எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 31 October 2015

இளமை ஊசலாடுகிறது...



“வயதான எனக்கு
காது மந்தமானதும்
கண்ணுக்கு கண்ணாடி
துணையானதும்
வருத்தமாயிருந்தாலும்...

காதில் ஹெட்போனுடன்
கைப்பேசியைப்
பார்த்துக்கொண்டே
எனக்கு எதிரே
நடந்து வரும் இளைஞன்
என்மீது மோதி விடாமல்
விலகி நடந்தேன்..!”

        -   K. அற்புதராஜு.

Saturday 24 October 2015

படித்ததில் பிடித்தவை (சர்க்கரை கவிதைகள்)


சர்க்கரை
“சர்க்கரை இல்லை என்று
டாக்டர் சொல்லும்போது
சந்தோசமாகவும்...

ரேஷன் கடைக்காரர்
சொல்லும்போது
கஷ்டமாகவும் இருக்கிறது..!”


சர்க்கரை இல்லை...
கொழுப்பு இல்லை...
எஜமானரோடு
வாக்கிங்
போகுது

ஜிம்மி...!”

Wednesday 21 October 2015

படித்ததில் பிடித்தவை (சாயல் – கல்யாண்ஜி கவிதை)


சாயல்
“இந்த வருடமும்
சரஸ்வதி பூஜைக்கு
அம்மன் முகம் செய்தேன்.

முன்பு
தங்கச்சி சாயலில்
முகம் இருக்கும்.

இடையில்
இவள் சாயலில்
இருக்கிறது என்பார்கள்.

இந்த முறை
உறவின் அடையாளங்களிலிருந்து
கழன்ற ஒரு முகத்துடன்
சரஸ்வதி உருவம்
சிரித்தது.

அ – சாயலை அடைவதற்கு
ஆகிவிட்டது
இத்தனை காலம்..!” 

                                          -  கல்யாண்ஜி.

Saturday 17 October 2015

மனசுக்குள் மத்தாப்பூ...


“மின்சார ரயிலில்
அதுவரை புத்தகம்
படித்துக்கொண்டிருந்த
நான்...

அக்கம்பக்கம்
பார்த்தப்போதுதான்
கவனித்தேன்...

அந்த கைக்குழந்தை
அப்பாவின் தோளில்
சாய்ந்தப்படி
வைத்தக்கண் வாங்காமல்
என்னையேப் பார்த்துக்
கொண்டிருந்தது
ஒரு சிறியப்புன்னகையுடன்...

என்னால் புத்தகத்துக்குள்
திரும்பவே முடியவில்லை...

அடுத்த நிறுத்தத்தில்
அம்மா அப்பாவோடு
அந்தக்குழந்தை
இறங்கியப் பிறகும்
மனது முழுவதும்
நிறைந்திருந்தது
அந்த குழந்தையின்
சிரித்த முகம்.

மீண்டும் புத்தகத்தை
படிக்க ஆரம்பித்தப்போது...
ஒவ்வொரு எழுத்தும்
குழந்தையின் முகமாக மாறி
ஒரு பெரிய குழந்தையாக
உருமாறியது...

மிகவும் மெதுவாக
புத்தகத்தின் பக்கத்திலிருந்து
குழந்தையை தூக்கி
மடியில் வைத்துக்கொண்டேன்.

புத்தகம் மடியில் தூங்கியது..!”

           -     K. அற்புதராஜு.

Wednesday 14 October 2015

படித்ததில் பிடித்தவை (இந்தக் காலம் நன்றாக இல்லை…- கவிஞர் மகுடேசுவரன் கவிதை)


இந்தக் காலம் நன்றாக இல்லை…

“மாலை நாளிதழ்களை
யாரும் படிப்பதில்லை.

பேருந்துகளில் எப்போதும்
உட்கார இடமில்லை.

மிதிவண்டி வைத்திருந்தால்
பஞ்சர் ஒட்ட ஆளில்லை.

எம்ஜிஆர் படங்களை
அரங்கில் பார்க்க முடியாது.

கலைஞர் பேசும் கூட்டங்கள்
குறைந்துவிட்டன.

