டிஸ்கவரி பற்றி
சுஜாதா
பதினான்கு நாட்கள் விண்வெளியில்
சுற்றிவிட்டு சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்று அங்கேயே நீண்டநாள் வாழும்
இருவரை விசாரித்துவிட்டு, அத்யாவசியப் பொருள்களைக்
கொடுத்துவிட்டு, கொஞ்சம் ரிப்பேர் பார்த்துவிட்டு செவ்வாய்க்கிழமை அமெரிக்காவின்
விண்ஓடம் “ஷட்டில் டிஸ்கவரி” ஃப்ளோரிடாவில் வானிலை
சரியில்லாததால் கலிபோர்னியாவில் அதிகாலை வந்து இறங்கியபோது,
அரியானாவிலிருந்து
அமெரிக்கா வரை லட்சக்கணக்கானவர்கள் பெருமூச்சுவிட்டார்கள். டிஸ்கவரி விண்ணில்
சீறியபோது… ஹூஸ்டனில் உள்ள விண்வெளி அதிகாரிகள் சாதாரணமாக விண்கப்பல் வந்து
இறங்கியவுடன் ஒருவரை ஒருவர் கட்டியணைத்துக் கொள்வார்கள். இந்தமுறை சுருக்கமாக,
“டிஸ்கவரி வந்து சேர்ந்துவிட்டது” என்றார்கள். காரணம்,
நினைவுத்
திரைகள் பின்னோக்கிச் செல்லுகின்றன…
டிஸ்கவரி டீம்…
2003-ம் ஆண்டு பிப்ரவரியில் “கொலம்பியா”
விண்ஓடம்
திரும்பி வரும்போது பூமியின் காற்று மண்டலத்தில் அசுரகதியில் நுழைந்ததும் வெடித்து
சிதறி, இந்தியாவின் கல்பனா சாவ்லா உட்பட ஏழு விண்வெளி
வீரர்கள் இறந்து போனார்கள். இதனால் “நாசா”வின் நிகழ்ச்சிநிரல்
தாமதமாகி பல்வேறு எச்சரிக்கைகள் எடுத்துக்கொள்ள வேண்டியிருந்தது. கொலம்பியா
விண்ஓடத்தை வீழ்த்தியது… முக்கால் கேஜி நுரைத்
தண்டு அதன் எரிபொருள் டாங்கிலிருந்து பிய்ந்து, இறக்கையில் ஒரு சின்ன
ஓட்டை போட்டதே. இது மறுபடி நிகழாமல் இருக்க… இரண்டரை ஆண்டுகளில் நூறு
கோடி டாலர் செலவழித்து சரிபார்த்து அனுப்பியும் கொலம்பியா விண்கலம் போலவே
டிஸ்கவரியிலும் கொஞ்சம் நுரைமெத்தை பிய்த்துக்கொண்டு கலங்க வைத்தது. கொலம்பியா போல
இதுவும் வெடித்துவிடும் அரிய சாத்தியம் இருந்ததால் எல்லார் வயிற்றிலும் நெருப்பு.
கொலம்பியா டீம்…
இந்த விண்ஓடங்களை எதற்கு அனுப்புகிறார்கள்?
விண்வெளியில்
மற்ற கிரகங்களை நோக்கி பயணம் செய்யக்கூடிய விண்கலங்களையும் சேட்டிலைட்களையும்
கொண்டுசென்று விடுவிக்கிறார்கள்.
பூமிக்கு மேலே 369 கிலோமீட்டர் உயரத்தில் 92 நிமிடத்துக்கு ஒருமுறை
சுற்றிக் கொண்டிருக்கும் சர்வதேச விண்நிலையத்துக்கு விஜயம் செய்து,
அங்கு
அளவுக்கு தேவையான அத்தியாவசியப் பொருள்களைச் சேர்ப்பித்து,
தேவையற்ற
குப்பையை சேகரித்துக்கொண்டு திரும்புகிறார்கள்.
விண்வெளியில் நடப்பது,
ரிப்பேர்
செய்வது, விண் விவசாயம், நெடுநாள் விண்வெளிப்
பயணத்தின் பாதிப்புகள் போன்ற விஷயங்களில் ஆராய்ச்சி செய்ய பரிசோதனைகள்
செய்கிறார்கள். விண்ணில் மிதந்து… தரையில் தவழ்ந்து…
அப்பாடா…
கொலம்பியா வெடித்தபோது “நாசா”
நிறுவனம்
கலங்கித்தான் போய்விட்டது. கோடிக்கணக்கான டாலர்கள் செலவழித்து உருவாக்கிய
டிஸ்கவரியிலும் குறைகள் தென்பட்டதால், அடுத்து அவர்கள்
அனுப்பவிருக்கும் “அட்லாண்டிஸ்”
ஷட்டில்
புரோக்ராம் தாமதமாகிறது. இந்தமுறை “தப்பித்தோம் பிழைத்தோம்”தான். சிதைந்த பாகம்…
இப்படி
அனுப்பப்படும் விண்ஓடங்கள் விலைமதிப்பில்லாதவை என்ற போதும்….
செலவுக்
கணக்கு என்று பார்த்தால் 200 கோடி டாலர்களைத்
தொடுகிறது. அமெரிக்கா ஏற்கெனவே அனுப்பியிருக்கும் “எண்டெவர்”
விண்ஓடத்தைக்
கட்டுவதற்கு 210 கோடி டாலர்கள் செலவாயின.
இத்தனை செலவழிக்க வேண்டுமா என்று
அமெரிக்காவை கேட்டால், அவர்களுக்கு கோபம்
வரும். இதனால் மனித சாதிக்கு எத்தனையோ நன்மைகள் எதிர்காலத்தில் ஏற்படும் என்று
சொல்லி, நிகழ்காலத்தில் ஆப்பிரிக்காவில் சோனிக் குழந்தைகள் செத்துப்போவதை
நிராகரிக்கிறார்கள்.
ரஷ்யா,
அளவாகத்தான்
செலவிடுகிறது. அவர்களின் ”மிர்“
என்னும்
விண்நிலையமும் ”சோயுஸ்“ என்னும் விண்கப்பலும்
அத்தனை செலவில்லை.
எதிர்காலத்தில் இவ்வகையிலான
விண்நிலையங்களை பெரிதாக்கி சூரியக் குடும்பத்தின் மற்ற கிரகங்களை நோக்கி நீள்பயணம்
செய்யவும், ஸ்டீபன் ஹாக்கிங் சொன்னது போன்ற விண் நகரங்கள் அமைக்கவும் இந்த
டிஸ்கவரியின் பயணம் ஒருவிதத்தில் உதவியிருக்கிறது. இடையிடையே தடங்கலுக்கு
வருந்தினாலும், ”நாசா“ மெள்ள மெள்ள தவறுகளைக்
குறைத்து வருகிறது.
என்றாவது ஒருநாள் உங்கள் கொள்ளுப்பேத்தி,
”தாத்தா! செவ்வாய்கிரகத்திலிருந்து உங்களுக்கு என்ன வாங்கிட்டு
வரணும்?“ என்று கேட்டால், ”ஒண்ணும் வேண்டாம்மா…
பத்திரமா
திரும்பி வாம்மா. அங்கேயே யாரையாவது கல்யாணம் கட்டிக்கிட்டு செட்டில் ஆகாம இருந்தா
சந்தோஷம்" என்பீர்கள்!
[நன்றி: ஜூனியர் விகடன்]
No comments:
Post a Comment