எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday, 6 June 2017

படித்ததில் பிடித்தவை (“வாழ்தலின் இனிமை!” - எஸ்.ராமகிருஷ்ணன் கட்டுரை)


வாழ்தலின் இனிமை!
டேனிஷ் பழங்கதை ஒன்று வாழ்வதற்கான உரிமை அனைவருக்கும் சமமானது என்பதைப் பற்றிப் பேசுகிறது. முன்னொரு காலத்தில் ஒரு தச்சன் இருந்தான். அவன் காட்டில் தான் வெட்டுவதற்கு விரும்புகிற மரத்திடம் சென்று உன்னை வெட்டுவதற்கு என்னை அனுமதிப்பாயா?” எனக் கேட்கக்கூடியவன். மரம் சம்மதித்தால் மட்டுமே அதை வெட்டுவான். தான் அந்த மரத்தை என்ன பொருளாக செய்ய விரும்புகிறான் என்பதையும் அந்த மரத்திடம் தெரிவிப்பான். மரம் சம்மதம் தந்த பிறகே அந்த மரத்தை வெட்டுவான். அப்படி ஒரு முறை ஒரு கருங்காலி மரத்திடம் சென்று நீ மூப்படைந்து விட்டாய்; உன்னை வெட்டி மேஜை செய்யலாம் என்றிருக்கிறேன்”  என்றான். அதைக் கேட்ட மரம் சொன்னது:

நானே இலைகளை உதிர்த்துவிட்டு நிற்கிறேன். மழைக் காலம்வேறு தொடங்கப் போகிறது. மழையின் குளுமையை உள்வாங்கி, புத்துயிர்ப்புக் கொள்ள ஆசைப்படுகிறேன். மழைக் காலம் முடிந்தவுடன், வா!என்றது.

தச்சன் மறுவார்த்தைப் பேசவில்லை. மழைக் காலம் தொடங்கி முடியும் வரை, காத்திருந்தான். மழைக்குப் பிறகு அந்தக் காட்டின் தோற்றமே உருமாறியிருந்தது. தான் வெட்டுவதற்கு விரும்பிய மரத்திடம் போய், “உன்னை நான் வெட்டிக்கொள்ளலாமா?” எனக் கேட்டான்.

அவசரப்படுகிறாயே, குளிர்காலப் பனி என்னைத் தழுவிக்கொள்வதை அனுபவிக்க வேண்டாமா? நான் வாழ ஆசைப்படுகிறேன். குளிர்காலம் முடியும் வரை காத்திரு…” என்றது மரம்.

தச்சன் இன்னும் மூன்று மாதங்கள்தானே எனக் காத்திருந்தான். அந்த ஆண்டு குளிர் அதிகமாகவே இருந்தது. காட்டில் பனிமூட்டம் அடர்ந்திருந்தது. குளிர்காலம் முடிந்து கோடரியோடு காட்டுக்குப் போனான்.

மரம் சொன்னது: அதிக குளிரில் வாடிப் போயிருக்கிறேன். கோடை சூரியனில் என்னை சூடுபடுத்திக்கொள்கிறேன். கோடையைக் காணாத வாழ்க்கை என்ன வாழ்க்கை!என்றான். தச்சனுக்கு சலிப்பாக இருந்தது. ஆனாலும், தன் அறத்தை மீறி நடந்துகொள்ள முடியாதே என அவன் வெறுங்கையோடு வீடு திரும்பினான்.

கோடையின் முரட்டு சூரியன் காட்டின் மீது தன் எரிகொம்புகளை ஊன்றி கடந்துபோனது. வெயிலின் உக்கிரம் காடெங்கும் பரவியது. மரம் வெயிலில் உலர்ந்து போனது. தச்சன் மீண்டும் காட்டுக்குத் திரும்பிப் போனான்.

