அதன் வாங்கும் மதிப்பு கவனித்தால் உங்களுக்கு இந்தியப் பொருளாதாரம் சட்டென்று புரிந்துவிடும். இந்த வாங்கும் மதிப்பு காலப்போக்கில் குறைந்து கொண்டே வந்திருக்கிறது. முன்பெல்லாம் ஒரு ரூபாய் ஒரு வாரம் வரை தங்கியது. இன்று ஒரு மணிநேரம்கூட, சிலசமயம் ஒரு நிமிஷம் கூட தங்குவதில்லை.

யோசித்துப் பாருங்கள்.

- சுஜாதா.
*** **** ***

Sunday, 18 June 2017

படித்ததில் பிடித்தவை (“ஒரு கணம் முன்பு” - மனுஷி கவிதை)


ஒரு கணம் முன்பு
"எப்போது நிராகரிப்பாய் என்னை ?"
எனக் கேட்டாய்.

"எப்போது வெறுப்பாய் என்னை ?"
எனக் கேட்டாய்.

சற்றும் யோசிக்காமல் சொன்னேன்,
"நீ என்னை நிராகரிப்பதற்கு ஒரு கணம் முன்பு.
நீ என்னை வெறுப்பதற்கு ஒரு கணம் முன்பு."

- மனுஷி. ('முத்தங்களின் கடவுள்' கவிதை தொகுப்பிலிருந்து...)

Monday, 12 June 2017

படித்ததில் பிடித்தவை (“ஒரு சிறுமியின் வேண்டுதல்...” - கவிதை)


ஒரு சிறுமியின் வேண்டுதல்...

"நெடுஞ்சாலையில் விழுந்துகிடக்கும்
ஒரு பூவைப் பார்த்துவிட்டு
பேருந்தில் அமர்ந்திருக்கும் சிறுமி
அவசர அவசரமாகக்
கண்களை மூடி
கடவுளை வேண்டுகிறாள்
ஒரு வேகமான
காற்று வேண்டி..!"

- பிரபு.

Tuesday, 6 June 2017

படித்ததில் பிடித்தவை (“வாழ்தலின் இனிமை!” - எஸ்.ராமகிருஷ்ணன் கட்டுரை)


வாழ்தலின் இனிமை!
டேனிஷ் பழங்கதை ஒன்று வாழ்வதற்கான உரிமை அனைவருக்கும் சமமானது என்பதைப் பற்றிப் பேசுகிறது. முன்னொரு காலத்தில் ஒரு தச்சன் இருந்தான். அவன் காட்டில் தான் வெட்டுவதற்கு விரும்புகிற மரத்திடம் சென்று உன்னை வெட்டுவதற்கு என்னை அனுமதிப்பாயா?” எனக் கேட்கக்கூடியவன். மரம் சம்மதித்தால் மட்டுமே அதை வெட்டுவான். தான் அந்த மரத்தை என்ன பொருளாக செய்ய விரும்புகிறான் என்பதையும் அந்த மரத்திடம் தெரிவிப்பான். மரம் சம்மதம் தந்த பிறகே அந்த மரத்தை வெட்டுவான். அப்படி ஒரு முறை ஒரு கருங்காலி மரத்திடம் சென்று நீ மூப்படைந்து விட்டாய்; உன்னை வெட்டி மேஜை செய்யலாம் என்றிருக்கிறேன்”  என்றான். அதைக் கேட்ட மரம் சொன்னது:

நானே இலைகளை உதிர்த்துவிட்டு நிற்கிறேன். மழைக் காலம்வேறு தொடங்கப் போகிறது. மழையின் குளுமையை உள்வாங்கி, புத்துயிர்ப்புக் கொள்ள ஆசைப்படுகிறேன். மழைக் காலம் முடிந்தவுடன், வா!என்றது.

தச்சன் மறுவார்த்தைப் பேசவில்லை. மழைக் காலம் தொடங்கி முடியும் வரை, காத்திருந்தான். மழைக்குப் பிறகு அந்தக் காட்டின் தோற்றமே உருமாறியிருந்தது. தான் வெட்டுவதற்கு விரும்பிய மரத்திடம் போய், “உன்னை நான் வெட்டிக்கொள்ளலாமா?” எனக் கேட்டான்.

அவசரப்படுகிறாயே, குளிர்காலப் பனி என்னைத் தழுவிக்கொள்வதை அனுபவிக்க வேண்டாமா? நான் வாழ ஆசைப்படுகிறேன். குளிர்காலம் முடியும் வரை காத்திரு…” என்றது மரம்.

