எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday, 30 June 2020

படித்ததில் பிடித்தவை (“நம்பிக்கை” – யாழிசை மணிவண்ணன் கவிதை)



*நம்பிக்கை*

தொட்டில்கள் கட்டப்பட்ட
கோவில் மரத்தில்
படுத்துறங்குகிறது
நம்பிக்கை..!

*யாழிசை மணிவண்ணன்*

Monday, 29 June 2020

படித்ததில் பிடித்தவை (“நிதானம்” – மணிகண்டபிரபு கவிதை)



*நிதானம்*

எவ்வளவு பரபரப்பான
சாலையிலும் மிதிவண்டி
ஓட்டும் ஒருவன்
உலகத்தை வைத்திருக்கிறான்
நிதானமாக..!

*மணிகண்டபிரபு*

Sunday, 28 June 2020

படித்ததில் பிடித்தவை (“விடை” – யாழிசை மணிவண்ணன் கவிதை)



*விடை*

தன் நெடு வாழ்வினைத்
தோசைக்கல்லில்
எழுதிப்பார்க்கிறாள்
அம்மா
பூஜ்ஜியமாக கிடைக்கிறது
விடை..!

*யாழிசை மணிவண்ணன்*

Saturday, 27 June 2020

படித்ததில் பிடித்தவை (“கோபம்” – இளந்தென்றல் கவிதை)

(ஓவியம்: இளையராஜா)
*கோபம்*

விறகு அடுப்பில்
வீடு முழுக்க புகை மண்டுகிறது...

அனைவர் கோபமும்
அடுப்புக்கு மிக அருகில் இருக்கும்
அம்மாவை நோக்கியே போகிறது..!

*இளந்தென்றல்*

Friday, 26 June 2020

படித்ததில் பிடித்தவை (“அப்பாவின் குரல்” – நா.முத்துக்குமார் கவிதை)



*அப்பாவின் குரல்*

அப்பாவின் கைபேசி எண்ணை
அவர் இறந்து
பத்து வருடங்கள் கடந்தும்
என் கைபேசியில்
சேமித்து வைத்திருக்கிறேன்.

அப்பாவின் குரலை
அது அநேக முறை
தொலைதூரத்தில் இருந்து
அழைத்து வந்திருக்கிறது.

அந்தக் குரல்
என்னைக் கண்டித்திருக்கிறது.
தண்டித்திருக்கிறது.
அவ்வப்போது
மன்னித்தும் இருக்கிறது.

கண்ணாடி பிம்பம்போல்
கைதொடும் தூரத்தில்
இப்போதும் இருக்கிறது
அப்பாவின் கைபேசி.

நம்பர் நாட் இன் யூஸ்
என்று திரும்பத் திரும்பச் சொல்லும்
பெண் குரலைத்தாண்டி
அப்பாவிடம்
பேசிவிடும் ஆவலில்
அவ்வப்போது
அழைத்துக்கொண்டே இருக்கிறேன்.

உறவினர் புடை சூழ
உடன்வந்தோர் விடை வாங்க
அரிச்சந்திர காண்டம் பாடி
அப்பாவை அன்றொரு நாள்
சிதையில் வைத்தோம்.

அப்பாவை எரிக்கலாம்
அவர் குரலை
எப்படி எரிப்பது..?

 *நா.முத்துக்குமார்*

Thursday, 25 June 2020

படித்ததில் பிடித்தவை (“கிணறு இல்லாத ஊர்” – முகுந்த் நாகராஜ் கவிதை)


*கிணறு இல்லாத ஊர்*

கடைசியாய் ஒருமுறை சூடம் காட்டிவிட்டு,
வாடிப்போன எருக்கம்பூ மாலையை
கழற்றிவிட்டு,
களிமண் பிள்ளையாரைக் கிணற்றில் போட்டது
நேற்று மாதிரி இருக்கிறது.

நிறைய பிள்ளையார்களை விழுங்கிய என்
சின்னவயசின் பெரிய கிணறு
என் ஞாபகத்தில் மட்டும் இருக்கிறது.

ஃப்ளாட்டின் சின்ன அறையில்
கல்லுப் பிள்ளையாருக்குப் பூஜை செய்துவிட்டு
பக்கத்து ஃப்ளாட்காரர்களுடன்
கொழுக்கட்டை பரிமாறிக்கொள்வதும்
நன்றாகத்தான் இருக்கிறது
பிள்ளையார் படம் ஈமெயிலில் வந்ததும்
சந்தோசமாகத்தான் இருக்கிறது.