இப்போது மரம் சொன்னது:

வெட்டுண்டுப் போகப் போகிறோம் என உணர்ந்த பிறகு மழை, பனி, வெய்யிலை அனுபவிப்பது எவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது! வாழ்வதுதானே இனிமை! என்னை வெட்டி ஒரு மேஜையாக்கிவிட்டால், இந்த சுகங்களை நான் இழந்துவிடுவேனே. நான் வாழ ஆசைப்படுகிறேன். என்னை வாழ அனுமதிப்பதும் வெட்டிக் கொண்டுபோவதும் உன் விருப்பம்!

அதைக் கேட்ட தச்சன் சொன்னான்:

வாழ்வதற்கான உரிமை அனைவருக்கும் சமமானதே. உன்னை வெட்டிக் கொண்டுபோக எனக்கு மனமில்லை. உண்மையில் நீ எனக்கொரு பாடம் புகட்டியிருக்கிறாய். உனக்காகக் காத்திருந்த பொழுதுகளில் நானும் மழைக் காலத்தில் மழையை, குளிர்காலத்தில் பனியை, கோடையில் வெய்யிலை, வசந்த காலத்தை முழுமையாக அனுபவித்தேன். வாழ்வின் இனிமையை இப்போதுதான் நான் முழுமையாக அறிந்துகொண்டேன். நாங்கள் எதற்கும் பயப்படாதவர்கள்என்பதைப் போல மரங்கள் வான்நோக்கி நிமிர்ந்து நிற்பதன் அர்த்தம் இன்றுதான் நான் புரிந்துகொண்டேன். இனி, இந்தக் காட்டில் கிடைப்பதை உண்டு, நானும் உன்னைப் போலவே வாழப் போகிறேன்என அவன் கோடரியை வீசி எறிந்துவிட்டு, காட்டிலேயே வாழத் தொடங்கினான் என முடிகிறது அந்தக் கதை.


மரம் என்றில்லை. சிறுபுல் கூட தன்னளவில் முழுமையாகவே வாழ்கிறது. மழையை, வெய்யிலை, பனியை நேரடியாக எதிர்கொள்கிறது. வாழ்தலை முழுமையாக அனுபவிக்கிறது. மனிதர்கள்தான் வாழ்க்கையைத் துண்டு துண்டுகளாக்கி எதையும் அனுபவிக்காமல் சலித்துக்கொண்டே இருக்கிறார்கள். மழை, வெயில், பனி, காற்று எதுவும் பிடிப்பதில்லை அவர்களுக்கு. உண்ணும் உணவைக் கூட சலிப்புடன் சாப்பிடுகிறவர்கள் எத்தனையோ பேர். வாழ்க்கை இன்பம்என்பது பணம் மட்டுமில்லை; விலையில்லாத உலகம் ஒன்று கண்முன்னே விரிந்து கிடக்கிறது. அதன் அருமையை நாம் உணர்வதே இல்லை.

இன்றைய உலகம் சந்திக்கும் பிரதான பிரச்சினை வாழ்வுரிமை மறுக்கப்படுவதே. தேசம் ஓர் இனத்தின் வாழ்வுரிமையை மறுக்கிறது. அதிகாரம் வாழ்வுரிமையைப் பறிக்கிறது. மதமும், சாதியும் வாழ்வுரிமையோடு விளையாடுகின்றன. வாழ்வுரிமையைப் பறிகொடுத்த மனிதர்கள், நீதி கேட்டு குரல் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். உலகின் காதுகளில் அந்தக் குரல் எட்டவேயில்லை.

நிலம், நீர், உணவுஎன தனது ஆதாரங்களை மனிதர்கள் இழந்து வருகிறார்கள். யாவும் சந்தைப் பொருளாகிவிட்டன. தண்ணீர் ஒவ்வொரு மனிதனின் வாழ்வுரிமையாகும். ஆனால், இன்றும் முடிவில்லாமல் நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினைகள் மாநிலங்களுக்கு இடையே நீண்டுவருகின்றன. அதற்குக் காரணம் அவை தேசிய அரசியலுக்குத் தேவையாக இருக்கிறதுஎன்பதே.

