உலகம் தெரிந்தும் உள்ளம் தெரியாதவர்கள்!
மாலை,
தினம்
போல் மெரீனாவில் நடந்துவிட்டு, சிமென்ட் பெஞ்சில்
உட்கார்ந்துகொண்டு, முகத்தில் கடற்காற்று
விளையாட, பிரபஞ்சத்தின் ஆரம்பத்தையும் இன்கம்டாக்ஸையும் யோசித்துக்
கொண்டிருந்தபோது, பக்கத்தில்
வீற்றிருந்தவர் என்னை அறியாமல் என் செல்போனைக் கவர்ந்துகொண்டு,
'சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார்' என்று சொல்ல ஆகும்
நேரத்தில் காணாமல் போனார்!
இந்த மாதிரி சந்தர்ப்பங்களில்,
அடுத்து
ஆகவேண்டியதைத்தான் யோசிப்பேன். முதலில் செல் கம்பெனிக்குத் தகவல் சொல்லி,
சிம்
கார்டை எந்த விதக் குற்ற நோக்கத்துக்கும் பயன்படாமல் செயலறச் செய்ய வேண்டும்.
அதன்பின், மறு செல் பற்றி யோசிக்க வேண்டும்.
இடையே,
செல்லில்லாத
வாழ்க்கையை யோசித்தேன். முகம் தெரியாத பெண்கள், எனக்கு வங்கிக் கடன்கள்
கொடுப்பதாக வற்புறுத்தமாட்டார்கள். சங்கராச்சாரியார் கைதிலிருந்து global
warming வரை எனக்கு எஸ்.எம்.எஸ். வராது!
ரிங்டோனை 'கல்யாணம்தான்
கட்டிக்கிட்டு'வுக்கு மாற்ற முடியாது. 'பிரகாஷ்?
க்யா
யார்... அபிதக் மால் நை பேஜா?' என்கிற நடு ராத்திரி
தப்பு நம்பர் அதட்டல்கள் நின்றுபோகும். யோசித்துப் பார்த்ததில்,
'செல்லற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்ற தீர்மானத்துக்கு
வந்தேன். அன்வர் அக்காவியின் (Anwar Accawi) 'டெலிபோன்'
என்னும்
கட்டுரை (Best American Essays, 1998) நினைவுக்கு வந்தது.
லெபனானில் மக்தலோனா என்ற அவரது கிராமத்தில் முதன் முதலாக டெலிபோன் வந்தது பற்றிய
அருமையான கட்டுரை அது.
கிராமத்தின் கலாசாரமே,
அடையாளமே
ஒரு டெலிபோன் வருகையால் மாறிப் போகிறது. நகரம் போன் மூலம் வேலைக்கு அழைக்கிறது.
குடும்பங்கள் இடம் பெயர்கின்றன. கிராமம் தன் அடையாளங்கள் சிலவற்றைத் திரும்பப் பெற
முடியாமல் இழக்கிறது. To get something, you have to give
something. எதையாவது பெற, எதையாவது இழக்க
வேண்டும்! செல்போனுக்கு நாம் இழந்தது, நம் அந்தரங்கத்தை! என்
மனைவி, ‘'அப்பவே சொன்னேனே... உங்க ஞாபக மறதிக்கு செல்போன்
உதவாது. கழுத்துல கயிறு கட்டிண்டு தொங்க விட்டுக்குங்கோ இனிமேல்!’'
என்றாள்.
'அந்தத் தாலி வேண்டுமா?' என யோசிக்கிறேன்.
'பக்கப் பாதைகள்'
(Sideways) என்னும் திரைப்படம், இந்த வருடம் தங்க பூகோள
அவார்டு வாங்கியிருக்கிறது. ஆஸ்கருக்கும் சிறந்த படமாகப் பரிந்துரைக்கப்பட்டு
இருக்கிறது. இரண்டு நண்பர்கள். ஒருவன் எழுத்தாளன். மற்றவன் டி.வி. நடிகன்.
