எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday, 30 November 2013

முத்தம்       
"சத்தமில்லாமல்
முத்தமிடுங்கள்
குழந்தைக்கு..!

பக்கத்து அறையில்
உங்க அப்பா, அம்மா..!"

       -    K. அற்புதராஜு

Friday, 29 November 2013

பின் தொடர்தல்...


 "சிக்னலுக்காக காக்கத் தொடங்கிய
 மின்சார ரயிலில் ஜன்னலோர
 இருக்கையில் நான்.

 ஒடிக்கொண்டிருந்த காட்சிகள் மாறி
 புல்வெளியில் நிலைத்தன கண்கள்.

 நிறைய வண்ணத்துப்பூச்சிகள்.
 அன்றைய தினம் எல்லாமே
 வெள்ளை நிறத்தில் இருந்தன.
 ஒன்றிரண்டு வேறு வண்ணங்களில்.

 ஒன்று

              மேலே...
              கீழே...
              பக்கவாட்டில்...      பறந்தும்

 மற்றொன்று

              பின் தொடர்ந்தது...

 இரண்டுக்கும்
 மோதலா?     காதலா?     காமமா?

 எப்படியோ...
 ஒன்றை மற்றொன்று
 பின் தொடர்வது இயல்புதானே!

 சலிக்காமல் ஒன்றை மற்றொன்று
 பின் தொடர்ந்தது...
 ரயில் கிளம்பும் வரை!"
                         -    K. அற்புதராஜு

Thursday, 28 November 2013

உதவி

                                                                                                         
   "எதிர் வீட்டிலோ...
 அடுத்த வீட்டிலோ...
 அழும் குழந்தைக்கு
 என்ன தேவையோ?

 உதவ முடிவதில்லை..!"

                     -  K. அற்புதராஜு


Wednesday, 27 November 2013

எச்சில்

                                                                                                 
 
       
"மின்சார ரயிலை
விட்டு இறங்கி நடக்கையில்...

பிளாட்பாரக் கூரையில்
அமர்ந்திருக்கும் காக்கை
எச்சமிடுமோ என பயந்து
நடப்பதை விட,

மனித எச்சிலை
மிதிக்காமல் நடப்பதே
பெரும்பாடாகிறது..!"

-         K. அற்புதராஜு  

Tuesday, 26 November 2013

கிராமத்து வீடு

                                                                                                             
"கிராமத்து ஓட்டு வீடு,
குளத்துடன் கொல்லை,
பயிர் செய்யும் நிலம்,
அனைத்தையும் விற்று,
வங்கியில் லோன் போட்டு
நகரத்தில் கட்டிய
புது வீட்டில்தான் இருக்கிறோம்...

கிராமத்து வீட்டில் கிடைத்த
மன நிறைவு இல்லாமலே!"


              -- K. அற்புதராஜு

Monday, 25 November 2013

விடுமுறை

                                                                                                     
"வார விடுமுறை
 என்றால் கூட
 பரவாயில்லை.

 இரண்டு, மூன்று
 நாட்கள் விடுமுறை
 வரும்போது
 வருத்தமாகத்தான்
 உள்ளது...

 ஆபீஸ் வெண்டிலேட்டரில்
 மதிய உணவுக்காக
 அணில் காத்திருக்குமென்று..!"


                -- K. அற்புதராஜு

Sunday, 24 November 2013

அழகு

                                                                                                   
"உறவினர் மகனுக்கு
திருமணம் செய்ய
பெண் தேடி
திருமண தகவல் மையம்
சென்றோம்...

ஒவ்வொரு ஃபைலிலும்
முப்பதை கடந்த
திருமணமாகாத
பெண்கள் நிறையபேர்
இருந்தார்கள்.

அழகில்லாதவர்கள்...
வேலையில்லாதவர்கள்...
செவ்வாய் தோஷங்கள்...
உறவுகளை பாதிக்கும்
நட்சத்திரங்கள்...
என நிறைய பெண்கள்
ஒதுக்கப்பட்டிருந்தார்கள்.

அவர்களில்...
அழகான பெண் ஒருவர்
செவ்வாய் தோஷத்தால்
முப்பது வயது தொட்டதை
அறிந்து மனது
சங்கடப்பட்டது...
அழகில்லாத பெண்கள்
நிறைய பேர் இருந்தும்..!"

            -- K. அற்புதராஜு

Saturday, 23 November 2013

பிச்சை

                                                                                             
 "கசப்பான                          
 அனுபவங்களால் 
 பிச்சைப்போடுவதை
 தவிர்த்தாலும்... 