பாதுகாப்பான குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகிறவர்களில் அதிகமானோர் அடித்தட்டு மக்களும் ஒடுக்கப்பட்ட மக்களுமே ஆவர். இந்தியாவைப் பொறுத்தவரை, தண்ணீர் பிரச்சினை சாதிப் பிரச்சினையுடன் தொடர்புடையது.

தண்ணீர் பிரச்சினையால் அதிகம் பாதிக்கப்படுகிறவர்கள் பெண்களே. தண்ணீரைக் கண்டடைவது, கொண்டு வந்து சேர்ப்பது, பெண்களின் வேலையாக மட்டுமே கருதப்படுகிறது.


[The Source (FrenchLa Source des femmes) is a 2011 French drama-comedy film directed by Radu Mihăileanu.]

தி சோர்ஸ்என்றொரு பிரெஞ்சு திரைப்படத்தை சமீபத்தில் பார்த்தேன். அதில், ஆப்பிரிக்காவில் ஒரு கர்ப்பிணிப் பெண். அவர் நெடுந்தூரம் சென்று தண்ணீர் எடுத்துக் கொண்டுவரும்போது அடிபட்டுவிடுகிறாள். இதனால், உள்ளுர் பெண்கள் கவலையடைகிறார்கள். ஆண்கள் எவரும் தண்ணீர் கொண்டுவருவதற்கு ஒத்துழைப்பு தருவதில்லை என்று உணர்ந்த பெண்கள், ‘இனி ஆண்களுடன் படுக்கையைப் பகிர்ந்துகொள்ள மாட்டோம்என்றொரு போராட்டத்தைத் தொடங்குகிறார்கள். இது ஆண்களின் தன்மானப் பிரச்சினையாக உருமாறுகிறது. முடிவில் பெண்கள் எப்படி வெற்றி பெறுகிறார்கள் என்பதை படம் அற்புதமாக சித்தரிக்கிறது.

இந்திய அரசு விரைவில் நாடு முழுவதும் விவசாயம், குடிநீர் உள்ளிட்ட அத்தனை தண்ணீர் விநியோகத்தையும் தனியாரிடம் வழங்கலாம் என திட்டமிட்டு வருகிறது. இது மோசமான செயல் திட்டமாகும்.

தண்ணீர் பிரச்சினையைத் தீர்க்க புத்தனே முயன்றிருக்கிறான். சாக்கியர்களுக்கும் கோலியர்களுக்கும் இடையில் நதிநீர் பங்கீடு குறித்து எழுந்த பிரச்சினையைப் புத்தன் தீர்த்து வைத்தான்என்கிறது வரலாறு. ஆனால், இன்று நீதிமன்றம் தலையிட்டும்கூட காவிரி நதிநீர் பிரச்சினையைத் தீர்க்க முடியவில்லை.

உணவு, உடை, நீர், கல்வி, வேலை, மொழி என அத்தனை உரிமைகளையும் பறிகொடுத்துவிட்டு வாழ்ந்து என்ன செய்யப் போகிறோம்? சவம் மட்டும்தான் எதையும் ஏற்றுக்கொள்ளும். மவுனமாகக் கிடக்கும்.

வாழ்வுரிமை மறுக்கப்படுவதற்கு எதிராக உலகம் முழுவதும் சமூகப் போராளிகள் தொடர்ந்து குரல் கொடுத்தபடியே இருக்கிறார்கள். தொடர் போராட்டங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. நமக்கென்ன ஆகப் போகிறது?’ என ஒதுங்கிப் போய்விடாமல் பறிக்கப்படும் உரிமைகள் குறித்து எதிர்ப்பை வெளிப்படுத்துவதே வாழ்தலின் அர்த்தம்!

- எஸ்.ராமகிருஷ்ணன் (தி இந்து, 06.06.2017)


*** *** ***

No comments:

Post a Comment