தச்சன் இன்னும் மூன்று மாதங்கள்தானே எனக் காத்திருந்தான். அந்த ஆண்டு குளிர் அதிகமாகவே இருந்தது. காட்டில் பனிமூட்டம் அடர்ந்திருந்தது. குளிர்காலம் முடிந்து கோடரியோடு காட்டுக்குப் போனான்.

மரம் சொன்னது: அதிக குளிரில் வாடிப் போயிருக்கிறேன். கோடை சூரியனில் என்னை சூடுபடுத்திக்கொள்கிறேன். கோடையைக் காணாத வாழ்க்கை என்ன வாழ்க்கை!என்றான். தச்சனுக்கு சலிப்பாக இருந்தது. ஆனாலும், தன் அறத்தை மீறி நடந்துகொள்ள முடியாதே என அவன் வெறுங்கையோடு வீடு திரும்பினான்.

கோடையின் முரட்டு சூரியன் காட்டின் மீது தன் எரிகொம்புகளை ஊன்றி கடந்துபோனது. வெயிலின் உக்கிரம் காடெங்கும் பரவியது. மரம் வெயிலில் உலர்ந்து போனது. தச்சன் மீண்டும் காட்டுக்குத் திரும்பிப் போனான்.

இப்போது மரம் சொன்னது:

வெட்டுண்டுப் போகப் போகிறோம் என உணர்ந்த பிறகு மழை, பனி, வெய்யிலை அனுபவிப்பது எவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது! வாழ்வதுதானே இனிமை! என்னை வெட்டி ஒரு மேஜையாக்கிவிட்டால், இந்த சுகங்களை நான் இழந்துவிடுவேனே. நான் வாழ ஆசைப்படுகிறேன். என்னை வாழ அனுமதிப்பதும் வெட்டிக் கொண்டுபோவதும் உன் விருப்பம்!

அதைக் கேட்ட தச்சன் சொன்னான்:

வாழ்வதற்கான உரிமை அனைவருக்கும் சமமானதே. உன்னை வெட்டிக் கொண்டுபோக எனக்கு மனமில்லை. உண்மையில் நீ எனக்கொரு பாடம் புகட்டியிருக்கிறாய். உனக்காகக் காத்திருந்த பொழுதுகளில் நானும் மழைக் காலத்தில் மழையை, குளிர்காலத்தில் பனியை, கோடையில் வெய்யிலை, வசந்த காலத்தை முழுமையாக அனுபவித்தேன். வாழ்வின் இனிமையை இப்போதுதான் நான் முழுமையாக அறிந்துகொண்டேன். நாங்கள் எதற்கும் பயப்படாதவர்கள்என்பதைப் போல மரங்கள் வான்நோக்கி நிமிர்ந்து நிற்பதன் அர்த்தம் இன்றுதான் நான் புரிந்துகொண்டேன். இனி, இந்தக் காட்டில் கிடைப்பதை உண்டு, நானும் உன்னைப் போலவே வாழப் போகிறேன்என அவன் கோடரியை வீசி எறிந்துவிட்டு, காட்டிலேயே வாழத் தொடங்கினான் என முடிகிறது அந்தக் கதை.


மரம் என்றில்லை. சிறுபுல் கூட தன்னளவில் முழுமையாகவே வாழ்கிறது. மழையை, வெய்யிலை, பனியை நேரடியாக எதிர்கொள்கிறது. வாழ்தலை முழுமையாக அனுபவிக்கிறது. மனிதர்கள்தான் வாழ்க்கையைத் துண்டு துண்டுகளாக்கி எதையும் அனுபவிக்காமல் சலித்துக்கொண்டே இருக்கிறார்கள். மழை, வெயில், பனி, காற்று எதுவும் பிடிப்பதில்லை அவர்களுக்கு. உண்ணும் உணவைக் கூட சலிப்புடன் சாப்பிடுகிறவர்கள் எத்தனையோ பேர். வாழ்க்கை இன்பம்என்பது பணம் மட்டுமில்லை; விலையில்லாத உலகம் ஒன்று கண்முன்னே விரிந்து கிடக்கிறது. அதன் அருமையை நாம் உணர்வதே இல்லை.

இன்றைய உலகம் சந்திக்கும் பிரதான பிரச்சினை வாழ்வுரிமை மறுக்கப்படுவதே. தேசம் ஓர் இனத்தின் வாழ்வுரிமையை மறுக்கிறது. அதிகாரம் வாழ்வுரிமையைப் பறிக்கிறது. மதமும், சாதியும் வாழ்வுரிமையோடு விளையாடுகின்றன. வாழ்வுரிமையைப் பறிகொடுத்த மனிதர்கள், நீதி கேட்டு குரல் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். உலகின் காதுகளில் அந்தக் குரல் எட்டவேயில்லை.

