எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday, 16 June 2020

படித்ததில் பிடித்தவை (“உங்களிடம் டியூசன் படிக்காத உங்கள் மாணவன்” – மகுடேசுவரன் கவிதை)


*உங்களிடம் டியூசன் படிக்காத உங்கள் மாணவன்*

நான்
உங்களிடம் பள்ளியில் படிக்கிறேன்.
ஆனால் நான்
என் சகாக்கள் பலரையும்போல்
உங்களிடம் டியூசன் படிக்கவில்லை

ஐயா
என்னிடம் மாற்றுச் சீருடை இல்லை.
இருக்கும் இந்த ஒரே கால்சட்டையும்
விதைப்பை அடியில் கிழிபட்டிருக்கிறது.
அதனால்தான் எப்பொழுதும்
கால்கட்டப்பட்டவன் போலவே அமர்கிறேன்.

காதறுந்த துணிப்பையில்
என் புத்தகங்களைத் திணித்திருக்கிறேன்.
முத்து முத்தான கையெழுத்தால்
நிறைந்து வழியும் என் ஏடுகள்
உங்களைப் பார்த்துப் பரிகாசித்ததை
நான் அறியவில்லை ஐயா..!

என் உணவுப் போசியில்
கொஞ்சம் பழைய சோறு இருக்கிறது.
எப்பொழுதும் நான்
நான்கு பேர் மத்தியில் உண்ணாமல்
தனித்து மூலையில் அமர்ந்து
வாரி வாரிச் சாப்பிடுவதை
நீங்கள் பார்த்திருக்கலாம்.

ஒரேயொரு பழைய பேனா வைத்திருக்கிறேன்.
கொஞ்சம் மை கசியும் என்றாலும்
மாவுபோல் எழுதும்
அது காணாமல் போன அன்று
நான் கதறிக் கதறி அழுதேன்.
புல்மேயும் ஆடுபோல்
குனிந்த தலை நிமிராமல் தேடி
மைதானத்தில் கண்டெடுத்தபோதுதான்
எனக்கு உயிரே வந்தது.

காலில் செருப்பில்லை.
என்னிடமிருப்பவை
சகிக்கமுடியாத ஏழை அறிவாளியின்
தீட்சண்யம் மிகுந்த கண்கள் மட்டுமே.
மறதியறியாத
கத்திக் கூர்மையை ஒத்த
சாம்பல் மூளை மட்டுமே.

ஐயா
உங்கள் புறக்கணிப்பின் நெருப்புக்கு மத்தியில்
ஒரு பாவியைப்போல் வளைய வருகிறேன்.
காரணமேயில்லாமல்
என்னைக் கடியாதீர்.
ஒரு மாணவனை எப்படி நொறுக்குவது என்று
நீங்கள் அறிந்திருப்பதுபோல்
ஓர் ஆசானிடம் எப்படி அணுக்கமாவது என
நான் அறியவில்லை ஐயா..!

பாடம் எடுக்கும்போது
என் கண்களையும் ஒருமுறை பாருங்கள் ஐயா..!

                    *மகுடேசுவரன்*

No comments:

Post a Comment