படம்பார்க்க வந்த பெண்டிர் கூட்டம்
என்ன ஆனதென்றே தெரியவில்லை.

முதல் மரியாதையை
இன்று வெளியிட்டால்
முதல் மூன்று நாள்தான் மரியாதை.

தொலைக்காட்சித் தொடர் பாதிப்பால்
பெண்டாட்டிகள் சண்டைக்கு வருகிறார்கள்.

சிறு பத்திரிகைகள்
வருவதாய்த் தெரியவில்லை.

முதலமைச்சர் எழுதுவதால்தான்
கடிதம் என்ற ஒன்று
இருப்பதே தெரிகிறது.

இலக்கிய வித்தாரங்களை
எல்லாரும் பேசுகிறார்கள்.

திருவிழாவுக்குப் பாட்டு வைத்தால்
கேட்பதை விடுத்துக் கடுப்பாகிறார்கள்.

அரிசி மண்ணில் விளைவதைப்
பிள்ளைகள் அறியாதிருக்கிறார்கள்.

நல்ல மழை பார்த்து
நாளாயிற்று.

குடி மக்களைக்
குடியுங்கள் மக்களேஎன்னும்
அரச நிலைப்பாட்டை மாற்ற முடியவில்லை.

கல்விக் கூடங்களில்
சாலைப் பயணங்களில்
வண்டி நிறுத்தங்களில்
பன்மாடக் கொட்டகைகளில்
எங்கும் எங்கும் கட்டணக் கொள்ளை.
கட்டுப்பாடில்லை... கணக்கு வழக்கில்லை.

ஆசிரியர் பயிற்சிக்கு
ஆள் சேர்வதில்லை.

தமிழ் படிப்போர்
தமிழறிந்தோர்
தட்டுப்படவில்லை.

வாகனப் பெருக்கம்
சாலைகளைத் தின்றுவிட்டன.

பதிப்பகத்தார் பஞ்சப்பாட்டு
இன்னும் ஓயவில்லை.

பொறியாளர்க்கு எட்டாயிரமாம்
புரோட்டா பிசைய பதினெட்டாயிரமாம்.

தோனி அடிக்கடி வென்று
கிரிக்கெட்டை மறக்கடித்துவிட்டார்.

எல்லாப் பெண்களும்
எக்கச்சக்கமாகப் படித்திருக்கிறார்கள்.
எப்படிப் பெண் கேட்பதென்றே
தெரியவில்லை.

வெஸ்ட் இண்டீசா
அப்படியென்றால் என்ன என்று
பாப்பா கேட்கிறாள்.

காய்கறி வாங்குவதற்குக்
கட்டுப் பணத்தை
உடைக்க வேண்டியிருக்கிறது.

முடிவெட்டும் கட்டணத்தைவிட
பக்கத்தூர் முருகனுக்கு
முடியிறக்கிவிட்டு வருவது
செலவு குறைவு.

ஆளில்லாத கண்ணாடி அறை
குழல் விளக்கொளி
குளிர்பதன வசதி
அதற்குக் குருதியும் சதையுமாய்
மனிதக் காவல்
தானியங்கு பணமெடுப்பு நிலையங்களாம்.

நகர் மையத்திலிருந்து
நகர மைந்தன் வெளியேற்றப்பட்டவாறே
இருக்கிறான்.

கடைத்தெருக் கடைகளில்
யார்க்கும் தேவையில்லாதது
எப்போதும் விற்கிறது.

யார்யாரோ நாயகர்கள்.
எல்லாரும் இயக்குநர்கள்.

காக்கைக்கு முன்பெழுந்து
ஓடுவோர் தொகை பெருகிவிட்டது.

பல்குச்சியைத் தவிர
எல்லாமே செல்பேசியில் இருக்கிறதாம்.

ஐபோனாம் அறுபதாயிரமாம்
நமக்குப் பால் சுரந்தூட்டிய பசுவினம்
அழிந்துகொண்டிருப்பதை
யாரிடம் சொல்வதென்று தெரியவில்லை.

உண்மையாகவே
இந்தக் காலம் நன்றாக இல்லை..!


- கவிஞர் மகுடேசுவரன்.