 பிரயாணங்களில்...
 பிச்சைக்காரரிடம்
 கொடுக்கச்சொல்லி 
 பிறர் தரும் காசை 
 வாங்கிக்கொடுப்பதை 
 தவிர்க்க முடிவதில்லை...!" 

         -- K. அற்புதராஜு

Friday, 22 November 2013

கவர்ச்சி

                                                                                               
"ரயில் பயணத்தில்... 
குழந்தையுடன் தாய்.
மழலை பேசிய 
குழந்தையின் மீதே
அனைவரது பார்வையும்.

அடுத்த நிறுத்தத்தில் ஏறிய 
டீன் ஏஜ் ஜோடிகளின் 
சில்மிஷங்களால்....
குழந்தையின் மழலை 
கவனிப்பாரற்று போயிற்று, 
பெற்ற தாய் உட்பட 
அனைவராலும்...!"     

         -- K. அற்புதராஜு

Thursday, 21 November 2013

ஒற்றை பூமாலை

                                                                                                             
"மனைவியின் 
வேண்டுதலை 
நிறைவேற்ற 
ஞாயிறு மாலை 
கோவிலுக்கு 
பேருந்தில் செல்லும் முன் 
கோவில் அருகில் 
பூமாலை கிடைக்குமோ, 
கிடைக்காதோ என எண்ணி 
ஏறுகின்ற பேருந்து நிலையம் 
அருகிலிருந்த பூக்கடையில் 
ஒற்றை பூமாலையை 
விலைப் பேசி வாங்கி 
பேருந்தில் ஏறினோம். 


ஒற்றை பூமாலையைப் 
பார்த்த சகப் பிரயாணி 
சற்றே தள்ளி உட்கார்ந்தார். 


இறங்கும் பேருந்து நிலையம் 
அருகிலேயே கோவில் 
இருந்ததால், நாங்கள் 
கோவிலுக்குள் நுழைவதை 
அவர் பார்த்திருந்தால் 
திருப்தி அடைந்திருப்பாரோ 
என்னவோ..!" 
   
                        -         K. அற்புதராஜு  

Wednesday, 20 November 2013

வெங்காயம்


                      
 "வெங்காயம் நறுக்க 
 சொல்லும் போதெல்லாம்...
   மருமகள் மாமியாரை
   
அழ வைக்கிறார் !"


          -- K. அற்புதராஜு

Tuesday, 19 November 2013

இடைவெளி"வெளியூரில் உள்ள
கல்லூரியில்                                     
மகனை சேர்த்து 
ஹாஸ்டலில் 
விட்டு வந்த 
தாய், தந்தை... 


வீட்டுக்கு திரும்பியவுடன் 
நடந்தவற்றை தந்தை 
தன்னுடன் பணிபுரியும் 
அலுவலக நண்பருக்கு 
விலாவாரியாக 
விவரித்துக்கொண்டிருந்தார் 
தொலைபேசியில்... 


பேரனைப் பற்றிய 
உரையாடலை 
வராந்தாவிலிருந்த 
தாத்தாவும், பாட்டியும் 
கேட்டுக் கொண்டிருந்தனர்..!" 

                           --  K. அற்புதராஜு

Monday, 18 November 2013

மேய்ச்சல் நிலம்


                   'பயணங்களில்... 
ஜேம்ஸ் ஹேட்‌லீ சேஸோ, 
சுஜாதாவோ...
 
யாருடைய நாவலை படித்தாலும்,
ஆவலுடன் மேய்கிறோம்... 
பக்கத்து இருக்கையில் இருப்பவர் 
படிக்கும் தினசரியை..!'
 

                                           -- K. அற்புதராஜு

Sunday, 17 November 2013

மஞ்சள் பை


"கிராமங்களில் 
உறவினர்களிடையே 
பண்ட பரிமாற்றம் 
தினமும் நடைப்பெறும். 
எல்லாமே மஞ்சள் பையில்தான்! 

தேங்காய், மாங்காய், 
வத்தல், வடாம், 
காய்கள்... 
என சகலமும். 

வீட்டில் உள்ள சின்ன 
பிள்ளைகள்தான் 
எடுத்து செல்வார்கள். 

'
மறக்காமல் பையை 
வாங்கி வந்து விடு' 
என சொல்லித்தான் 
அனுப்புவார்கள். 

சமயங்களில் 
அதே பையில் 
வேறு பண்டங்கள் 
அவர்கள் வீட்டிலிருந்து 
வந்து சேரும். 

பொருளின் மதிப்பு
 
அதிகம்தான் என்றாலும்
 
பை திரும்பவில்லையெனில்
 
மன வருத்தம்தான்..!"
 

                               --  K. அற்புதராஜு