நிலம், நீர், உணவுஎன தனது ஆதாரங்களை மனிதர்கள் இழந்து வருகிறார்கள். யாவும் சந்தைப் பொருளாகிவிட்டன. தண்ணீர் ஒவ்வொரு மனிதனின் வாழ்வுரிமையாகும். ஆனால், இன்றும் முடிவில்லாமல் நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினைகள் மாநிலங்களுக்கு இடையே நீண்டுவருகின்றன. அதற்குக் காரணம் அவை தேசிய அரசியலுக்குத் தேவையாக இருக்கிறதுஎன்பதே.

பாதுகாப்பான குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகிறவர்களில் அதிகமானோர் அடித்தட்டு மக்களும் ஒடுக்கப்பட்ட மக்களுமே ஆவர். இந்தியாவைப் பொறுத்தவரை, தண்ணீர் பிரச்சினை சாதிப் பிரச்சினையுடன் தொடர்புடையது.

தண்ணீர் பிரச்சினையால் அதிகம் பாதிக்கப்படுகிறவர்கள் பெண்களே. தண்ணீரைக் கண்டடைவது, கொண்டு வந்து சேர்ப்பது, பெண்களின் வேலையாக மட்டுமே கருதப்படுகிறது.


[The Source (FrenchLa Source des femmes) is a 2011 French drama-comedy film directed by Radu Mihăileanu.]

தி சோர்ஸ்என்றொரு பிரெஞ்சு திரைப்படத்தை சமீபத்தில் பார்த்தேன். அதில், ஆப்பிரிக்காவில் ஒரு கர்ப்பிணிப் பெண். அவர் நெடுந்தூரம் சென்று தண்ணீர் எடுத்துக் கொண்டுவரும்போது அடிபட்டுவிடுகிறாள். இதனால், உள்ளுர் பெண்கள் கவலையடைகிறார்கள். ஆண்கள் எவரும் தண்ணீர் கொண்டுவருவதற்கு ஒத்துழைப்பு தருவதில்லை என்று உணர்ந்த பெண்கள், ‘இனி ஆண்களுடன் படுக்கையைப் பகிர்ந்துகொள்ள மாட்டோம்என்றொரு போராட்டத்தைத் தொடங்குகிறார்கள். இது ஆண்களின் தன்மானப் பிரச்சினையாக உருமாறுகிறது. முடிவில் பெண்கள் எப்படி வெற்றி பெறுகிறார்கள் என்பதை படம் அற்புதமாக சித்தரிக்கிறது.

இந்திய அரசு விரைவில் நாடு முழுவதும் விவசாயம், குடிநீர் உள்ளிட்ட அத்தனை தண்ணீர் விநியோகத்தையும் தனியாரிடம் வழங்கலாம் என திட்டமிட்டு வருகிறது. இது மோசமான செயல் திட்டமாகும்.

தண்ணீர் பிரச்சினையைத் தீர்க்க புத்தனே முயன்றிருக்கிறான். சாக்கியர்களுக்கும் கோலியர்களுக்கும் இடையில் நதிநீர் பங்கீடு குறித்து எழுந்த பிரச்சினையைப் புத்தன் தீர்த்து வைத்தான்என்கிறது வரலாறு. ஆனால், இன்று நீதிமன்றம் தலையிட்டும்கூட காவிரி நதிநீர் பிரச்சினையைத் தீர்க்க முடியவில்லை.

உணவு, உடை, நீர், கல்வி, வேலை, மொழி என அத்தனை உரிமைகளையும் பறிகொடுத்துவிட்டு வாழ்ந்து என்ன செய்யப் போகிறோம்? சவம் மட்டும்தான் எதையும் ஏற்றுக்கொள்ளும். மவுனமாகக் கிடக்கும்.

வாழ்வுரிமை மறுக்கப்படுவதற்கு எதிராக உலகம் முழுவதும் சமூகப் போராளிகள் தொடர்ந்து குரல் கொடுத்தபடியே இருக்கிறார்கள். தொடர் போராட்டங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. நமக்கென்ன ஆகப் போகிறது?’ என ஒதுங்கிப் போய்விடாமல் பறிக்கப்படும் உரிமைகள் குறித்து எதிர்ப்பை வெளிப்படுத்துவதே வாழ்தலின் அர்த்தம்!

- எஸ்.ராமகிருஷ்ணன் (தி இந்து, 06.06.2017)


*** *** ***