எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday, 7 November 2021

படித்ததில் பிடித்தவை (“திரை” – தேவதேவன் கவிதை)

 


*திரை* 

 

அவன் தன் அமெரிக்க நண்பர்களுக்கு

ஆர்வத்துடன் பிதற்றும் கவிதை இது :

 

எல்லாம் எத்துனை சுலபமாகவும்

வேடிக்கையாவும் விளையாட்டாகவும்

இருக்கின்றன..!

 

ஆறுக்கு ஆறு அடியுள்ள இரட்டைக் கட்டிலில்

குறுக்கே ஒரு திரை.

பத்தடி தூரத்தில்

எதிர் எதிரே உரையாடிக் கொண்டிருக்கும்

இரண்டு சன்னல்களையும் பற்றி

இணைத்தபடி நீண்ட கொடிக்கம்பியில்

நன்றாய்த் தொங்கும் அது.

 

இந்தப் பக்கம்,

அவன் வாசிப்புக்கும், கவிதையாக்கலுக்குமான

மின்விளக்கின் பேரொளி.

 

அந்த பக்கம்,

அவன் துணைவியார் நல்லுறக்கத்துக்குகந்த

நயமான இருள்.

 

உறக்கமற்ற இரவில் அவன் துணைவியார்

உடல் அலுங்காமல் திரைவிலக்கி

எட்டிப் பார்த்துக் கொள்கிறாள்..!

 

*தேவதேவன்*




3 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *தேவதேவன்* என்ற
    புனைப்பெயரால் அறியப்பட்ட
    பிச்சுமணி கைவல்யம் ஒரு
    நவீனத் தமிழ் கவிஞர் ஆவார்.
    பிச்சுமணி கைவல்யம் என்றப்
    பெயரில் கதைகளையும் எழுதி
    வருகின்றார்.
    இவர் எழுதிய "தேவதேவன்
    கவிதைகள்" எனும் நூல்
    தமிழ்நாடு அரசின் தமிழ்
    வளர்ச்சித் துறையின் 2005 ஆம்
    ஆண்டுக்கான சிறந்த நூல்களில்
    புதுக்கவிதை எனும்
    வகைப்பாட்டில் பரிசு
    பெற்றிருக்கிறது.

    கைவல்யம் விருதுநகர்
    மாவட்டத்தில் உள்ள
    இராஜாகோயில் என்ற ஊரில்
    மே 5, 1948 ஆம் ஆண்டு
    பிச்சுமணி தம்பதியினருக்குப்
    பிறந்தார்.
    ஈ. வெ. ராமசாமி இவருக்குக்
    கைவல்யம் என்றப் பெயரை
    இட்டார்.
    தந்தையுடன் 19 அகவையில்
    தூத்துக்குடிக்கு பிழைப்புத் தேடி
    வந்த கைவல்யம் இன்றளவும்
    அங்கேயே தங்கியிருக்கிறார்.
    பள்ளிப்படிப்பை முடித்தபின்
    கைவல்யம் ஒரு சிறு அச்சகம்
    ஒன்றை நடத்தி வந்தார்.
    பின்னர் ஆசிரியர் படிப்பு
    முடித்து தூத்துக்குடியிலேயே
    ஆசிரியரானார்.
    நகராட்சிப் பள்ளியில்
    இடைநிலை ஆசிரியராகப்
    பணியாற்றினார்.
    2002 ஆம் ஆண்டு ஆசிரியர்
    பணியிலிருந்து ஓய்வுப் பெற்றார்.
    இவரது மனைவி சாந்தி,
    மகள் அமர்த்தா பிரீதம்,
    மகன் அரவிந்தன்.

    இளம்வயதில் மரபுக்கவிதைகள்
    எழுதிவந்த கைவல்யம்
    தோரோ, எமர்சன் ஆகியோரின்
    படைப்புகளால் கவரப்பட்டு
    நவீனக் கவிதைகளைப் புனையத்
    தொடங்கினார்.
    குறுகிய காலம் கேரளத்தில்
    வாழ்ந்தபோது அங்கிருந்த
    இயற்கைக் காட்சிகளினால்
    ஆழ்மான மனநகர்வுக்கு உள்ளாகி
    நிறைய கவிதைகள் எழுதினார்.
    இக் காலகட்டத்தில் அவர்
    சுந்தர ராமசாமி தன் வீட்டு
    மாடியில் நடத்திவந்த காகங்கள்
    என்ற இலக்கிய உரையாடல்
    அமைப்பில் நெடுந்தொலைவுப்
    பயணம் செய்து வந்து கலந்துக்
    கொள்வதுண்டு.