கிணறுதான் குறைகிறது.
அதை யாராவது அனுப்புகிறீர்களா
அட்டாச் பண்ணி..?

    *முகுந்த் நாகராஜ்*

Wednesday, 24 June 2020

படித்ததில் பிடித்தவை (“தற்கொலைக்கு தயாராகுபவன்” – முத்துவேல் கவிதை)



*தற்கொலைக்கு தயாராகுபவன்*

தற்கொலைக்கு தயாராகுபவன்
பித்து நிலையில்
என்னென்னவோ செய்கிறான்.

அவன் கையில்                     
குடும்ப புகைப்படமொன்று
கிடைக்கிறது.

அதிலிருந்து தனியே தன்னுருவை
பிரித்தெடுக்கும் முயற்சியில்
கத்தரிக்க துவங்குகிறான்.

எவ்வளவு நுட்பமாக செயல்பட்டும்
கைகோர்த்திருக்கிற
தங்கையின் சுண்டுவிரல் நுனி
கூடவே வருவேனென்கிறது..!

    *முத்துவேல்*

Tuesday, 23 June 2020

படித்ததில் பிடித்தவை (“அம்மாவின் கை” – யுகபாரதி கவிதை)


*அம்மாவின் கை*


ஊருக்குப் போய் திரும்பிய அம்மா
குழந்தைகளின் முகத்தைப் பார்க்கிறாள்

குழந்தைகள் கையைப் பார்க்கின்றன
தூக்கி  வளர்த்த கையை
சோறூட்டிய கையை
தலை வாரிவிட்ட கையை

தாலாட்டுக்கேற்பத் தட்டிய கையை
தகப்பன் அடிக்க வர
தடுக்க வந்த கையை
அம்மாவின் கை அப்படியேதானிருக்கிறது

குழந்தைகளின் கண்கள்தான்
மாறிவிடுகின்றன சமயத்திற்கேற்ப..!

    *யுகபாரதி*

Monday, 22 June 2020

படித்ததில் பிடித்தவை (“சந்திப்பு” – நா.முத்துக்குமார் கவிதை)


*சந்திப்பு*

பேருந்தில்
டீக்கடையில் என
பொருள்வாயிற் பிரிந்த
நண்பர்களின்
தற்செயல் சந்திப்புகளில்
கேட்கப்படும் முதல் கேள்வி:
காயத்ரி எங்க இருக்கா மாப்ளே?
என் பதில்:
பத்து வருடத்துக்கு முந்தைய
டென்த் ஏ கிளாஸ் ரூம்ல..!

    *நா.முத்துக்குமார்*

Sunday, 21 June 2020

*பார்வை ஒன்றே போதுமே*



காலை
வீட்டு மாடியில்
யோகாசனம்
செய்யும் போது
ஒழுங்கீனங்களை
சரியாக்கியும்,
அலைபாயும் மனதை
கட்டுப்படுத்தியும்
செய்யவைக்கிறது...

எதிர் வீட்டிலோ
அடுத்த வீட்டிலோ
நம்மை கவனிக்கும்
யாரோ ஒருவரின்
பார்வை..!”

       *கி.அற்புதராஜு*.

Saturday, 20 June 2020

படித்ததில் பிடித்தவை (“பூனை” – மகுடேசுவரன் கவிதை)


*பூனை*

வீதியில் சென்ற சிறுமி
சாலையைக் கடக்க முயன்ற
பூனையைப் பார்த்து நின்றாள்.
பூனையும் நின்றது
அவளைப் பார்த்து..!

யார் முதலில்
குறுக்கிட்டுக் கடப்பது என்ற
யோசனையில்
இருவரும் தயங்கி நின்றனர்.

பிறர்பொருட்டு
நாம் காட்டவேண்டிய
இத்தகைய சிறு அக்கறைகளைத்தாம்
நாம் என்றோ இழந்துவிட்டோம்..!

    *மகுடேசுவரன்*

Friday, 19 June 2020

படித்ததில் பிடித்தவை (“ஈரம்” – மனுஷ்யபுத்திரன் கவிதை)



*ஈரம்*

சிலர் வருவதும்
வந்துவிட்டு போவதும்
பெரும் மழை பெய்து
ஒய்ந்தது போலத்தான்
இருக்கிறது.

ஆனால்
எங்கும் ஒரு சொட்டு
ஈரமில்லாமல்..!

    *மனுஷ்யபுத்திரன்*