பின்னவனுடைய திருமணத்துக்குக் காரில் செல்கிறார்கள். கலிபோர்னியாவின் திராட்சைத்
தோட்டங்களைச் சார்ந்த ஒயின் தயாரிக்கும் சிறுசிறு நகரங்களின் ஊடே பயணம்.
தன் நாவல் பிரசுரமாகுமா என்ற
எழுத்தாளனின் கவலை. ஒயின் தயாரிப்பதைப் பற்றிய அவனது நுட்பமான அறிவு. முதல்
திருமணம் முறிந்து போனவன். நடிகன், அடுத்த வார
திருமணத்துக்கு முன்பு குறைந்தபட்சம் இரண்டு பெண்களையாவது 'கரெக்ட்'
பண்ணிவிட்டு,
நல்ல
பையனாக வேண்டும் என்னும் அவசரத்தில் உள்ளவன்.
இவர்களின் ஒரு வாரப் பயணத்தில்,
அமெரிக்க
மண வாழ்க்கையில் உள்ள நிலையாமையையும், உலகம் தெரிந்தும் உள்ளம்
தெரியாதவர்கள் வாழ்க்கையைப் பாழடித்துக் கொண்டு சந்தோஷம் தேடும் வினோதத்தையும் ‘அலெக்ஸாண்டர் பெய்ன்’
திறமையாகச்
சொல்லியிருக்கிறார்.
'ஏவியேட்டர்'
உடன்
போட்டி போட முடியாதெனினும், ஒரு விருதாவது
கிடைக்கும்!
யாரும் நம் தின வாழ்க்கையில்
உள்ள 'டாப் 10' பொய்களைச் சேகரித்ததாகத்
தெரியவில்லை. இதோ அந்தப் பட்டியல்! எந்தச் சூழ்நிலையில்,
இந்தப்
பொய்கள் சொல்லப்படுகின்றன என்பதை விகடன் வாசகர்கள் சுலபமாக யூகிக்கலாம்.
1. அனுப்பிச்சாச்சே...
இன்னும் வந்து சேரலையா?
2. இந்தப் புடவைல நீ
பருமனாவே தெரியலை!
3. இப்படித் தலை வாரினா,
உங்களுக்கு
நல்லா இருக்கு!
4. நாப்பது வயசுனு சொல்லவே
முடியாது!
5. ஒரு தடவை கேட்டுட்டா,
அப்படியே
பாடிடுவா!
6. ஒரே ஒரு மார்க்ல போச்சு!
7. இந்த விருதை நான்
எதிர்பார்க்கவே இல்லை.
8. உங்க நம்பர் என்கேஜ்டாவே
இருந்தது!
9. நான் பொய் சொல்லவே
மாட்டேன்.
10. ஏழ்மை நிச்சயம்
ஒழிஞ்சுடும்!
இந்த 'டாப் 10'
பொய்களில்
விட்டுப்போன கீழ்வரும் வார்த்தைகளைச் சேர்த்தால், 'டாப் 10'
நிஜங்கள்...
1. எத்தனைனு ஞாபகமில்லை.
2. விலையையே
பார்த்துக்கிட்டு இருக்கேன்.
3. வழுக்கையை
மறைக்கிறதால...
4. நாப்பத்தஞ்சு சொல்லலாம்.
5. அபஸ்வரமா!
6. நாலாவது தடவையும்.
7. எத்தனை பேரைப் பார்த்து,
எத்தனை
லஞ்சம் கொடுத்தேன்!
8. உங்க நம்பர் என்ன?
9. மௌன விரதத்தின்போது!
10. எப்பனு சொல்ல மாட்டேன்.
[‘கற்றதும்
பெற்றதும்’ – சுஜாதா]
நன்றி: ஆனந்த விகடன்.
*** *** *** ***
நன்று
ReplyDelete