    கைவல்யத்தின்
    முதல்கவிதைத் தொகுப்பு
    "குளித்துக் கரையேறாத
    கோபியர்கள்" 1982 ஆம் ஆண்டு
    வெளிவந்தது.
    இரண்டாவது தொகுப்பு
    "மின்னற்பொழுதே தூரம்"
    பிரமிள் முன்னுரையுடன்
    வெளிவந்து கவிதை
    வாசகர்களால் கவனிக்கப்பட்டது.
    தொடர்ந்து 'மாற்றப்படாத வீடு'
    பிரமிள் முன்னுரையுடன்
    வெளிவந்தது.
    பெரும்பாலான கவிதைகளை
    தன் நண்பர்களான
    முத்துப்பாண்டி, லெனா குமார்,
    காஞ்சனை சீனிவாசன்
    ஆகியோரின் உதவியுடன் அவரே
    வெளியிட்டு வந்தார்.
    பின்னர் அவரது கவிதைகளைத்
    தமிழினி பதிப்பகம் வெளியிட
    தொடங்கியது.
    2005 ஆம் ஆண்டு அவரது
    கவிதைகளுக்கான
    முழுத்தொகுப்பு "தேவதேவன்
    கவிதைகள்" என்ற பெயருடன்
    தமிழினி பதிப்பகத்தால்
    வெளியிடப்பட்டது.
    "தேவதேவன் கவிதைபற்றி"
    என்ற உரையாடல் நூலையும்
    "அலிபாபவும் மோர்ஜியானாவும்"
    என்ற நாடக நூலையும் எழுதி
    வெளியிட்டிருக்கிறார்.

    1970-80 களில் தூத்துக்குடியில்
    கலைப்படங்களுக்கான
    திரைப்படச் சங்கம் ஒன்றையும்
    நடத்திவந்தார்.

    ReplyDelete
  2. *தேவதேவன் கவிதை*

    நாம் எப்போதும் காலம்,
    நேரம், இடம் மூன்றையும்
    ஒரு சட்டகத்துள்
    பொருத்திப் பார்க்க
    முயல்கிறோம்.
    நாம் வாழும் இடத்தை ஒரு
    ஒழுங்குக்குள் அமைக்க
    முயல்கிறோம்.
    ஆனால் இவை மூன்றும்
    உணர்வு நிலைகளில்
    அச்சட்டகத்துக்குள்
    அமையாத ஒன்று என்பதை
    கவனிக்க தவறிவிடுகிறோம்.

    ஜெயமோகனின் நீலம்
    நாவலில் ஒரு படிமம் வரும்,
    “வேனல் எழுந்த வெம்மை
    பரவி கருகி நின்றது காடு.
    கிளை பட்டு நின்றது
    பெருமரம். அதன்மேல்
    மொட்டு மொட்டு என்று
    கொத்திக்கொண்டிருந்தது
    பூந்தலை மரம்கொத்தி.
    கொத்திக் கொத்தி அது
    அமைப்பது நானிருக்கும்
    காலம்.
    நத்தை ஊரும் வழியாக
    நீண்டுசெல்வதோ
    நீ அமைந்த காலம். ஊர்ந்து
    ஊர்ந்து நத்தை உணரும்
    ஒருகாலம்.
    அசைந்து அசைந்து நத்தைக்
    கொம்புணரும் காலம்.
    நத்தை உடலுணரும் காலம்.
    நத்தை அகமுணரும் காலம்.
    காலில்லா உடலுக்குள்
    எழுந்த பெரும்புரவி”.

    நத்தையின் அகத்துள்
    அமைந்த பெரும்புரவி
    என்கின்ற படிமத்திற்கு
    இணையானது மேலுள்ள
    தேவதேவனின் கவிதை.

    ஒரு ஆறுக்கு ஆறு அறையில்
    எப்படி இருளும், ஒலியும்
    ஒரு சேர முயங்க முடியும்.
    ஒருவன் எப்படி தன் வீட்டு
    அறையின் மறுமுனையில்
    அமெரிக்காவை பொருத்தி
    காண முடியும் என்றால்
    அது கவிஞனின் வாழ்வில்
    மட்டுமே சாத்தியம்.
    கண்ணிமைக்கும் நொடியில்
    அங்கிருந்து இங்கு ஒரு பார்வை
    தீண்டிச் செல்கிறது.
    அந்த பார்வையின் தீண்டல்
    நம் சட்டகங்களை நமக்கு
    உடைத்துக் காட்டுகிறது.

    #ஜி.எஸ்.எஸ்.வி.நவின்#
    https://kavithaigal-tamil.blogspot.com/2021/10/blog-post_816.html

    ReplyDelete