எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 29 July 2023

படித்ததில் பிடித்தவை (“கடைசி ராப்போஜனம்” – வண்ணதாசன் கவிதை)

 


*கடைசி ராப்போஜனம்*

 

கிறுக்குத் தனமாக,

இன்றைய இரவுச் சாப்பாடுதான்

என் கடைசி ராப்போஜனம்என்று

நினைத்துக் கொண்டேன்.

 

மெஸ்ஸிலிருந்து

சாப்பாடு விநியோகிப்பவரிடம்

இன்று அதிகம்

பேச வேண்டும் என்று ஆசை.

 

அவரிடம் சொல்ல

ஒரு ஸென் கதையைத்

துடைத்து வைத்தேன்.

 

ஆட்டோ பழுதினால்

அவர் மிகப் பிந்தி வந்தார்.

நான் தூக்குச் சட்டியை 

வாங்கின கையோடு கேட்டேன்,

நாளை காலையில் பூரி கிழங்கு தானே..?!

 


*
வண்ணதாசன்*



Saturday 22 July 2023

படித்ததில் பிடித்தவை (“சிறுவனும்... முதியவரும்...” – ஷெல் சில்வர்ஸ்டீன் கவிதை)

 


*சிறுவனும்... முதியவரும்...*

 

அந்தச் சின்னப் பையன் சொன்னான்

சில சமயம் நான் கரண்டிகளை

கீழே போட்டு விடுகிறேன்.’

முதியவர் சொன்னார்

நானும் அப்படிச் செய்வது உண்டு.’

 

சின்னப் பையன் கிசுகிசுத்தான்

நான் கால்சட்டையை ஈரமாக்கிவிடுகிறேன்.’

நானும் அப்படிச் செய்துவிடுவதுண்டு

சிரித்தார் அந்த முதியவர்.

 

சிறுவன் சொன்னான்,

நான் அடிக்கடி அழுகிறேன்

முதியவர் தலையசைத்தார்,

நானும்தான்.’

 

எல்லாவற்றையும் விட மோசமாக –

பையன் சொன்னான் - வளர்ந்தவர்கள்

என்னைக் கவனிப்பதாகவே தெரியவில்லை.’

அவன் இப்போது ஒரு சுருக்கம் விழுந்த

வயதான கையின் வெதுவெதுப்பை

உணர்ந்தான்

 

நீ சொல்கிறது என்னவென்று எனக்குத் தெரியும்

அந்த முதியவர் சொன்னார்..!”

 

*The Little Boy and the Old Man by Shel Silverstein*

(தமிழில்: வண்ணதாசன்)



Friday 14 July 2023

*பசியின் தூரம்*

 


ரயில் நிலைய

நடைப்பாதையோரம்

'அம்மா பசிக்குது...' என

பிச்சை கேட்பவருக்கும்...

 

ரயிலைப் பிடிக்க

அடுத்த வேளைக்கான

சாப்பாட்டு பையுடன்

வேலைக்கு செல்பவர்களுக்கும்

இடைவெளி சிறு தூரம்தான்..!

 


*கி. அற்புதராஜு*

Monday 10 July 2023

*இனிமைகள் நிறைந்த உலகம்*


வேலைக்காக...

காலையில் கிளம்பி

இரு சக்கர வாகனத்தில்

ரயில் நிலையம் செல்லும்போது

வீசிய சிறிய காற்றுக்கு

புங்கை மரத்து பூக்கள்

என் மீது விழுந்தன...

 

ரயில் நிலையத்தில்

மேம்பாலம் வழியாக

தண்டவாளத்தை கடக்கும் போது

அம்மா தூக்கி வரும் குழந்தை

வைத்த கண் வாங்காமல்

என்னைப் பார்த்து சிரித்தது...

 

ன்றைய பொழுதை

இனிமையாக்க

இதை விட

வேறு என்ன வேண்டும்..?

 


*
கி.அற்புதராஜு*

Saturday 8 July 2023

படித்ததில் பிடித்தவை (“மெளத் ஆர்கன் வாசிக்கும் பெரியவர்” – ராஜா சந்திரசேகர் கவிதை)


*மெளத் ஆர்கன் வாசிக்கும் பெரியவர்*

 

கைகள் நடுங்க

மெளத் ஆர்கன் வாசித்துக்கொண்டிருந்த

முதியவரின் அருகில் போய்

அமர்ந்தேன்.

 

இலைகள்

மிதந்து மிதந்து

அவர் இசை

கேட்டபடி

அருகில் வந்து விழுந்தன.

 

மெளத் ஆர்கன்

ஒரு சிறு வாக்கியம் போல்

முன்பின் போய் வந்தது.

 

தியானம் போல்

அவர் முடித்து

மெல்ல கண் மூடியபோது

சொன்னேன்...

 

உங்கள் இசை

இளமையாக இருக்கிறது.

 

கண் திறந்து

புன்னகைத்துச்

சொன்னார்...

 

முதுமை இளமை

இசைக்குக் கிடையாது.

பிரித்துப்பார்ப்பதெல்லாம்

நாம்தான்..!”

 

*ராஜா சந்திரசேகர்*



Wednesday 5 July 2023

படித்ததில் பிடித்தவை (“மகிழ்ச்சி” – மகுடேசுவரன் கவிதை)

 

*மகிழ்ச்சி*

 

மகிழ்ச்சி என்பது

பூக்களுக்கிடையில் ஆடும்

இலையின் உணர்வு..!

 

*மகுடேசுவரன்*



Sunday 2 July 2023

படித்ததில் பிடித்தவை (“பந்து” – ராஜா சந்திரசேகர் கவிதை)

 


*பந்து*

 

அநாதையான பந்து

பேருந்துக்குள்

உருண்டோடுகிறது.

 

பெரியவர் காலடியைத் 

தொடுகிறது.

 

அந்த மஞ்சள் நிறப் பந்தை 

எடுத்து 

வேட்டியால் துடைத்து

பின்னால் அமர்ந்திருக்கும்

குழந்தையிடம் தருகிறார்.

 

வாங்கிக்கொண்டு

அழுகையை நிறுத்துகிறது.

 

பிறகு வேகமாக எறிகிறது.

 

ஜன்னல்தாண்டி பந்து

வெளியே போய்விடுகிறது.

 

பேருந்து ஒரு வளைவில்

திரும்பி மறைகிறது.

 

சாலை விளிம்பில்

ஆடு மேய்க்கும் சிறுமியிடம்

கிடைக்கிறது பந்து.

 

பந்தை முத்தமிட்டுத்

தூக்கிப்போட்டு

விளையாடுகிறாள்.

 

அவள் சிரிப்பில்

புற்கள் அசைகின்றன.

ஆடுகள் திரும்புகின்றன.

 

வானிலிருந்து

சொர்க்கம் வருவதுபோல்

அவள் கைக்குத் திரும்புகிறது 

பந்து.

 

இந்தக் காட்சி

சூரிய ஒளியில்

திரைச்சீலையில்

அசைந்தாடும்

சித்திரம்போல் தெரிகிறது..!”

 

*ராஜா சந்திரசேகர்*